கோடை நாடக விழா 2026: வீரா

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஒன்பதாவது நாடகம்: கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வழங்கிய 'வீரா'. வசனம்: ரத்னம் கூத்தபிரான். கதை மற்றும் இயக்கம்: விக்னேஷ்.


திரைப்பட இயக்குனர் ஆவதென்பது வீரா என்கிற வீராசாமியின் லட்சியம். தாய்மீது பேரன்பு கொண்டவன். எதிர்பாராத நிகழ்வொன்று அவனது வாழ்வை புரட்டிப்போடுகிறது. அதிலிருந்து மீண்டானா இல்லையா என்பதே கதை.

கதையின் நாயகன் வீராவாக விக்னேஷ், பல்லவியாக ஸ்வாதி, லலிதாவாக வந்த சிறுமி சுபா என நடிப்பில் யாரும் சொதப்பவில்லை.

மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்தது.. வெற்றிக்காற்றை சுவாசிக்க முயல்வதே வெற்றிக்கு  எனும் கதையை தேர்வு செய்துள்ள விக்னேஷின் எண்ணம் பாராட்டத்தக்கது. 

இதற்கேற்ற வசனங்களையும்.. பெருமளவு இயல்பாக  எழுதியுள்ளார் ரத்னம் கூத்தபிரான்.

ஒரு சிறந்த பின்னணி இசையென்பது கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், காட்சி நடைபெறும் களம் மற்றும் சூழலையும் துல்லியமாக நமக்கு கடத்துவதாகும்.

அவ்வகையில் ஒவ்வொரு காட்சியிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர்  விஸ்வஜெய். அன்பு, பதட்டம், குழப்பம், கோபம் என மாறி மாறி வரும் காட்சிகளை நேர்த்தியாக உள்வாங்கி.. அதற்கேற்ற இசையை தந்துள்ளார். 

இந்நாடகம் விஸ்வஜெய்யின் விஸ்வரூபம் என்பதில் சந்தேகமில்லை.

மயிலை பாபுவின் ஒளியமைப்பும் சிறப்பு.

நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்து.. நம்பிக்கையுடன் ஊட்டியில் இருந்து கிளம்புகிறான் வீரா. அத்துடன் முடித்திருந்தால் ஓரளவு நல்ல ஃபீல் குட் நாடகத்தை பார்த்த திருப்தியாவது இருந்திருக்கும்.

அதன்பிறகு... வீரா.. விருது வாங்குவது, பல்லவியின் அடுத்த பயணம் என நீட்டி முழக்கியது இழுவை.

சினிமாவில் எப்படி நாடகத்தனம் இருக்கக்கூடாதோ.. அதுபோல நாடகத்தில் சினிமாத்தனமும் தேவையற்றது.

ஆரம்பத்தில் நாடகம், பிறகு குறும்படம், இறுதியில் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு தந்து குழப்பியடித்துள்ளார் விக்னேஷ். 

நல்லபடியாக..முக்கால் கிணறு தாண்டிவிட்டு.. இறுதியில் சம்மர் சால்ட் அடித்து.. கிணற்றில் விழுந்து விட்டது விக்னேஷின் இயக்கம்.

வீரா - எதிர்பார்த்தது நாடகம். பார்த்தது திரைப்படம்.

---------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


கோடை நாடக விழா 2026: மழையில் ஓர் இரவு

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் எட்டாவது நாடகம்: தியேட்ரிக்ஸ் ஸ்டேஜ் க்ராஃப்டர்ஸ் வழங்கிய 'மழையில் ஓர் இரவு'. எழுத்து: எஸ்.கௌரிசங்கர். இயக்கம்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்.


அனுப்புநர்:
சிவகுமார்
நாடக ரசிகர்
நாரத கான சபா கிளை
சென்னை.

பெறுநர்:
எஸ்.கௌரிசங்கர்
கதாசிரியர்
'மழையில் ஓர் இரவு' நாடகம்.

ஐயா வணக்கம்,

இந்நாடக கதாபாத்திரங்களின் பெயர்கள் அக்னி, அனுபவ், அகல்யா, அங்கமுத்து என 'அ'விலேயே தொடங்குகின்றன. இதில் வரும் சில ஊர் பெயர்களின் ஆரம்ப எழுத்தும் 'அ' தான்.

இதுபோன்ற அட்டகாசமான புதுமைகளை... தஞ்சாவூர் கல்வெட்டுகளில் எழுதி வைத்து.. அதற்கு காப்புரிமையையும் மறக்காமல் வாங்கி விடவும். 

1970 களின் இறுதியில் எழுதிய இக்கதையை.. பல்லாண்டுகள் பொக்கிஷம் போல் பாதுகாத்து...இன்று மேடையேற்றிய உங்களுக்கு 'நாடக கலா பொக்கிஷா' விருதினை தருவதே.. சரியான கௌரவம். 

----------------

பெறுநர்:
ஆனந்த் ஸ்ரீனிவாசன் 
நடிகர் மற்றும் இயக்குனர்.
மழையில் ஓர் இரவு நாடகம்.

ஐயா வணக்கம்,

'நவராத்திரி' படத்தில் மிலிட்டரியாக வரும் சிவாஜி.. கம்பீரமாக சிரிக்கிறேன் பேர்வழி என்று ராட்சத மோட்டாரை ஆன் செய்துவிட்டதுபோல சிரித்து நம்மை பீதியில் ஆழ்த்துவாரே.. அதெல்லாம் உங்கள் சிரிப்புக்கு முன்பு எம்மாத்திரம்?

இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் நீங்கள் நகைத்தே.. நாடக ரசிகர்களுக்கு இடுக்கணை தரும் வித்தையை எங்கு கற்றீர்கள் என ஆச்சர்யத்தில் மூழ்கி களைக்கிறேன்.

நாடகத்தின் இறுதித்தருணங்களில் புது கெட்டப்பில் வந்த நீங்கள்.. உங்கள் தவடையை பெரிய சைஸ் வண்டு கடித்துக்கொண்டு இருந்தபோதும்.. அந்த கடும் வலியையும் பொறுத்துக்கொண்டு.. டெடிகேஷனோடு வசனங்களை உச்சரித்த விதம் இருக்கிறதே..

