தொடுவான மனிதர்கள்

நாள்: 2026. ஜூலை 10
இடம்: ரசிக ரஞ்சனி சபா, மைலாப்பூர்.

எழுத்து: இந்துமதி.
இயக்கம்: குடந்தை மாலி.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ராதிகா. குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கிறார். பணியாற்றும் இடத்தில் ராம்குமார் என்பவருடன் காதல் மலர்கிறது. 

இனி வாழ்க்கையில் வசந்தம் வீசும் என நம்பும் ராதிகா.. அதன் பிறகு வரும் சோதனைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

எழுத்தாளர் இந்துமதியின் தொடுவான மனிதர்கள் எனும் கதை.. பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழ்களில் வெளியாகி.. தனி நூலாகவும் வந்தது.

ராணிமுத்து வார இதழில் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி வெளிவந்தது.

தற்போது இதை நாடக வடிவில் அளித்துள்ளார் குடந்தை மாலி.

இந்துமதியின் இக்கதை ஆரம்பத்தில் நன்றாக துவங்கி இடையில் சில இடங்களில் தொய்வை சந்தித்தாலும்.. அதன் பிறகு விறுவிறுவென நகர்ந்து முடியும்.

பெண்களின் சுயமுன்னேற்றம் குறித்து தனது எழுத்தின் மூலம் இக்கதையில் தனி முத்திரை பதித்தவர் இந்துமதி‌.

இந்நாடகம் காண்போர் 1970 அல்லது 80 களில் இருந்த வாழ்வியல் மற்றும் கதாபாத்திர அமைப்புகளை மனதில் வைத்தபடி பார்த்தால்.. ஒன்றமுடியும்.

அதற்கேற்ற நடிகர்களாக கார்த்திக் மற்றும் ராம்குமார் கேரக்டர்களுக்கு முறையே கணேஷ்  மற்றும் பிரபு ராமச்சந்திரன் ஆகியோரை சரியாக தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

ராதிகா எனும் மைய கதாபாத்திரத்தில் நாஞ்சில் ரேவதி நடித்துள்ளார்.

முதல் காட்சியில் பாவாடை, தாவணி அணிந்தபடி மிக இளம்பெண்ணாக இவர் தோன்றியது.. சற்று பீதியை கிளப்பியது என சொல்ல முடியாது.

மிக அதிகமாகவே பீதியை கிளப்பியது.

அதாவது.. நீதிக்கு தலைவணங்கு படத்தில் எம்ஜிஆர் மற்றும் நம்பியார் இருவரும் தலையில் ஒருகூடை சைஸ் டோப்பாவை வைத்தபடி.. கல்லூரி மாணவர்களாக முதல் காட்சியில் வந்தபோது நாம் அடைந்தோமே....அதே பீதி.

அதன்பிறகு வேலைக்கு செல்லும் இளம்பெண்ணாக புடவையில் வந்தாலும்.. பீதி குறைந்தபாடில்லை.

மிஸ்டர். குடந்தை மாலி. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? 

இந்துமதியின் கதையில் இந்த ராதிகா கேரக்டருக்கு வயது 19.

அதற்கேற்ப இந்நாடகத்தில் ஒரு 30 வயது பெண்ணை நடிக்க வைத்திருந்தால் கூட அவருக்கு 19 வயது என சமாதானம் அடைந்திருக்கலாம்.

மற்றபடி கதையின் போக்கு... பாதி தாண்டிய பிறகு நாஞ்சில் ரேவதியின் கதாபாத்திரம் ஓரளவு நம்பும்படி இருந்தது.



கார்த்திக் எனும் கேரக்டரில் தனியார் நிறுவன முதலாளியாக ஃப்ரெஞ்ச் தாடியுடன் வரும் கணேஷ்.. அந்தக்கால தூர்தர்ஷன் செவ்வாய்க்கிழமை நாடக நடிகர் போல சும்மா நச்சென்று பொருந்திப்போகிறார்.

இவரது வசன உச்சரிப்பு இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.

ராம்குமாராக வரும் பிரபு ராமச்சந்திரன் மற்றும் பாட்டியாக வந்து முக்கிய வசனம் ஒன்றை பேசும் மாலா மாமி ஆகியோரின் நடிப்பு ஓகே.

இந்துமதியின் கதையில் ஆங்காங்கே இருக்கும் அழுத்தம் மற்றும் விறுவிறுப்பு...இந்நாடகத்தில் மேலும் இருந்திருக்கலாம்.

தான் எதற்காக ராதிகாவை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கினார் என கார்த்திக் தரும் விளக்கமும், அதையொத்து பாட்டி பேசும் வசனமும் சிறப்பானவை.

தொடுவான மனிதர்கள் எனும் இந்துமதியின் கதையை இவ்விடங்கள்தான் தூக்கி நிறுத்தும்.

இப்படியொரு நல்ல கதையை நாடகமாக மேடையேற்றிய மாலி அவர்களுக்கு வாழ்த்துகள்.

மேற்குறிப்பிட்ட குறைகளையும் தவிர்த்திருந்தால் சிறந்த நாடகமாக வந்திருக்கும்.

தொடுவான மனிதர்கள் - போதாத உயரம்.

Verdict:
Below Average.

விமர்சனம்:
சிவகுமார் 

--------------------------------------