கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் இரண்டாம் நாடகம்: ப்ரம்மா ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'மாயச்சங்கிலி'. எழுத்து, இசை மற்றும் இயக்கம் - ப்ரகாஷ்.
பல்லாண்டு காலம் நேர்மையான போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அருண். ஆனால் இவரது நேர்மை... தவறு செய்யும் சக காவல் துறையினருக்கு பிடிக்கவில்லை. அப்படியானவர்களில் ஒருவராக வரும் உயரதிகாரி.. இவரை எப்படி இன்னலுக்கு ஆளாக்குகிறார். அதை அருண் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
அருணாக நடித்துள்ளார் ப்ரகாஷ். நியாயமாக வேலை செய்து.. அதனால் அவமானத்திற்கு உள்ளாகி நொந்து போகும் கேரக்டரில் பொருந்திப்போகிறார். நடிப்பில் இன்னும் கச்சிதம் தேவை. வசன உச்சரிப்பில் உள்ள தடுமாற்றத்தையும் சரி செய்ய வேண்டும்.
இவரது மனைவி உஷாவாக நடித்துள்ளார்..உஷா. தெளிந்த நீரோடையாக இவரும், மோசமான உயரதிகாரி கேரக்டரில்.. தகிக்கும் நெருப்பாக லக்ஷ்மியும் சிறப்பாக நடித்துள்ளனர். சபாஷ் சரியான போட்டி!!
கெப்பம்மா எனும் அதிரடி போலீஸ் அதிகாரி கேரக்டரை.. தனது நாடக நடிப்பின் அனுபவத்தின் மூலம் அருமையாக வெளிப்படுத்தி.. அரங்கை அதிர வைத்துள்ளார் லஷ்மி. கணீர் குரல் வளம், அதிகார மிடுக்கு என அசத்தி இருக்கிறார்.
மனம் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் சிறுவனாக மாஸ்டர் த்விஜேஷ் வெளிப்படுத்தியுள்ள நடிப்பு.. ஒரு நல்ல இளம் நடிகராக.. இவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும்.
நீதிமன்ற விசாரணை காட்சியில்.. பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் போதும்.. இப்படியான சவாலான நடிப்பை தொடர்ந்து த்விஜேஷ் செய்திருப்பது நன்று.
டி.ஆர். பாலு (கான்ஸ்டபிள் முத்து), வெங்கடேஷ் (உயரதிகாரி ப்ரதீப்), தங்க பாண்டியன் (அகோரி) ஆகியோரும் நிறைவாக நடித்துள்ளனர்.
நீதிமன்ற விசாரணை காட்சியில்.. வழக்கறிஞராக சிறப்பாக நடித்துள்ளார் கிரிஷ் வெங்கட். துல்லியமான உச்சரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பு.
தங்களுக்கு ஒத்துவராத கீழ்நிலை ஊழியர்களை.. நிர்வாக பயங்கரவாதம் மூலம் எப்படி உயரதிகாரிகள் கடும் சித்ரவதைக்கு ஆளாக்குகிறார்கள் என்பதை கதையின் மையமாக வைத்து.. அதை இறுதிவரை ஒரே திசையில் நகர்த்தி.. தன்னை ஒரு நல்ல கதாசிரியராக நிரூபித்துள்ளார் ப்ரகாஷ்.
காவல்துறை சார்ந்த லாஜிக்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் பலவற்றை துல்லியமாக ஆராய்ந்து நாடகமாக்கி இருப்பதும் பாராட்டத்தக்கது.
டாஸ்மாக்குகளின் உள்ளே சிசிடிவிக்கள் இல்லாதது. இருந்தாலும் அவை வேலை செய்யாதது பற்றி ப்ரகாஷ் பேசும் வசனம் மிகச்சரியானது.
லாக்கப் சித்ரவதைகள் மற்றும் மரணங்களை தடுக்க இந்திய காவல் நிலையங்களின் உள்ளே சிசிடிவி கட்டாயம் தேவை என 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டது.
ஆனால் அதிமுக, திமுக அரசுகள் இன்றுவரை அதை பின்பற்றவில்லை.
'இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என மார்தட்டிக்கொள்ளும் எடப்பாடியும், ஸ்டாலினும்.. காவல் நிலையங்களின் உள்ளே சிசிடிவிக்கள் பொருத்தாமல் இருப்பது ஏன்? எளிய மனிதர்கள் மீது தொடுக்கப்படும் கொடூரங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கவா?' எனும் நமது கேள்வியையும்.. இந்த நியாயமான வசனம் முன் வைக்க உதவுகிறது.
திருபுவனம் அஜித் குமாரை போலீஸ்காரர்கள் அடித்து கொன்ற.. கோவில் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தில் இருந்த சிசிடிவி ஆதாரங்களும், விஜய்யின் பிரச்சாரத்தின்போது கரூரில் 42 பேர் இறந்த இடத்தை சுற்றியிருந்த சிசிடிவி ஆதாரங்களும் எங்கே மறைந்து போயின? எப்படி, யாரால் அழிக்கப்பட்டன?
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட் தளத்தில்.. அவரை சந்தித்தவர்கள் யார்? அங்கே சசிகலா யாருடனெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்?
அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் அழிந்து விட்டன என அப்பல்லோ நிர்வாகம் உருட்டிய உருட்டுகளை யார் நம்பியது?
ஆகவே.. இப்படி காவல்துறை சார்ந்த நுட்பமான விஷயங்களை தனது அடுத்த படைப்புகளிலும் ப்ரகாஷ் தொடர வேண்டும்.
அதே நேரம் முக்கியமான குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன.
நேர்மையான உயரதிகாரியாக வரும் ப்ரதீப்.. சனாதன பெருமை பேசுகிறார்.
மதச்சார்பற்ற இந்நாட்டில்.. அரசுத்துறை ஊழியர்கள்.. மதச்சார்பற்றவர்களாக இருப்பதுதான் சட்டப்படியும், தர்மப்படியும் சரி. அலுவலக வேலை நேரத்தில்.. சனாதனம் பேச வேண்டுமென காவல்துறை நெறிமுறையில் உள்ளதா?
வீட்டில் தனது கணவர் அசைவற்று சாய்ந்தபிறகு.. அவரை காப்பாற்ற மருத்துவமனைக்கோ அல்லது தனக்கு தெரிந்தவர்களுக்கோ உடனே ஃபோன் செய்யாமல்.. விடியும் வரை அழுது கொண்டும், கடவுளை சபித்துக்கொண்டும் இருக்கிறார் உஷா.
'இப்பெண்ணிடம் இருந்து என்னையாவது காப்பாற்றுங்கள்' என நாடகம் பார்ப்போரிடம்....கடவுள் கெஞ்சாத குறைதான்.
கணவரின் உடல்மீது.. இவரது மகனும் அசைவின்றி படுத்து கிடக்கிறார். தந்தை மீதான அதீத பாசத்தால் அச்சிறுவனும் இறந்துவிட்டார் என நமக்கு எண்ணத்தோன்றியது.
கணவரின் இழப்பை எண்ணி.. சோகம் பொங்க நீண்ட நேரம் தனியே பேசும் மனைவி.. தன் மகனையும் எழுப்பாமல் இருப்பது ஏன்? அவனுக்கு என்ன ஆனது எனும் பதற்றம் வராதது ஏன்?
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
அதன் பிறகான காட்சியில் அச்சிறுவன் மீண்டும் வருவது.. குழப்பம். அகோரியின் விபூதியால் சிறுவன் குணமாகும் திடீர் மேஜிக்கும் நம்பும்படி இல்லை.
உளவியல் சித்ரவதை குறித்தான இந்நாடகத்தில் கதை மற்றும் வசனத்தில் தேவையானவற்றை செய்துள்ள ப்ரகாஷ்.. நேர்த்தியான திரைக்கதை மற்றும் இயக்கத்தில் மேலும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
இது இவரது இசைக்கும் பொருந்தும். நெடிய நேரம் உஷா பேசும் சோக வசனங்களை தெளிவாக கேட்க விடாமல்.. பழைய பாணி இசை கொய்ங் கொய்ங்கென்று ஒலித்து இம்சை அளிக்கிறது.
சப்த அளவை குறைத்திருக்கலாம் அல்லது வேறு சோக இசையை ஒலிக்க விட்டிருக்கலாம்.
மாயச்சங்கிலி - தங்கமல்ல. வெள்ளிச்சங்கிலி.
----------------------------------
விமர்சனம்:
சிவகுமார்.