....அது  பரசுராமன் களைப்பாற.. தன் தொடையில் வண்டு கடித்தும்.. பொறுமை காத்த கர்ணனையும் மிஞ்சி விட்டது ஐயா.

நான் கூட..முதலில் அது ஒரு french beard getup என தவறாக எண்ணி விட்டேன். மன்னிக்கவும். 

நாடக உலகில் ஆஸ்கார் விருதை அறிவித்தால்.. அதில் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளை உங்களைத்தவிர யாராலும் வெல்ல முடியாது. 

இந்நாடகத்தை நீங்கள் மீண்டும் அரங்கேற்றினால்.. அந்த சபாவை சுற்றியுள்ள கடைகளில் தக்காளி மற்றும் முட்டை விற்பனை கொடிகட்டி பறக்கப்போவது திண்ணம்.

இப்படிக்கு,
சிவகுமார்.
'நாடக ஆஸ்கார் நாயகன்'
ஆனந்த் ஸ்ரீனிவாசன் தலைமை ரசிகர் மன்றம்.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர்புரம்.
தென்சென்னை.

மழையில் ஓர் இரவு - கோடை நாடக விழாவில் ஓர் கொலைக்குத்து.

------------------------

விமர்சனம்:
சிவகுமார்.

கோடை நாடக விழா 2026: யாகாவாராயினும்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஏழாம் நாடகம்: ப்ரசித்தி க்ரியேஷன்ஸ் வழங்கிய 'யாகாவாராயினும்'. எழுத்து: அம்பி ராகவன். இயக்கம்: அம்பி ராகவன் & கிரிஷ் வெங்கட்.


ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்.. தன் சாதி சார்ந்த இளைஞர்களை எப்படி தவறாக பயன்படுத்துகிறார் என்பதை தங்கள் கற்பனையில் நாடகமாக்கி உள்ளனர் அம்பி ராகவனும், கிரிஷ் வெங்கட்டும்.

தொல்.திருமாவளவனின் பெயர்... இப்படைப்பில் செல் அரிமா நம்பியென குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் அம்பி ராகவனும், வீர் சுந்தராக கிரிஷ் வெங்கட், இளம் வயது வீர சுந்தராக ஆகாஷ் ஆகியோரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

ஆனந்த் ஸ்ரீனிவாசனை முதன் முறையாக ஓரளவேனும் பொருத்தமான கேரக்டரில் நடிக்க வைத்த பெருமை  இந்நாடக இயக்குனர்களுக்கு உண்டு. 

இந்த அதிசயத்தை நிகழ்த்தியதற்கு...

வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.
வாழ்த்துகள்.

மொத்த நாடகத்தின் ஆணிவேராக இருப்பது கலைவாணர் கிச்சாவின் ஒளியமைப்பு மற்றும்  விஸ்வஜெய்யின் பின்னணி இசை. 

ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு Skin clothing எனப்படும் ஒப்பனை யுக்தி மூலம் சிறப்பாக ஒப்பனை செய்துள்ளார் பெரம்பூர் குமார்.

தன்னை சந்திக்க வரும் பிரபல தொழிலதிபர் வீர் சுந்தர்.. தன்னிடம் ஆணவமாக பேசிய ஒற்றை காரணத்திற்காக அவரை கொல்லும் அளவிற்கு வெறியாகிறார் அரசியல்வாதி அரிமா தம்பி. கொலை செய்ய இப்படி ஒரு அற்பமான காரணமா? 

'உங்களை ஏன் நீங்களே ஒடுக்கப்பட்டவர்களாக நினைக்கிறீர்கள்?' என ஒரு காட்சியில் கேள்வி எழுப்பப்படுகிறது. அதாவது வேறு யாரும் தலித் மக்களை ஒடுக்கவில்லையாம். அந்த மக்களே தங்களை அப்படி எண்ணிக்கொள்கிறார்களாம். ஆஹா.. வசனகர்த்தா அம்பி ராகவனின் அருமையான உருட்டு!!

தலித் சமுதாய தலைவரால்தான்.. அந்த இளைஞர்கள் ரவுடிகளாக ஆகிவிடுகிறார்களாம். அவர்களை படிக்க விடாமல் செய்வதும் அந்த தலைவர்தானாம்.

100 ஆண்டுகளுக்கு முன்பு.. மருத்துவ கல்லூரியில் சேர சமஸ்கிருத மொழி தெரிந்திருக்க வேண்டுமென்பதை கட்டாயமாக்கி.. குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டுமே மருத்துவம் படிக்க வழி வகுத்தது யார்? 

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்க அடிப்படை காரணமென்ன? பனகல் ராஜா, தியாகராயர், அயோத்திதாச பண்டிதர், டி.எம். நாயர், டாக்டர் நடேசன் ஆகியோர் எதற்காக போராடினார்கள் என்பதை இரு இயக்குனர்களும் அறிந்திருக்கவில்லையோ?

திருமாவளவன் தன் சாதி இளைஞர்களை படிக்க விடாமல்.. அடியாட்களாக வைத்திருக்கிறார் என்றால்..

பாபர் மசூதியை இடித்தவர்கள் யாருடைய அடியாட்கள்?
வடமாநிலங்களில் இஸ்லாமியர்களை அடித்து உதைத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட வைத்தவர்களை வளர்த்து விடுவது எந்த கட்சி?

கிறிஸ்துமஸ் நாளில்... சான்டா க்ளாஸ் உடையணிந்தோரை அடித்து, கிறிஸ்துமஸ் விற்பனை கடைகளை நொறுக்கிய பொறுக்கிகள் எந்த தலைவரால் ஏவப்பட்டார்கள்?

இதற்கு மட்டும் படிக்காத தற்குறிகள்  தேவைப்படவில்லையா? 

இதெல்லாம் அம்பி ராகவன் மற்றும் கிரிஷ் வெங்கட் எனும் படைப்பாளிகளுக்கு நிச்சயம் தெரியும். ஆனால் அதை மேடையில் சொல்ல இவர்களுக்கு தைரியம் இருக்காது. எந்த காலத்திலும் இருக்காது.

தன் கட்சியின் போராட்டம் வெற்றிபெற.. மைனர் வயதுடைய இளைஞர்களை தூண்டி விடுகிறார் அரிமா நம்பி. போராட்டத்தை வெற்றிபெற வைக்க மைனர் இளைஞர்கள் எதற்கு?

