கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் மூன்றாம் நாடகம் மதில்மேல் பூனைகள். எழுத்து, இயக்கம் VPS ஸ்ரீராமன். தயாரிப்பு: JC க்ரியேஷன்ஸ் - GS ப்ரஷாந்த்.
பெண்களை கண்டாலே ஒதுங்கி வாழும் வெங்கடேஷ்.. ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் வசுதாவின் காதலில் விழுகிறார். காதலி நித்யாவுடன் ஏற்படும் கருத்து வேற்றுமையில் அவளை பிரியும் ப்ரஷாந்த்.. பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணமுடிக்கிறார்.
இருவரின் வாழ்விலும் சிக்கலை ஏற்படுத்தும் பெண் யார்? அவளின் செயல் இவர்களை எப்படி இன்னலுக்கு ஆளாக்குகிறது என்பதை கூறுகிறது இப்படைப்பு.
வெங்கடேஷ், ப்ரஷாந்த் இருவரும் போலீஸ் விசாரணையில் இருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது நாடகம். அதன்பிறகு வரும் காட்சிகள் ஓரளவு நகைச்சுவையுடன் நகர்கிறது.
பெண்கள் பக்கமே தலை நிமிராத வெங்கடேஷ் கேரக்டரில் நம்பகத்தன்மையுடன் நடித்துள்ளார் கிரிஷ் வெங்கட்.
கணவன் மனைவியாக VPS ஸ்ரீராமன் மற்றும் நாஞ்சில் ரேவதி.. சற்று கலகலக்க வைக்கிறார்கள். இது தவிர்த்து..மற்ற எந்த இடத்திலும்... காமடிகள் சிரிப்பை வரவழைக்கவில்லை.
ஒருபக்கம் தனிப்பட்ட விசாரணை செய்ய வரும் கௌரி ஷங்கர் மற்றும் அவரது உதவியாளர் சுப்ரமணியன். மறுபக்கம் இன்ஸ்பெக்டர் & கான்ஸ்டபிளாக வரும் ஆனந்த் மற்றும் கோபிநாதன்.
காமடி என்கிற பெயரில் இந்நால்வரும் எதையோ செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
மிகச்சுமாராக நகரும் நாடகத்தில்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல.. இன்ஸ்பெக்டராக வரும் ஆனந்த் அடிக்கடி குறுக்கே வந்து.. நம் பொறுமையை சோதிக்கிறார்.
போலீஸ் கேரக்டரில் சரியாக நடிக்க.. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் இவருக்கு பயிற்சி அளிக்குமாறு.. பாவப்பட்ட நாடக ரசிகர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
யானைப்பசிக்கு சோளப்பொறி போல.. இசையமைப்பாளர் குகப்ரசாத்திற்கு சரிவர தீனி போடாமல் விட்டுள்ளது இந்நாடகம்.
கிணற்றில் போட்ட கல்லாக தேங்கி நிற்கிறது திரைக்கதை.
ஒன்று.. நல்ல நகைச்சுவை நாடகமாக இருந்திருக்க வேண்டும் அல்லது சீரியஸான களத்தில் விறுவிறுவென நகர்ந்திருக்க வேண்டும்.
இரண்டுமின்றி..சர்க்கரை பொங்கலுக்கு கருவாட்டை தொட்டுக்கொண்டு தின்ற கதையாகிப்போனது துரதிர்ஷ்டம்.
மதில்மேல் பூனைகள் -
VPS ஸ்ரீராமனின் எழுத்தும், இயக்கமும்.
---------------------------
விமர்சனம்:
சிவகுமார்.
No comments:
Post a Comment