நிழல் எனும் AI செயலியை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டிய நாள் நெருங்க.. அதற்கான வேலையில் தீவிரமாக இருக்கிறார் ஆதித்யா. எதிர்பாராத விதமாக ஏற்படும் software bug அவரை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. போதாக்குறைக்கு வீட்டிலும் ஏகப்பட்ட தலைவலிகள். அதை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.
ஆதித்யாவாக சாமிநாதன். இயல்பான நடிப்பு. அவரது தந்தை விஸ்வநாதனாக ஸ்ரீதர் களத்தில் குதித்த பிறகு நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
சில நிமிடங்களே வந்தாலும்.. தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார் கிருத்திகாவாக வரும் காயத்ரி.
வந்த காரியம் ஒன்று. நடந்தது வேறொன்று எனும் அதிர்ச்சியை விவேக் கேரக்டரில் கார்த்திக் பட் வெளிப்படுத்துமிடமும் கலகலப்பு. இதர நடிகர்களும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
காமடி காட்சிகளுக்கென்று இருக்கும் டெம்ப்ளேட் பின்னணி ஒலிகளை முற்றிலும் ஓரங்கட்டிவிட்டு.. கதையின் போக்கோடு ஆரம்பம் முதல் இறுதிவரை கச்சிதமாக இசையமைத்துள்ளார் தக்ஷின். வெகுசிறப்பு!!
ஒரு நகைச்சுவை நாடகத்திற்கு தேவைப்படும் எளிமையான கதையை தேர்வு செய்திருந்தாலும்.. அதை அருமையான திரைக்கதையாக மாற்றி ஒவ்வொரு காட்சியையும் பரபரவென நகர்த்தியுள்ளார் நித்யா கௌஷிக்.
Situational comedy எனும் களத்திற்கேற்ப.. அளந்தெடுத்த வசனங்களின் மூலம் மனம் விட்டு சிரிக்க வைத்துள்ளார் நித்யா கௌஷிக். கூடுதல் வசனம் எழுதி உதவிக்கரம் நீட்டியுள்ளார் ஸ்ரீவத்சன்.
ஒரு நல்ல நகைச்சுவை நாடகத்திற்கு தேவையான அனைத்தையும் ஒருங்கிணைந்து இயக்குனர்களாக வெற்றி பெற்றுள்ளனர் நித்யா கௌஷிக்கும், ஸ்ரீவத்சனும்.
தனிமை - கொண்டாட்டம்
-------------------
விமர்சனம்:
சிவகுமார்.
No comments:
Post a Comment