நம் நாட்டில்.. இளம் தலைமுறையினரில் ஒரு சாரார் படித்து முன்னேறாமல்.. க்ரிமினல்கள் மற்றும் அடியாட்களாக மாறுவதற்கு முக்கிய காரணம் தலித் தலைவர் மட்டும்தான் என மொத்த பழியையும் தூக்கி அவர்மீது போட்டுவிட்டார் வசனகர்த்தா அம்பி ராகவன்.

கேக்கறவன் கேனையா இருந்தா அக்வா ஃபீனா வாட்டர் பாட்டிலில் நெய் வடியுமாம்.

யாகாவாராயினும் - பாவம் செய்தவன் ஒருவன். பழியை சுமப்பது வேறொருவன்.

----------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


கோடை நாடக விழா 2026: கல்லபிராமம்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஆறாவது நாடகம்: PMG வழங்கிய கல்லபிராமம். எழுத்து, இயக்கம்: முத்துக்குமரன்.


ராணுவ வீரர்கள் நாட்டுக்காக என்ன தியாகம் செய்கிறார்கள் எனும் ஒற்றை வரிதான் கதை.

விநாயகமாக முத்துக்குமரன் மற்றும் கண்ணம்மாவாக ராதிகா ரவீந்திரன் பேசும் சில வசனங்கள் ஓரளவு சிரிக்க வைக்கின்றன. மேஜர் ஜஸ்வந்தாக சாய்ப்ரசாத் வசனங்களை தெளிவாக பேசியிருக்கிறார்.

அந்த காலத்தில் தேசியக்கொடி ஏற்றியவர்கள் ஜெயிலுக்கு போனார்கள். இப்போது ஜெயிலுக்கு போனவர்கள் கொடியேற்றுகிறார்கள், தேர்தல் சமயத்தில் எல்லா வீடும் 'ஓட்டு' வீடுதான் போன்ற சில வசனங்களில் முத்திரை பதிக்கிறார் முத்துக்குமரன்.

கோவில் பூசாரியாக ஆனந்த் ஸ்ரீனிவாசன். இவர் நடிக்கும் மற்ற நாடகங்களை போல.. இதிலும் மிக மிகச்சுமாராக நடித்துள்ளார். கதாபாத்திரமாக நம்பவைக்கும் அளவிற்கு இவர் நடிக்கவுள்ள முதல் நாடகத்தை காண.. இன்னும் எத்தனை ஆண்டுகள் நாம் காத்திருக்க வேண்டுமென தெரியவில்லை.

வசனம் பேசிவிட்டு இறுதியில் ஹா ஹா ஹாவென சன்னமாக ஒரு சிரிப்பு சிரிப்பதை தனது ட்ரேட் மார்க் என அவரே நம்புகிறார். அட ராமா!!

குகப்ரசாத்தின் இசை மற்றும் மயிலை பாபுவின் ஒளியமைப்பிற்கு போதுமான வேலை தரவில்லை.

ராணுவ வீரர் என்பதால் வீட்டில் இருக்கும்போது கூட எந்நேரமும் ராணுவ பேன்ட் அணிந்து கொண்டிருக்கிறார் சாய்ப்ரசாத். அரதப்பழசான சிந்தனை சாமியோவ்.

தேசப்பற்றுள்ள பெண் அகிலாவாக அனு சுரேஷ். ஏதோ ஓரிரு முறை தேசபக்தி மற்றும் ராணுவ வீரர்கள் பற்றி பேசினால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும் இதையே பேசி அறுக்கிறார்.

நாடகம் ஆரம்பித்து 45 நிமிடம் வரை இப்படியே ஆளாளுக்கு பேசுவதால்.. treadmill இல் நின்றபடி ஓடுவது போல.. ஒரே இடத்தில் நிற்கிறது கதை. 

சுதேசி மாப்பிள்ளையை மட்டுமே மணமுடிப்பேன் என்கிறார் அகிலா (அனு சுரேஷ்). ஏன்.. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்களுக்கு தேசபக்தி இருக்காதா?

விநாயகம் (முத்துக்குமரன்) மகன் குமரனாக அனந்த்...  நடிப்பில் நிறைய முன்னேற்றம் தேவை. மனப்பாடம் செய்து ஒப்புவித்தால் மட்டும் போதாது. 

கோவை குண்டுவெடிப்பு நாளான பிப்ரவரி 14.. ஒரு கருப்பு தினம் என வசனம் எழுதியுள்ள முத்துக்குமரன்.. டிசம்பர் 6 ஆம் தேதி குறித்து வாய் திறக்கவில்லை. அதை சொல்ல அவருக்கு துணிச்சல் இல்லை.

ராணுவ வீரர்களின் தியாகம் குறித்து பலரும் அறியாத தகவல்களை இந்நாடகத்தில் தந்திருப்பது பாராட்டத்தக்கது.

ஆனால் இந்த மொத்த படைப்பும்.. ராணுவம் குறித்த தகவல்களை தொகுத்து வழங்கும் மேடை நிகழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது. Where is the drama... மிஸ்டர் முத்துக்குமரன்? 

ராணுவ வீரர்கள்.... அனைவராலும் போற்றப்பட வேண்டியவர்கள். உயிரை பணயம் வைத்து காவல் காப்பவர்கள். சந்தேகமில்லை.

அதேபோல மருத்துவர்கள், சாக்கடை அள்ளும்  தொழிலாளிகள் என மற்ற துறையை சார்ந்தோரும் போற்றப்பட வேண்டியவர்களே.

ஆகவே எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களை எல்லைமீறி புனிதப்படுத்துவதை (romanticize செய்வதை) அந்த வீரர்களே விரும்ப மாட்டார்கள்.

வீட்டில் அமர்ந்து கொண்டு தேசபக்தி மற்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தை பேசி புளகாங்கிதம் அடைபவர்கள்.. வெறும் பேச்சோடு நிற்காமல்..

..... தங்கள் வீட்டில் இருந்து ஒருவரை ராணுவத்தில் சேர்ப்பதே உண்மையான தேசபக்தி. முடியாவிட்டால்.. ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வேலையிலாவது சேருங்கள். அதுவும் உயிர் காக்கும் உன்னத வேலைதான்.

