இவ்வாண்டின் கோடை நாடக விழா ஏப்ரல் 22 முதல் மே 3 வரை சென்னை நாரத கான சபா மற்றும் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
மொத்த நாடகங்களின் எண்ணிக்கை 12. அனைத்து நாடகங்களின் விமர்சனமும் இந்த வெப்சைட்டில் பதிவாகியுள்ளன.
மெட்ராஸ் தியேட்டர் கோடை நாடக விழா 2026 விருதுகள்:
சிறந்த ஒப்பனைக்கலைஞர்:
பெரம்பூர் குமார். நாடகம்: யாகாவாராயினும்.
ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு skin clothing எனும் ஒப்பனையை அவரது முகத்தில் பயன்படுத்தி அக்கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கூட்டியிருந்தார் பெரம்பூர் குமார். அருமை.
சிறந்த அரங்க அமைப்பு:
சைதை குமார். நாடகம்: குடும்படாங்.
வந்தே பாரத் ரயிலை நேரில் பார்த்தது போன்ற கச்சிதமான வேலைப்பாடு. இந்நாடகத்தில் ரயில் ஒரு வண்டியாக மட்டுமல்ல. உயிராகவும் இருந்ததற்கு சைதை குமாரின் வேலைப்பாடு பிரதானமானது.
சிறந்த ஒளியமைப்பு:
மனோ, குணா மற்றும் தீனா. நாடகம்: குடும்படாங்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் ரயிலின் உட்புறம் மற்றும் வெளிப்புறம், ரயில் நிற்குமிடம் என அனைத்திற்கும் துல்லியமான ஒளியமைப்பை தங்களின் உழைப்பின் மூலம் மேடைக்கு கொண்டு வந்துள்ளனர் மனோ லைட்ஸ் குழுவினர்.
தனிப்பட்ட கற்பனையில் லைட்டிங் போடாமல்.. வந்தே பாரத் ரயிலின் லைட்டிங்கை கண்ணால் பார்த்து.. அதேபோன்று லைட்டிங் செய்திருப்பது மனோ லைட்ஸ் குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது.
சிறந்த பின்னணி இசை:
விஸ்வஜெய். நாடகம்: வீரா.
மகிழ்ச்சி, ஏமாற்றம், குழப்பம் என இந்நாடகத்தில் மாறும் காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் மனநிலைக்கேற்ப பின்னணி இசையமைப்பது சவாலான விஷயம். அதை உணர்ந்து அருமையான பின்னணி இசையை தந்திருக்கிறார் விஸ்வஜெய்.
சிறந்த நடிப்பு - சிறார் பிரிவு:
கதைக்கு தேவைப்பட்டால் சிறார்களை நடிக்க வைப்பது ஒருபுறம். இப்பிரிவில் விருது வாங்க வேண்டும் என்பதற்காகவே.. பல நாடகங்களில் சிறார்களை மேடையேற்றி இருந்தனர். சில நாடகங்கள் மட்டும் கதைக்காக இவர்களை நடிக்க வைத்தனர்.
முதன் முறை மேடையேறி நடித்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் பாராட்டத்தக்கவர்களே. ஆகவே இப்பிரிவில் தனிப்பட்ட விருது இல்லை.
சிறந்த நகைச்சுவை நடிகை:
நித்ய கல்யாணி. நாடகம்: மதில் மேல் பூனைகள்.
பெண்களை கண்டாலே கூச்சமும், ஓரளவு வெறுப்பும் கொண்ட மகன் வெங்கட்டின் தாய் லஷ்மியாக நடித்திருந்தார் நித்ய கல்யாணி. தான் வரும் காட்சிகளில் கலகலப்பிற்கு உத்திரவாதம் தந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். சிறப்பு.
சிறந்த நகைச்சுவை நடிகர்:
ஸ்ரீதர். நாடகம்: தனிமை(thanimAI).
வேலைப்பளுவில் இருக்கும் மகனை மேலும் வெறுப்பேற்ற வீட்டினுள் நுழையும் விஸ்வநாதனாக நடித்துள்ளார். பேச்சை மூச்சாக எண்ணும் கேரக்டர். அதேநேரம் சிக்கல்களை தீர்க்கவும் முயல்பவர்.
காமடி சரவெடிக்கு உத்திரவாதம் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார் ஸ்ரீதர்.
சிறந்த துணை நடிகை:
ஸ்வாதி ஸ்ரீதர். நாடகம்: வீரா.
மன அழுத்தம் குறைய ஊட்டிக்கு வரும் வீராவிற்கு தன்னம்பிக்கை தந்து..புதிய பாதையை அமைத்துத்தரும் பல்லவி எனும் கேரக்டரில் மிக நேர்த்தியாக நடித்துள்ளார் ஸ்வாதி.
