கோடை நாடக விழா 2026: செய்யாத கொலை

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 35 வது கோடை நாடக விழாவின் பதினோறாவது நாடகம்: தியேட்டர் மெரினா வழங்கிய 'செய்யாத கொலை'. வசனம்: பாம்பே ஞானம். திரைக்கதை, கூடுதல் வசனம் மற்றும் இயக்கம்: லதா வெங்கட்.


மாதங்கியும், சுகுமாரும் குறும்புக்கார தம்பதிகள். இவர்களுடன் வசிக்கிறார் உறவினர் வனஜா. சொகுசு கப்பலில் உல்லாச சுற்றுலா செல்லும்போது சுகுமார் இறந்து போகிறார். இது கொலையா, தற்கொலையா அல்லது விபத்தா என்பதே கதை.

ஆரம்பித்தது முதல்... நாற்பது நிமிடங்கள் வரை பெரிதாக முன்னேறாமல்.. நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது நாடகம். 

முதல் சில காட்சிகளில்..படு செயற்கையான முகபாவம் மற்றும் உடல்மொழியால்..பரதநாட்டியம் ஆடுகிறார் மாதங்கியாக நடித்த ஐஸ்வர்யா. குறும்பென்றால் குறும்பு அப்படி ஒரு குறும்பு. துணைக்குறும்பராக ஹரிநாத் அருண்.. அதாகப்பட்டது மாதங்கியின் கணவர்.. கூடுதல் இம்சை.

ஒருவழியாக இரண்டாம் பாதியில் நடிப்பில் முன்னேற்றம் காட்டி.. நம்மை நிம்மதி பெருமூச்சு விட வைக்கிறார் ஐஸ்வர்யா.

வீட்டு பணிப்பெண் பவானியாக வரும் ஸ்யாமளா ஸ்ரீவத்சனின் நடிப்பு நன்று.

'என் ப்ளானும் அதுதான்' என வனஜா பேசியபிறகும், மாதங்கி மற்றும் அவளது முன்னாள் காதலன் ராம் தனியே சந்திக்கும்போதும் ஒலிக்கும் கிரிதரனின் பின்னணி இசை அற்புதம்.

தியேட்டர் மெரினா குழுவினரின் ஒளியமைப்பும் நாடகம் முழுக்க... அழகாய் பொருந்திப்போகிறது.

நாற்பது நிமிடங்கள் கழித்து 'குறைந்தபட்ச'  உத்திரவாத்துடன் வேகமெடுக்கிறது லதா வெங்கட்டின் திரைக்கதையும், இயக்கமும்.

மையக்கதையை விட்டு வெளியேறாமல்..  வசனங்களை எழுதியுள்ளார் பாம்பே ஞானம். கூடுதல் வசனம் லதா வெங்கட்.

சிறைச்சாலையில்.‌ கைதிகளை பார்வையாளர்கள் சந்திக்க வரும் காட்சியில் 'கைதிகள் சந்திக்கும் இடம்' என எழுதப்பட்டுள்ளது.

கைதிகள்தான் தினமும் பரஸ்பரம் சிறைச்சாலையினுள் சந்தித்து கொள்கிறார்களே? 'கைதிகளை சந்திக்கும் இடம்' என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளனரா எனும் கேள்வியுமுண்டு.

செய்யாத கொலை - எது நடந்ததோ.. அது இரண்டாம் பாதியில் மட்டும் ஓரளவு நன்றாக நடந்தது.

--------------------------

விமர்சனம்:
சிவகுமார்.


No comments:

Post a Comment