கல்லபிராமம் - தீபாவளி துப்பாக்கி 

----------------------

விமர்சனம்:
சிவகுமார்.

கோடை நாடக விழா 2026: கந்தன் கருணை

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் ஐந்தாவது நாடகம்: நாட்டிய நாத நாடக சங்கமம் வழங்கிய 'கந்தன் கருணை'. எழுத்து: எஸ்.தியாகு. இயக்கம்: ஸ்ருதி.

முருகன் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் ஸ்ரீநிவாச ஐயரின் மகன் ராமு. ஆசிரியராக இருக்கும் சுப்ரமணிய பிள்ளையின் மகள் சரிதா. இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. அதனால் இரு வீட்டாருக்கும் நடக்கும் பிரச்னைகள் என்ன? அது எங்கு போய் முடிகிறது என்பதே கதை.

ஸ்ரீநிவாச ஐயராக தனது பழுத்த நாடக அனுபவத்தின் மூலம் நெடிய வசனங்களை அழகுற பேசி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சிவப்ரசாத்.

கோபம், அழுகையென கூடுமானவரை நடித்துள்ளார் ஸ்ருதி.

தண்ணீர் கேன் போடும் நபராக வரும் பழனியின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது. ஆனால் பல காட்சிகளில் தன்னருகே இருக்கும் நடிகர்களை பார்த்து பேசுவதை விட... நாடகம் பார்ப்போரை பார்த்தபடி வசனம் பேசுவது மிக செயற்கையாக உள்ளது. பல நாடகங்களிலும் இதே பாணியை பின்பற்றி வருவது அலுப்பு.

இயல்பாக நடித்தால் தானாக கைத்தட்டல் விழும். கைத்தட்டல் வாங்குவதை மட்டுமே குறிக்கோளாக வைத்தால்.. கதாபாத்திரம் அடிபட்டுப்போகும். புரிந்தால் சரி.

சரிதாவின் காதலனாக ஜோமோன் ஜானி. சுமாரான நடிப்பு. அண்ணாமலை எனும் கேரக்டரில் மாஸ்டர் பரம்வீர் சிங். சைகை மொழி காட்டி நடிக்கும் காட்சி சிறப்பு.

மகன் ராமுவின் காதலுக்கு  ஸ்ரீநிவாச ஐயர் பச்சைக்கொடி காட்டினாலும்.. சரிதாவின் தந்தை சிகப்பு சிக்னலை போடுகிறார்.

'நமக்கு குடும்ப கௌரவம், அந்தஸ்துதான் முக்கியம்' என மகளிடம் தந்தை கோபமாக பேச.. மறுபக்கம் 'நீ எனக்கு மகள் மாதிரிம்மா' என ஸ்ரீநிவாச ஐயர் தன்மையாக பேச.. இரு குடும்பத்திலும் வத்தி வைக்கும் வேலையை பழனி பார்க்க..

சரிதாவின் தந்தை காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை ஆதரிக்க.. பழனி போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் மீண்டும் போட்டு குடுக்க..

சரிதாவின் தந்தை மீண்டும் மீண்டும் மீண்டும் காதலை எதிர்க்க, ராமுவின் தந்தை மீண்டும் மீண்டும் மீண்டும் ஆதரிக்க.. பழனி மீண்டும் மீண்டும் மீண்டும் போட்டு குடுக்க.. க்ளைமாக்ஸ் வந்து விட்டது.

ராமுவுக்கு திடீரென பேச்சு வர.. நமக்கு வாயை பிளந்து கொட்டாவி வர.. ஒரு வழியாக நாடகத்தை முடித்து வைத்த கந்தனின் கருணையே கருணை.

இந்த நாடகத்திற்கு கதை, வசனமெழுதிய எஸ்.தியாகுவும், இதை இயக்கிய ஸ்ருதியும் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சவசவ நாடக பாணியை குப்பையில் போட்டுவிட்டு.. 

... இருவரும் எழுத்து மற்றும் இயக்கத்திற்கான தரமான சம்மர் கோச்சிங் கேம்ப்பில் உடனே சேர்வது அவர்களுக்கும், நாடக ரசிகர்களுக்கும் மிகவும் நல்லது. 

கந்தன் கருணை - செக்குமாடு.

-------------------------------

விமர்சனம்:
சிவகுமார்

கோடை நாடக விழா 2026: குடும்படாங்

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் நான்காம் நாடகம்: லீகல்லி யுவர்ஸ் வழங்கிய 'குடும்படாங்'. எழுத்து, இயக்கம் மற்றும் தயாரிப்பு: சதீஷ் சந்திரசேகரன்.
                                

தனிக்கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்கும் பிரபல நடிகர் ஆல்பர்ட் சிவா.. ரயில் பயணத்தில் திடீரென இறந்து போகிறார். இது விபத்தா அல்லது சதியா என்பதை கண்டறிய விசாரணையை தொடங்குகிறார்கள் போலீஸ் மற்றும் உயர்மட்ட  அதிகாரிகள். இவ்விசாரணையை மையமாக கொண்டு சுழல்கிறது கதை.

LED, AI உள்ளிட்ட தொழில்நுட்பம் மற்றும் வந்தே பாரத் ரயில் அமைப்பு ஆகியவை உண்மையான ரயில் பயணத்தை நேரில் பார்க்கும் அனுபவத்தை தருகிறது.

விஷூவல் எஃபெக்ட்ஸ், எடிட்டிங், பின்னணி இசை ஆகியவற்றில் சிறந்த தரத்தை உருவாக்கி இந்நாடகத்தின் நாயகனாக இருக்கிறார் தக்ஷின்.

சைதை குமாரின் அரங்க அமைப்பு மற்றும் மனோ லைட்ஸின் ஒளியமைப்பும் அருமை.

சதீஷ் மற்றும் அக்ஷயா கபூராக வரும் நித்யா ஆகிய இருவரின் நடிப்பும் நன்று.

ரயில்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ரயில் பாதையில் ஏற்படும் பிரச்னைகளை தெளிவாக விளக்கி கதையை நகர்த்தியிருக்கிறார் சதீஷ்.