மாற்றுத்திறனாளிகளின் சைகை உடல்மொழியை இவர் வெளிப்படுத்திய விதம்..நடிப்பாக தோன்றாமல் வெகு இயல்பாய் பொருந்திப்போனது.
சிறந்த துணை நடிகர்:
கிரிஷ் வெங்கட். நாடகங்கள்: மாயச்சங்கிலி மற்றும் மதில்மேல் பூனைகள்.
மாயச்சங்கிலியில் நீதிமன்ற விசாரணை காட்சியில் வழக்கறிஞராகவும், மதில்மேல் பூனைகள் நாடகத்தில் பெண்களை கண்டு கூச்சப்படும் வெங்கடேஷாகவும் யதார்த்தமாக நடித்திருந்தார்.
தனக்கான கதாபாத்திரம் சிறிதோ, பெரிதோ.. அதில் தனிமுத்திரை பதிக்கும் மிகச்சில நடிகர்களில் இவரும் ஒருவர்.
தெளிவான உச்சரிப்போடு.. சரியான நடிப்பையும் தந்து வரும் கிரிஷ் வெங்கட்டிற்கு பாராட்டுகள்.
சிறந்த நடிகை:
லஷ்மி. நாடகம்: மாயச்சங்கிலி.
கதையின் நாயகராக வரும் இன்ஸ்பெக்டர் அருணை (ப்ரகாஷ்).. கடும் பணிச்சுமைக்கு ஆளாக்கும் உயரதிகாரி கெப்பம்மா எனும் கேரக்டரில் அதகளம் செய்துள்ளார் லஷ்மி.
நாடகம் காண்போர் மனதிலும் அச்ச உணர்வை உண்டாக்கும் அளவிற்கு பிரமாதமான நடிப்பு.
கணீர் குரல்வளமும் முக்கிய ப்ளஸ்.
நீண்ட நாடக பயணத்தில்..பல்வேறு கேரக்டர்களை ஏற்று நடித்துள்ள லஷ்மி. இந்த மாறுபட்ட வேடத்தில் அதிரடியாக நடித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
சிறந்த நடிகர்:
சிவப்ரசாத். நாடகம்: கந்தன் கருணை.
முருகன் கோவில் அர்ச்சகர் ஸ்ரீனிவாசனாக நடித்துள்ளார் சிவ்ப்ரசாத்.
தனது மகனின் காதலால் ஏற்படும் அவமானத்தை கண்டு இடிந்து விடாமல்.. நல்லதை நினைத்து.. பக்தி நெறியில் வாழும் கேரக்டரில் மிக இயல்பாக நடித்துள்ளார். வசனங்களை பேசிய விதமும் நன்று.
சிவ்ப்ரசாத்தின் நீண்ட நாடக உலக அனுபவத்தில் இது(வும்) ஒரு குறிப்பிடத்தக்க நடிப்பு.
சிறந்த கதாசிரியர்:
விக்னேஷ். நாடகம்: வீரா.
திரைப்பட இயக்குனர் ஆவதை லட்சியமாக கொண்டுள்ள வீரா அந்தக்கனவை அடையும் போராட்டத்தில் எப்படியான தடைகளை சந்திக்கிறார். இழப்பினை தாங்குகிறார் என்பதையும், தன்னைவிட அதிக சோகங்களை சுமந்து வாழ்வோரை கண்டு.. மீண்டும் ஒரு புதிய வாழ்வை எப்படி தொடங்குகிறார் எனும் கதையை அழகாக எழுதியுள்ளார் விக்னேஷ்.
ஃபீல் குட் கதைக்கு தேவையான எழுத்தோடு.. பின்னடைவில் இருந்து மீள்வதற்கான பாதையையும் வீரா கண்டறியும் பாதையை.. ஒரு கதாசிரியராக சிறந்த முறையில் அளித்துள்ளார் விக்னேஷ்.
சிறந்த திரைக்கதை ஆசிரியர்:
விக்னேஷ். நாடகம்: வீரா.
திரைத்துறையில் வீரா உதவி இயக்குனராக இருப்பது, தாயிடம் மேலோங்கிய பாசம், பொருளாதார பின்னடைவு, மனக்குழப்பம், மாற்றிடம் செல்வதால் ஏற்படும் மாற்றம், துணை கதாபாத்திரங்களின் வாழ்க்கை பின்னணி என அடுத்தடுத்து நகரும் காட்சிகளுக்கு கோர்வையான திரைக்கதை எழுதி தடம் பதித்துள்ளார் விக்னேஷ்.
சிறந்த வசனகர்த்தா:
நித்யா கௌஷிக். நாடகம்: தனிமை (thanimAI).
