எண்ணம்: சுரேஷ்வர். எழுத்து: ராதாகிருஷ்ணன். இயக்கம்: ஒய்.ஜி. மகேந்திரன்.
உயர்பள்ளி தேர்வுகளில் தொடர் தோல்வியை தழுவுகிறான் தேவா(ரம்). கான்ஸ்டபிளாக இருக்கும் அவனது தாய்.. இதனால் மிகவும் நொந்து போகிறார். தன் மகனை போலீஸ் அதிகாரியாக பார்க்க வேண்டுமென்பதே அவரது கனவு.
தேவாரத்திற்கு உதவ.. ஆவிகளாக வரும் வரதுகுட்டி மற்றும் ஆனந்த் என்ன செய்கிறார்கள் என்பதே கதை.
தேவாரமாக நடித்த கார்த்திக் எனும் இளைஞர் தேவையான நடிப்பை தந்து கவனத்தை ஈர்க்கிறார். நாடக உலகிற்கு நல்வரவு. நியாயப்படி இவரது கேரக்டர் பெயர்தான் நாடகத்தின் டைட்டிலாக இருந்திருக்க வேண்டும்.
குடிகாரராக சுரேஷ்வர். தன் பங்களிப்பை போதுமானவரை தந்துள்ளார்.
நன்றாக நடிப்பதை விட.. ஸ்டான்ட் காமடி செய்வதே போதுமென முடிவெடுத்து விட்டார் போல.. மகேந்திரன்.
இவர் இந்த மேடையில் செய்யும் பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கும்.. இந்த கதைக்குமான பிணைப்பு தாமரைக்கும், தண்ணீருக்குமானது. ஒட்டவே இல்லை.
கச்சிதமான சென்னைத்தமிழ் பேச பல வருடமாக திரைப்படம் மற்றும் நாடகங்களில் மகேந்திரன் முயன்று வருவதை போல..மதுவந்தியும் முயல்கிறார். ஆனால் நடந்தபாடில்லை. இந்த நாடகத்திலும் சென்னைத்தமிழ் இவரிடம் சிக்கி பேஜார் ஆகிறது.
கல்வித்துறை அதிகாரியின் காலில் விழுந்து மதுவந்தி கெஞ்சி அழும் காட்சியில் காமடி நன்றாக உள்ளது.
'பரீட்சைக்கு நேரமாச்சு' படமே சுமாராகத்தான் இருக்கும். குறிப்பாக..க்ளைமாக்ஸ் மொக்கையாக முடியும்.
ஆனால் சிவாஜி கணேசன் மற்றும் வரதுக்குட்டியாக வரும் ஒய்.ஜி.மகேந்திரனின் நடிப்பு.. நிஜத்தில் தந்தை - மகனை பார்ப்பதுபோல் யதார்த்தமாக இருக்கும்.
ஆங்காங்கே இருவரின் ஓவர் ஆக்டிங்கும் உண்டு.
குறிப்பாக சென்னைத்தமிழை கொத்து பொரோட்டா போடும் ஆனந்த் எனும் கேரக்டரில்.. மகேந்திரனின் வசன உச்சரிப்புகளை சொல்லலாம்!!
படத்தில்.. சிவாஜி மற்றும் மகேந்திரனை விட சிறப்பாக இயல்பாக நடித்தவர் நடிகை சுஜாதா. ஆனால் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அப்படத்தில் சாதி, மத, அரசியல் வெங்காயங்கள் இருக்காது.
ஆனால் இரண்டாம் பாகம் எனும் பெயரில் நாடகமாக வந்துள்ள இந்த 'வரதுகுட்டி' எனும் பாடாவதி நாடக காவியத்தில்...
வழக்கம்போல சபா நாடகங்களில் இருக்கும்.. திமுக எதிர்ப்பு, ஹிந்தி, சனாதனம், இட ஒதுக்கீடு என ஏகப்பட்ட அறுவை வசனங்கள்.
'இந்த தமிழ்நாட்டில் இந்த பிரச்னை.. அந்த பிரச்னை' என்கிறார் மகேந்திரன். இவர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர் போல..!!
இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை இடம்பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களில் அதிகம் பேர் எந்த சாதியை சேர்ந்தவர்கள்?
டிவி சேனல் கிரிக்கெட் வர்ணனையில் இடம்பெற்றுள்ள நபர்களில் அதிகம் பேர் எந்த சாதி?
வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்கள், பிரபலமான கோவில்கள் உள்ளிட்டவற்றில் ஆக்ரமித்து இருப்போர் எந்த சாதி?
இவையெல்லாம் திறமையால் மட்டுமே கிடைத்ததா அல்லது சாதிப்பாசத்தால் பெற்ற இட ஒதுக்கீடா?
தமிழ்நாட்டின் தாய்க்கலை என்றால்.. அது மேடை நாடகம்தான். அக்கலை அனைத்து மொழி, இனம், சாதி, மதத்தினரும் விரும்புவதாகவும், சார்புத்தன்மையற்ற அரசியல் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பிறந்தது முதல் இன்றுவரை தமிழகத்தில் வாழ்ந்து, தமிழக மக்களின் ஆதரவால் சினிமா மற்றும் நாடகத்தில் (பொருளாதார ரீதியாக மட்டும்) உயர்ந்துவிட்டு... அவர்களையே நக்கல் அடிப்பது மலிவான புத்தியல்லவா?
உங்கள் கட்சி ஆளும் குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் கல்வியறிவு எந்த அழகில் உள்ளது? அதை மேடையில் பேச திராணி உண்டா?
தமிழக இளைஞர்கள் சரியில்லாததால்.. வடநாட்டில் இருப்பவர்கள் இங்கே வேலைக்கு வருவதாக இதில் ஒரு வசனம் வருகிறது.
வடநாட்டு மாநிலங்களில் படிக்க போதுமான கட்டமைப்பு இல்லை. அதனால் வேலைவாய்ப்பு இன்றி தமிழகத்திற்கு பஞ்சம் பிழைக்க வருகிறார்கள். அதுதானே உண்மை.
12 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பிறகும்.. பல மாநிலங்களை ஆண்ட பிறகும்... ஏன் அம்மாநில மக்களுக்கு போதுமான கல்வி மற்றும் வேலைகளை தரமுடியவில்லை என... அவர்களை கேளுங்கள் சார். அதற்கு தைரியம் உள்ளதா?
சத்தியமாக கேட்க மாட்டீர்கள்.
ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்கள் என்றாலே.. நகைச்சுவை மற்றும் கருத்து இருக்கும் என்பதால்.. அது 10% ஆவது ரசிக்கும்படி இருந்தது.. ஒருகாலத்தில்.
ஆனால் கடந்த சில வருடங்களாக..10 சபா நாடகங்களில் 9 நாடகங்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பிரச்சார மேடைகளாக மாறிவிட்டன.
ஆகவே பொதுவான நாடக ரசிகர்கள் கண்டுகளிக்க பெரும்பாலான சபா நாடகங்களில் ஒரு எழவுமில்லை.
பத்தோடு பதினொன்னு. அத்தோட இதுவும் ஒன்னு என வந்துள்ளது இந்நாடகம்.
பார்த்து அனுபவிக்க விரும்பினால்.. அது உங்கள் தலையெழுத்து.
வரதுகுட்டி - வலது சுவர் Vara Tea.
------------------------
குறிப்பு:
நாடகங்கள் குறித்த இறுதி மதிப்பீடு... இனி ட்ராஃபிக் சிக்னல்கள் மூலம் விமர்சனத்தின் முடிவில் வெளியாகும்.
இன்று முதல் சிக்னல்கள் இயங்க ஆரம்பிக்கின்றன என்பதை நாடகத்துறையினர் மற்றும் நாடக ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
Varadhu Kutty - Verdict:
Disaster
Verdicts List:
1. Bad
2. Disaster
3. Average
4. Good
5. Excellent
Upcoming Reviews:
* Koohoo (Malayalam) - Arul Lal.
* Chikku Bukku Kalyanam - Ved Arun Kumar.
* Thoduvaana Manidhargal - Kudandhai Maali.
* Clone Banega Crorepati - Giridharan.
விமர்சனம்:
சிவகுமார்.
-----------------------------------