ரயில் ஓட்டுனர்களாக இருக்கும் இரு பெண்களை பார்த்து கேங்மேன் தம்ஸ் ஆப் காட்டியது விசாரணை அதிகாரிக்கு முன்பே தெரியுமாம். ஆனால் அதை ஆற அமர நீண்ட நேரம் கழித்துதான் விசாரிக்கிறார்கள். இதானா சார் உங்க டக்கு? இந்த தாமதமான விசாரணைக்கு சொல்லப்படும் சப்பைக்கட்டும்  நம்பும்படியில்லை. 

ஆல்பர்ட் சிவா இறந்தது எப்படி? பின்னணியென்ன? எனும் ஆர்வம் உணர்வுபூர்வமாக நம் மனதில் படபடப்பை உண்டாக்காமல்.‌. இயந்திரத்தனமான விசாரணை காட்சிகளாக மட்டுமே நீண்டிருப்பது முக்கிய குறை.

ஆல்பர்ட் சிவாவின் இறப்பு குறித்த விசாரணையை சிறந்த investigation thriller பாணியில் விறுவிறுப்பாக நடத்தி நாடகத்தை நச்சென்று முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆனால் அதைவிட்டு.. கொய்யா முய்யாவென்று மதம், சாதி,  தமிழர் என கிலோமீட்டர் நீளத்திற்கு பிரச்சாரம் செய்து.. காதில் ரத்தம் வரவைத்து நாடகத்தை 'முடித்து விட்டார்' சதீஷ்.

குடும்படாங் - ஆரம்பத்தில் புல்லட் ரயில் வேகம். போகப்போக சாதா ரயில் வேகம்.

------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.



கோடை நாடக விழா 2026: மதில்மேல் பூனைகள்


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் மூன்றாம் நாடகம் மதில்மேல் பூனைகள். எழுத்து, இயக்கம் VPS ஸ்ரீராமன். தயாரிப்பு: JC க்ரியேஷன்ஸ் - GS ப்ரஷாந்த். 

பெண்களை கண்டாலே ஒதுங்கி வாழும் வெங்கடேஷ்.. ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வசுதாவின் காதலில் விழுகிறார். காதலி நித்யாவுடன்  ஏற்படும் கருத்து வேற்றுமையில் அவளை பிரியும் ப்ரஷாந்த்.. பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்கிறார்.

இருவரின் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தும் பெண் யார்? அவளின் செயல் இவர்களை எப்படி இன்னலுக்கு ஆளாக்குகிறது என்பதை கூறுகிறது இப்படைப்பு.

வெங்கடேஷ், ப்ரஷாந்த் இருவரும் போலீஸ் விசாரணையில் இருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது நாடகம். அதன்பிறகு வரும் காட்சிகள் ஓரளவு நகைச்சுவையுடன் நகர்கிறது.

பெண்கள் பக்கமே தலை நிமிராத வெங்கடேஷ் கேரக்டரில் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார் கிரிஷ் வெங்கட்.

கணவன் மனைவியாக VPS ஸ்ரீராமன் மற்றும் நாஞ்சில் ரேவதி.. சற்று கலகலக்க வைக்கிறார்கள். இது தவிர்த்து..மற்ற எந்த இடத்திலும்... காமடிகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.

ஒருபக்கம் தனிப்பட்ட விசாரணை செய்ய வரும் கௌரி ஷங்கர் மற்றும் அவரது உதவியாளர் சுப்ரமணியன். மறுபக்கம் இன்ஸ்பெக்டர் & கான்ஸ்டபிளாக வரும் ஆனந்த் மற்றும் கோபிநாதன்.

காமடி என்கிற பெயரில் இந்நால்வரும் எதையோ செய்ய முயற்சித்திருக்கிறார்கள். 

மிகச்சுமாராக நகரும் நாடகத்தில்..‌ வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.. இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்த் அடிக்கடி குறுக்கே வந்து.. நம் பொறுமையை சோதிக்கிறார்.

போலீஸ் கேரக்டரில் சரியாக நடிக்க.. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் இவருக்கு பயிற்சி அளிக்குமாறு.. பாவப்பட்ட நாடக ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

யானைப்பசிக்கு சோளப்பொறி போல.. இசையமைப்பாளர் குகப்ரசாத்திற்கு சரிவர தீனி போடாமல் விட்டுள்ளது இந்நாடகம். 

கிணற்றில் போட்ட கல்லாக தேங்கி நிற்கிறது திரைக்கதை. 

ஒன்று.. நல்ல நகைச்சுவை நாடகமாக இருந்திருக்க வேண்டும் அல்லது சீரியஸான களத்தில் விறுவிறுவென நகர்ந்திருக்க வேண்டும்.

இரண்டுமின்றி.‌.சர்க்கரை பொங்கலுக்கு கருவாட்டை தொட்டுக்கொண்டு தின்ற கதையாகிப்போனது துரதிர்ஷ்டம்.

மதில்மேல் பூனைகள் - 
VPS ஸ்ரீராமனின் எழுத்தும், இயக்கமும்.

---------------------------

விமர்சனம்:
சிவகுமார். 


கோடை நாடக விழா 2026: மாயச்சங்கிலி

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் இரண்டாம் நாடகம்: ப்ரம்மா ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'மாயச்சங்கிலி'. எழுத்து, இசை மற்றும் இயக்கம் - ப்ரகாஷ்.


பல்லாண்டு காலம் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அருண். ஆனால் இவரது நேர்மை... தவறு செய்யும் சக காவல் துறையினருக்கு பிடிக்கவில்லை. அப்படியானவர்களில் ஒருவராக வரும் உயரதிகாரி.. இவரை எப்படி இன்னலுக்கு ஆளாக்குகிறார். அதை அருண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

அருணாக நடித்துள்ளார் ப்ரகாஷ். நியாயமாக வேலை செய்து.. அதனால் அவமானத்திற்கு உள்ளாகி நொந்து போகும் கேரக்டரில் பொருந்திப்போகிறார். நடிப்பில் இன்னும் கச்சிதம் தேவை. வசன உச்சரிப்பில் உள்ள தடுமாற்றத்தையும் சரி செய்ய வேண்டும்.

இவரது மனைவி உஷாவாக நடித்துள்ளார்..உஷா. தெளிந்த நீரோடையாக இவரும், மோசமான உயரதிகாரி கேரக்டரில்.. தகிக்கும் நெருப்பாக லக்ஷ்மியும் சிறப்பாக நடித்துள்ளனர். சபாஷ் சரியான போட்டி!!

