13 மார்ச் 2026 அன்று நாரத கான சபாவில் அரங்கேறிய நாடகம். இயக்கம்: ஜெ.ரகுநாத். தயாரிப்பு: JB கல்சுரல் ஃபவுண்டேஷன்.
இது இந்நாடக தயாரிப்பாளர் ஜெ. பாலசுப்ரமணியம் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை கொண்ட நாடகம் என சொல்லப்பட்டது.
பெருஞ்செல்வந்தரான சேதுராமன்.. கலைமாமணி விருது பெறுகிறார். அடுத்த சில தினங்களில் அறுபதாம் திருமணமும் நடக்கிறது.
மறுநாளே விவாகரத்து கேட்கிறார் மனைவி. அதற்கு பிள்ளைகளும் ஆதரவளிக்கிறார்கள். இதனை சற்றும் எதிர்பாராமல்... கோபமடைகிறார் சேது. முன்கோபம் இவரது அடிப்படை குணம்.
கலைமாமணி விருது பெற்றதால்.. ஒரு யூட்யூப் சேனலில் இவரை பேட்டி எடுக்க அழைக்கிறார்கள். அதில். தான் இந்த உயர்ந்த நிலைக்கு வர காரணமான தனது தாயின் பெருமைகளை இவர் விவரிப்பதே கதை.
நிறைகள்:
சேதுராமனாக கணபதி, தாய் வேடங்களில் மாலதி சம்பத், வித்யா ராகவ், மனைவியாக கீதா நாராயணன், தந்தையாக VPS ஸ்ரீராமன் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அரங்க அமைப்பு - அமைந்தகரை தாஸ். ஒளியமைப்பு - கலை ரவி. ஒப்பனை - முருகேசன். இசை - லால்குடி கிருஷ்ணன் என அனைத்தும் அருமை.
சேதுராமனின் பக்கத்து வீட்டு நண்பர் கதாபாத்திரத்தில்.. ராமானுஜம் நடித்துள்ளார். நீண்ட வசனம் பேசும் காட்சியில்.. பிசிறு தட்டாமல் அட்டகாசமாக நடித்து அமர்க்களப்படுத்தியுள்ளார் ராமானுஜம்.
தொடப்பக்கட்டை அடி காட்சியை ஸ்லோ மோஷனில் செய்திருப்பது, தலைமுறை மாறுவதை கதாபாத்திர மாற்றம் மூலம் ஒரே காட்சியில் காட்டுவது என இயக்குனராக முத்திரை பதிக்கிறார் இயக்குனர் ரகுநாத்.
ஏழ்மையான குடும்பம் படும் பாடுகள், தனியாளாக ஒரு தாய் அவற்றை சமாளிக்கும் விதங்கள் போன்றவற்றை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
குறைகள்:
சிறப்பு - செருப்பு, தடதட படபட, நே நே நே (நேருக்கு நேர் வித் நேஹா) போன்ற அரதப்பழசான வசனக்கோர்வகைள் இங்கும் உண்டு.
தாயின் உடல்நிலை மோசமடைவதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கே ஒரு அதிர்ச்சியான தகவல் தெரிய வருகிறது.
அதை தனது தந்தை மற்றும் உடன் பிறந்தோரிடம் விவரிக்கிறார்... மருத்துவம் படித்த இளைய மகன். இதை தாய்க்கு தெரியாமல் பார்த்து கொள்வோம் என முடிவெடுக்கின்றனர் குடும்பத்தார்.
இந்த கொடிய நோய் பற்றிய தகவலை தனக்கு அம்மருத்துவமனை செவிலியர் ஏற்கனவே கூறிவிட்டதாகவும்.. தனக்கு தெரியும் என்பதை பிள்ளைகளிடம் சொல்ல வேண்டாமெனவும் கணவரிடம் கூறுகிறார் சேதுராமனின் தாய்.
தாயை மருத்துவமனையில் அனுமதித்த பிள்ளைகளிடம்.. உண்மையை கூறாமல் இருந்திருப்பாரா மருத்துவர்? இத்தனைக்கும் இளைய மகனும் மருத்துவம் பயின்றவர்.
பிறகெப்படி இந்த உண்மை பிள்ளைகளுக்கு தெரியாமல் போகும்? சென்டிமென்ட் சீனை வைக்கும் இடத்தில் லாஜிக் தவறிப்போனது.
பொய் சொல்லுதல், திருடுதல் என இளம் வயதில் தவறு செய்கிறான் சேதுராமன். அதற்கு தாயிடம் தொடப்பக்கட்டையால் முதுகு கிழிய அடியும் வாங்குகிறான்.
பிறகு தாயை தன்னுடன் ஹைதரபாத் வரச்சொல்ல.. அதற்கு மறுப்பு தெரிவித்து.. அதற்கான காரணங்களை சொல்கிறார் அந்த தாய்.
இவ்வளவு புத்திமதிகள் சொல்லியும் திருந்தாத சேதுராமன்.. தனது மனைவியையும் பாடாய் படுத்தி.. பெற்ற பிள்ளைகளையும் மதிக்காத மனிதராகவே தொடர்ந்து வாழ்கிறார்.
சேதுராமனுக்கு கலைமாமணி தந்த காரணமென்ன? சரி. கலைமாமணி மற்றும் பத்ம விருதுகள் தர காரணம் தேவையா என கேட்பதும் புரிகிறது.
ஆனால் இவர் கலைமாமணி விருது பெறும் அளவிற்கு கலைக்கு செய்த சேவையென்ன? அது ஏன் ஓரிரு நிமிடங்கள் கூட காட்சிப்படுத்தப்படவில்லை?
தவறை செய்து. பிறகு அதை உணர்ந்து.. தாயின் காலில் விழுந்து.. மீண்டும் தவறு செய்து..பிறகு மனைவி காலில் விழுந்து.. மகன், மகளிடம் கெஞ்சிக்கதறி..
என்றுமே வாழ்க்கையில் திருந்தாத ஒரு மங்குனியாகவே இருக்கிறார் சேதுராமன்.
வீட்டில் தொடப்பத்தால் வாங்கிய அடியை.. தனது முன்கோபத்தால்.. ரோட்டிலும் வாங்கி இருந்தால் திருந்தி இருப்பார். அந்த நல்ல காரியம் நடக்காததால்.. இறுதியில் தனிமரமாக நிற்கிறார். பாவம்.
மாத்ரு தேவோ பவா - முழு பலனளிக்காத சாணக்ய தந்திரம்.
---------------------
விமர்சனம்:
சிவகுமார்.