AI உள்ளிட்ட மென்துறை சார்ந்த நுட்பமானஉரையாடல்களையும், ஒரு வீட்டினுள் நடக்கும் dark comedy ரகளைகளையும் கலந்து கட்டி காமடி விருந்து படைத்துள்ளார் நித்யா கௌஷிக்.
முழுநீளை நகைச்சுவை நாடகம் என்றாலே ஸ்டான்ட் அப் காமடி பாணியிலான வசனங்கள் எனும் டைனோசர் காலத்து மரபினை ஒதுக்கி.. பல இடங்களில் சிறிய ஒன் லைன் வசனங்கள் மூலம் சரவெடி பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் நித்யா கௌஷிக்.
ஒரு (நகைச்சுவை) நாடகத்திற்கு.. ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் எந்த மீட்டருக்குள் அடங்க வேண்டும் என்பதற்கு இப்படைப்பு ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
கூடுதல் வசனம் எழுதியுள்ள ஸ்ரீவத்சனின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.
சிறந்த இயக்குனர்:
நித்யா கௌஷிக். நாடகம்: தனிமை (thanimAI)
வசனம், நடிப்பு, இசையென அனைத்தையும் அழகுற ஒருங்கிணைத்து.. ஒரு முழுமையான படைப்பினை தருவது எளிதல்ல.
லாஜிக் இல்லாமல் நகைச்சுவை நாடகங்கள் எடுப்பது ஒரு படைப்பாளி/இயக்குனரின் படைப்பு சுதந்திரம்.
அதேநேரம் சொல்ல வந்த கதையையாவது 'அதற்குட்பட்ட' லாஜிக்கில் சொல்கிறார்களா? அல்லது ப்ரேக் பிடிக்காத வண்டிபோல தறிகெட்டு ஓடி நம் உயிரை வாங்குகிறதா என்பதும் முக்கியம். இதில் முதலாம் காரணத்தோடு பயணித்து வெற்றி இலக்கை தொடுகிறார் இயக்குனர் நித்யா கௌஷிக்.
சிறந்த நாடகம்:
தனிமை (thanimAI). தயாரிப்பு: டம்மிஸ் ட்ராமா.
சிறந்த இயக்குனர்தான் சிறந்த நாடகத்தை தர முடியும். சிறந்த நாடகத்தை சிறந்த இயக்குனர்தான் இயக்கியிருக்க முடியும்.
ஆகவே.. இரு பிரிவிலும் சிறந்த விருதினை ஒரே நாடகமான 'தனிமை' வெல்கிறது.
சிறந்த நாடகமென்பது சமூகத்திற்கு பெரிய கருத்தினை சொல்வது அல்லது குடும்ப உறவுகளின் மூலம் நெஞ்சை பிசைவது என ஏதோவொரு சீரியஸான களத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்பது பாரம்பரிய மூடநம்பிக்கை.
நல்ல நகைச்சுவை நாடகமும் சிறந்த நாடகம்தான். அதை சிறந்த நகைச்சுவை நாடகம் எனும் வட்டத்தில் அடைப்பதும் தேன் தடவப்பட்ட ஒடுக்குமுறையே.
ஆதித்யா தன் வீட்டில் இருக்கும் நாளில் அடுத்தடுத்து காலிங் பெல் அடித்து உள்ளே வரும் நபர்கள், அவர்கள் பேசும் வார்த்தைகளை வைத்து தீர்வு காணப்படும் software bug சிக்கல்கள் என லாஜிக் ரீதியான கேள்விகளுக்கு.. நாடகம் துவங்கும் முன் விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீவத்சன்.
அதற்காக கண்டபடி காமடி செய்து.. அனைத்து லாஜிக்குகளையும் கிடப்பில் போடவில்லை.
Situational comedy மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விளக்கங்கள் மூலம் ஒரு 'நகைச்சுவை நாடகத்திற்கு தேவையான லாஜிக்குகள் நிறைவாகவே உள்ளன.
தரமான நகைச்சுவை நாடகத்தை.. துவக்கம் முதல் இறுதிவரை மிக அழகாக மேடையேற்றியுள்ளார் நித்யா கௌஷிக்.
இப்படியொரு அருமையான எழுத்தாளர் மற்றும் இயக்குனரிடம் பொறுப்பினை தந்து.. வெற்றிபெறச்செய்துள்ள டம்மிஸ் ட்ராமா தயாரிப்பாளர்கள் மற்றும் உடன் பணிபுரிந்த குழுவினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
ஆண்கள் மட்டும்தான் (நல்ல) நகைச்சுவை நாடகத்தை எழுதி, இயக்க முடியும் எனும் போலியான பிம்பத்தை உடைத்து.. வெற்றி பெற்றுள்ள நித்யா கௌஷிக் & டீமின் பயணம்.. தொடர்ந்து வாகை சூடும் என எதிர்பார்க்கலாம்.
-----------------------
நன்றி,
சிவகுமார்.