கெப்பம்மா எனும் அதிரடி போலீஸ் அதிகாரி  கேரக்டரை.. தனது நாடக நடிப்பின் அனுபவத்தின் மூலம் அருமையாக வெளிப்படுத்தி.. அரங்கை அதிர வைத்துள்ளார் லஷ்மி. கணீர் குரல் வளம், அதிகார மிடுக்கு என அசத்தி இருக்கிறார்.

மனம் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனாக மாஸ்டர் த்விஜேஷ் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு.‌. ஒரு நல்ல இளம் நடிகராக.. இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும்.

நீதிமன்ற விசாரணை காட்சியில்.. பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதும்.. இப்படியான சவாலான நடிப்பை தொடர்ந்து த்விஜேஷ் செய்திருப்பது நன்று. 

டி.ஆர். பாலு (கான்ஸ்டபிள் முத்து), வெங்கடேஷ் (உயரதிகாரி ப்ரதீப்), தங்க பாண்டியன் (அகோரி) ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணை காட்சியில்..‌ வழக்கறிஞராக சிறப்பாக நடித்துள்ளார் கிரிஷ் வெங்கட். துல்லியமான உச்சரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பு.

தங்களுக்கு ஒத்துவராத கீழ்நிலை ஊழியர்களை.. நிர்வாக பயங்கரவாதம் மூலம் எப்படி உயரதிகாரிகள் கடும் சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை கதையின் மையமாக வைத்து.. அதை இறுதிவரை ஒரே திசையில் நகர்த்தி.. தன்னை ஒரு நல்ல கதாசிரியராக நிரூபித்துள்ளார் ப்ரகாஷ்.

காவல்துறை சார்ந்த லாஜிக்குகள் மற்றும் நிர்வாக  நடைமுறைகள் பலவற்றை துல்லியமாக ஆராய்ந்து நாடகமாக்கி இருப்பதும் பாராட்டத்தக்கது.

டாஸ்மாக்குகளின் உள்ளே சிசிடிவிக்கள் இல்லாதது. இருந்தாலும் அவை வேலை செய்யாதது பற்றி ப்ரகாஷ் பேசும் வசனம் மிகச்சரியானது.

லாக்கப் சித்ரவதைகள் மற்றும் மரணங்களை தடுக்க இந்திய காவல் நிலையங்களின் உள்ளே சிசிடிவி கட்டாயம் தேவை என 2020 ஆம்  ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது.

ஆனால் அதிமுக, திமுக அரசுகள் இன்றுவரை அதை பின்பற்றவில்லை. 

'இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடியும், ஸ்டாலினும்.. காவல் நிலையங்களின் உள்ளே சிசிடிவிக்கள் பொருத்தாமல் இருப்பது ஏன்? எளிய மனிதர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கவா?' எனும் நமது கேள்வியையும்.. இந்த நியாயமான வசனம் முன் வைக்க உதவுகிறது.

திருபுவனம் அஜித் குமாரை போலீஸ்காரர்கள் அடித்து கொன்ற.‌. கோவில் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்த சிசிடிவி ஆதாரங்களும், விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் 42 பேர் இறந்த இடத்தை சுற்றியிருந்த சிசிடிவி ஆதாரங்களும் எங்கே மறைந்து போயின? எப்படி, யாரால் அழிக்கப்பட்டன?

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட் தளத்தில்.. அவரை சந்தித்தவர்கள்  யார்? அங்கே சசிகலா யாருடனெல்லாம்  பேசிக்கொண்டு இருந்தார்? 

அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் அழிந்து விட்டன என அப்பல்லோ நிர்வாகம் உருட்டிய உருட்டுகளை யார் நம்பியது?

ஆகவே.. இப்படி காவல்துறை சார்ந்த நுட்பமான விஷயங்களை தனது அடுத்த படைப்புகளிலும் ப்ரகாஷ் தொடர வேண்டும்.

அதே நேரம் முக்கியமான குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.

நேர்மையான உயரதிகாரியாக வரும் ப்ரதீப்.. சனாதன பெருமை பேசுகிறார்.

மதச்சார்பற்ற இந்நாட்டில்.. அரசுத்துறை ஊழியர்கள்.. மதச்சார்பற்றவர்களாக இருப்பதுதான் சட்டப்படியும்,  தர்மப்படியும் சரி. அலுவலக வேலை நேரத்தில்..  சனாதனம் பேச வேண்டுமென காவல்துறை நெறிமுறையில் உள்ளதா? 

வீட்டில் தனது கணவர் அசைவற்று சாய்ந்தபிறகு.. அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கோ அல்லது தனக்கு தெரிந்தவர்களுக்கோ உடனே ஃபோன் செய்யாமல்.. விடியும் வரை அழுது கொண்டும், கடவுளை சபித்துக்கொண்டும் இருக்கிறார் உஷா.

'இப்பெண்ணிடம் இருந்து என்னையாவது காப்பாற்றுங்கள்' என நாடகம் பார்ப்போரிடம்.‌‌.‌‌..கடவுள் கெஞ்சாத குறைதான்.

கணவரின் உடல்மீது.. இவரது மகனும் அசைவின்றி படுத்து கிடக்கிறார். தந்தை மீதான அதீத பாசத்தால் அச்சிறுவனும் இறந்துவிட்டார் என நமக்கு எண்ணத்தோன்றியது.

கணவரின் இழப்பை எண்ணி.. சோகம் பொங்க நீண்ட நேரம் தனியே பேசும் மனைவி.. தன் மகனையும்  எழுப்பாமல் இருப்பது ஏன்? அவனுக்கு என்ன ஆனது எனும் பதற்றம் வராதது ஏன்?

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?

அதன் பிறகான காட்சியில் அச்சிறுவன் மீண்டும் வருவது.. குழப்பம். அகோரியின் விபூதியால் சிறுவன் குணமாகும் திடீர் மேஜிக்கும் நம்பும்படி இல்லை.

உளவியல் சித்ரவதை குறித்தான இந்நாடகத்தில் கதை மற்றும் வசனத்தில் தேவையானவற்றை செய்துள்ள ப்ரகாஷ்.. நேர்த்தியான திரைக்கதை மற்றும் இயக்கத்தில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

இது இவரது இசைக்கும் பொருந்தும். நெடிய நேரம் உஷா பேசும் சோக வசனங்களை தெளிவாக கேட்க விடாமல்.. பழைய பாணி இசை கொய்ங் கொய்ங்கென்று ஒலித்து இம்சை அளிக்கிறது.

சப்த அளவை குறைத்திருக்கலாம் அல்லது வேறு சோக இசையை ஒலிக்க விட்டிருக்கலாம்.

மாயச்சங்கிலி - தங்கமல்ல. வெள்ளிச்சங்கிலி.

----------------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


கோடை நாடக விழா 2026: யாமினி என் கண்மணி

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் முதல் நாடகம்: சத்யசாய் க்ரியேஷன்ஸ் வழஙகிய 'யாமினி என் கண்மணி'. எழுத்து - எழிச்சூர் அரவிந்தன். இயக்கம் - மாப்பிள்ளை கணேஷ்.




பஞ்சாபகேசனின் மகள் கிருஷ்ணா.மருமகன் கந்தசாமி. இவ்வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் அருணாச்சலம்.

நிம்மதியாக வாழ்ந்து வரும் பஞ்சாபகேசனின் வாழ்வில் யாமினி எனும் இளம்பெண் வந்து புயலை கிளப்புகிறார். இப்பெண்ணை வரவைத்தது யார்? கந்தசாமிக்கும் யாமினி எனும் பெயருக்குமான பிணைப்பு என்ன? பஞ்சாபகேசன் என்ன நிலைக்கு ஆளாகிறார் என்பதை நகைச்சுவையாக கூற முயன்றுள்ளது இந்நாடகம்.

எழிச்சூர் அரவிந்தன், மாப்பிள்ளை கணேஷ், யாமினி தேவி, தேவிகா, ராம் ப்ரகாஷ், ப்ரஷாந்த் என இக்கூட்டணி 'கதைக்கு தேவையான' நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறது. 

பஞ்சாபகேசன் வீட்டில் யாமினி நுழைவது முதல் க்ளைமாக்ஸ் வரை தொடரும் திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன.

கலைவாணர் கிச்சாவின் ஒளியமைப்பும் நாடகத்திற்கு வலு சேர்க்கிறது.

அரசியல்வாதியாக பழனி அறிமுகமாகும் காட்சியில் வரும் பேட்டி சம்மந்தப்பட்ட கேள்வி பதில் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கவில்லை.

அதன்பிறகு வரும் திமுக மற்றும் சசிகலாவை கிண்டல் செய்யும் வசனங்களில் சில நன்று.

முதுகெலும்புள்ள வசனகர்த்தாக்கள் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் செயல்கள் மற்றும் அதன் தலைவர்களை நையாண்டி செய்வார்கள். 

ஆனால் எழிச்சூர் அரவிந்தன் திமுகவை வன்மம் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காமல் பம்முகிறார். 

இவருக்கு தெரிந்தது சின்னம்மா காமடி மட்டும்தான். 

அதேபோல கடந்த சில நாடகங்களில் ரெண்டு பொண்டாட்டிக்காரன் எனும் வசனம் மூலம் திமுக தலைவர் கருணாநிதியை கிண்டல் செய்து வருகிறார். 

அரசியல் தலைவர்களின் ஆட்சி ரீதியிலான செயல்களை நாடகங்களில் சாடலாம். அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து இப்படி ஏளனம் செய்வது முதிர்ச்சியற்ற, தரங்கெட்ட வசனகர்த்தாவின் வேலை. 

மோடியின் மனைவி குறித்து பேச எழிச்சூர் அரவிந்தனுக்கு துணிச்சலும் இல்லை. முதுகெலும்பும் இல்லை என்பதையே இவரது ஒருதலைப்பட்ச எழுத்துகள் காட்டுகிறது.

இம்முறை சற்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மாப்பிள்ளை கணேஷ்.

சிறப்பாக ஆரம்பித்து போகப்போக அறுவையாக முடியாமல்.. பெரியளவில் தொய்வின்றி இந்நாடகத்தை தப்ப வைக்கிறது மாப்பிள்ளை கணேஷின் இயக்கம்.

சிறந்த நகைச்சுவை நாடகமாக இல்லாவிட்டாலும்.. குறைந்தபட்ச உத்திரவாதம் உறுதி.

யாமினி என் கண்மணி - கிட்டத்தட்ட ஓகே கண்மணி.

----------------------

விமர்சனம்:
சிவகுமார்.


விளையாட்டு - நாடக விமர்சனம்


கூத்துப்பட்டறையின் 'விளையாட்டு' எனும் நாடகம் ஏப்ரல் 10 அன்று கூத்துப்பட்டறை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

இயக்கம்: ரமேஷ் பாரதி, ஒளியமைப்பு: பிரேம் குமார்.

இப்பொதுச்சமூகம் கல்வியறிவு குறித்த புரிதலை எவ்வாறு கொண்டுள்ளது. அது எதிர்பார்க்கும் அளவீட்டில் பயணிக்க இயலாத ஒருதரப்பு மாணவர்கள் மற்றும் இளையோரின் சிக்கல்களை பேச முயன்றுள்ளது இந்நாடகம்.

வாழ்வில் வெற்றிபெற கல்வி மட்டுமே பிரதானமல்ல. கலையும் அவ்வெற்றிக்கான திறவுகோல், கலையால் என்ன வருவாய் கிடைக்கும்? கல்விதான் பிரதானம் என வெவ்வேறு நிலைப்பாடு கொண்ட மாந்தர்கள்.

இவர்களுக்கிடையே குழம்பித்தவிக்கும் இளஞ்சமூகத்தின் மன அழுத்தத்தை பிரதிபலிக்க எத்தனித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் பாரதி.

மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவனாக ஆர்யனின் நடிப்பு சிறப்பு. சக்திநாதன் மற்றும் ரமேஷ் பாரதியின் குரல்களில் ஒலிக்கும் பாடல்கள் நன்று.

மற்றபடி.. அழுத்தமான முத்திரையை பதிக்க தவறுகிறது இந்நாடகம்.

சில ஆழமான கருத்துகளையேனும் பூடகமாக உணர்த்தி நம் சிந்தனைத்திறனுக்கு வேலை தருவது கூத்துப்பட்டறை நாடகங்களின் தனித்துவம்.

ஆனால் இங்கே கதையமைப்பு, வசனம் எல்லாம்..பிரச்சார பாணியில்.. தட்டையாக நகர்ந்து முடிகின்றன. 

கதைக்களம் மற்றும் கதாபாத்திர சூழலை தாண்டிய சில வசனங்களும் துருத்திக்கொண்டு நிற்கின்றன.

இறுதியாக ஒலிக்கும் தேசபக்தி பாடலுக்கும், இக்கதைக்களத்திற்கும் என்ன சம்மந்தம் என புரியவில்லை.

கூத்துப்பட்டறை நாடகங்களில்.. சமூகம் சார்ந்த (குறைந்தபட்ச) தீவிரத்தன்மை கொண்ட இயக்கமும், நடிப்பும் இங்கே போதுமானதாக இல்லாமல் போகிறது.

தனது அடுத்த படைப்பில் இயக்குனர் ரமேஷ்பாரதி.. இப்படியான குறைகளை கலைந்து எம்மாதிரியான ஆக்கத்தை தருவார் என பார்ப்போம்.

விளையாட்டு - போதாத பயிற்சி.

----------------

விமர்சனம்:
சிவகுமார்.

Mr. Stranger - நாடக விமர்சனம்


டம்மிஸ் ட்ராமாவின் புதிய நாடகமான மிஸ்டர் ஸ்ட்ரேஞ்சர் ஏப்ரல் 3 முதல் 5 வரை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப்பில் நடந்தேறியது. எழுத்து - இயக்கம்: ஸ்ரீவத்சன்.

டிசைனிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் தொழில்முனைவர் வைஷ்ணவி. பத்தாண்டுகள் தந்தை சிவராமனை பிரிந்து.. கணவர் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருபவர்.

எதிர்பாராத நிகழ்வால் தனது வேலையில் அவமானத்தை சந்திக்கும் சிவராமன்.. மகளின் வீட்டிற்கு வந்து சேர்கிறார். இவரது வருகை அக்குடும்பத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியதா அல்லது பூ கம்பத்தை நட்டு வைத்ததா என்பதே கதை.

நாடகத்தின் முதல் கால்பகுதி நேரம்.. இக்கதை எதை நோக்கி நகரும் என ஓரிரு அவதானிப்புகள் நம்முள்  உருவாகின்றன. ஆனால் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என முக்கிய திருப்பத்தை வைக்கிறார் 
ஸ்ரீவத்சன். அங்கிருந்து இறுதிவரை பரபரவென நகர்கிறது.

நவீன தனியார் நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் உள்ள வைஷ்ணவியாக ப்ரீத்தி. இந்த கேரக்டரை வேறொருவர் ஏற்று நடித்திருந்தால்.. இந்தளவிற்கு கச்சிதமாக நடித்திருக்க இயலாது. 

தந்தை சிவராமனாக  ஸ்ரீதர். வாழ்வில் சறுக்கல்களையும், அவமானங்களையும் சந்தித்தாலும்.. அவற்றை புறந்தள்ளி.. இயல்பாக அடுத்த செயலை நோக்கி முன்னேறும் மனிதராக மனதை தொடுகிறார்.

நாடகம் பார்க்கிறோம் எனும் எண்ணத்தை மறந்து.. உண்மையான தந்தை - மகள் உரையாடல் மற்றும் உறவினை கண்முன் பார்க்கும் முழுமையான உணர்வை தந்துள்ளனர்.

உத்ரா, விஷ்வேஷ், யக்னேஷ், ஸ்ரீனிவாசன், சராயு உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை.

பொருத்தமான பின்னணி இசையை தந்திருக்கிறார் தக்க்ஷின். மயிலை பாபுவின் ஒளியமைப்பும் நன்று.

மேடைப்பின்னணியை கையாண்ட குழுவினரின் பங்களிப்பும் சிறப்பு. 

சுவர் கடிகாரம் வைத்தால்.‌. காட்சிக்கேற்ற நேரத்தை அதில் மாற்றுவது தலைவலி பிடித்த வேலையென்பதால்.. அதை பல்லாண்டுகளாக நாடகங்களில் தவிர்த்து வந்தனர்.

ஆனால் அதற்கும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு கண்டு.‌. மேடைக்கு கொண்டு வந்து அசத்தியுள்ளனர் 
இக்குழுவினர்.

கடந்த 25 ஆண்டுகால தமிழ் நாடக வரலாற்றில்..  மறுமலர்ச்சியை உண்டாக்கி.. தனித்துவம் பெற்றது  டம்மிஸ் ட்ராமா.

தற்போது மிஸ்டர்‌. ஸ்ட்ரேஞ்சர்.. இக்குழுவின் பெயரை மட்டுமின்றி.. தமிழ் நாடகத்தின் தரத்தையும் அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போல.. எந்த genre நாடகமாக இருந்தாலும் அதில் தங்கள் சுயலாபத்திற்காக இந்துத்வா கருத்துகளை திணித்து.. கழுத்தை அறுத்து வரும் பெரும்பான்மையான சபா நாடகங்களுக்கு மத்தியில்....

.... சாதி, மதச்சார்பற்று அனைத்து தரப்பினரும் பார்க்கும்படியான சிறந்த நாடகத்தை தந்து.. பெரிய ஆறுதலை தந்திருக்கிறார் ஸ்ரீவத்சன்.

புதுயுக தலைமுறையினர் பணியாற்றும் அலுவலகங்களின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் என ஒவ்வொன்றையும் 360 டிகிரியில் ஆராய்ந்து.. அதை பலதரப்பு நாடக ரசிகர்களுக்கும் தெளிவாக கொண்டு சேர்த்திருப்பது மிகச்சிறப்பு. 

ஒரு சில கதைக்களங்களை கையாண்டு.. அதை துல்லியமாக நாடமாக்கம் செய்வது ஸ்ரீவத்சனால்  மட்டுமே சாத்தியம். அதில் இந்நாடகமும் ஒன்று. 

அனைவரும் அவசியம் பார்க்கவும். 

மிஸ்டர் ஸ்ட்ரேஞ்சர் - உங்களில் ஒருவர். 
 உங்களுக்காக ஒருவர்.

-----------------------

விமர்சனம்:
சிவகுமார்.