சாருகேசி


சுரேஷ் கிருஷ்ணா மீது ரஜினிகாந்திற்கு அப்படியென்ன பழிவாங்கல் உணர்வு இருக்கிறது என்று தெரியவில்லை.

சத்யா, பாட்சா, ஆளவந்தான் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஒருவரை பலியாடு போல இழுத்து வந்து 'பாபா' என்கிற விசித்திரமான படத்தை இயக்க வைத்தார்.

ரஜினிக்குள் இருந்த 'ஆன்மீக உணர்வு' குபீர் என்று பொங்கியதற்கு பலியானவர் சுரேஷ் கிருஷ்ணா.

பாபா படம் வெளிவருவதற்கு முன்   அப்படியொரு பில்டப். சுஜாதா சொன்னது மாதிரி ஜோதிடப் பத்திரிகைகள் முதற்கொண்டு அத்தனை பத்திரிகைகளும் நாளிதழ்களும் அந்தப் படத்தைப் பற்றி தொடர்ச்சியாக செய்திகளை இறைத்துக் கொண்டே இருந்தன. பாபா மோதிரம், பாபா கர்ச்சீப், பாபா கோமணம் என்று இன்னொரு பக்கம் வணிகம் அமர்க்களப்பட்டது.

அதிக பில்டப் பாபா படத்தின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. இது கடந்த கால வரலாறு.

*

அப்படியும் சுரேஷ் கிருஷ்ணா மீது ரஜினிகாந்த்திற்கு பிரச்சினை தீரவில்லை போல.

வலுக்கட்டாயமான அழைப்பின் பேரில் சென்ற ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தை பார்த்து தொலைத்தோமா, சைலண்ட்டாக வீடு திரும்பினோமோ என்று இல்லாமல், 'சாருகேசி' என்கிற நாடகத்தை திரைப்படமாக ஆக்க வேண்டும் என்கிற யோசனையை சொன்னவர் ரஜினிகாந்த்தாம். விளைவு சுரேஷ் கிருஷ்ணா என்கிற பலியாட்டுக்கு மீண்டும் ஒரு சோதனை. பாவமய்யா மனுஷன்.

*

சரி, இனி படத்தைப் பற்றி பார்ப்போம்.

மைலாப்பூர் சபா நாடகத்தின் அத்தனை கூறுகளையும் கூறுகெட்ட தனங்களையும் கொண்ட படம்தான் சாருகேசி. தமிழ் சினிமா எத்தனையோ நவீனமான நுட்படங்களுடன் மாறிக் கொண்டு வருகிறது. ஆனால் இன்னமும் தூர்தர்ஷன் நாடகம் மாதிரியே இதை எடுத்திருக்கிறார்கள்.

சிந்து பைரவி, சிகரம், முதல் மரியாதை என்று என்னென்னமோ திரைப்படங்களின் கதைகளை இந்தப் படம் நினைவுப்படுத்தி சென்றது.

*

படத்தின் பிரதான பாத்திரம் ஒய்.ஜி.மகேந்திரன். கர்நாடக இசை வித்வான்.

தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான அம்சம் இது.

நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிப்பிற்கு எளிதில் கூடு பாய முடியும். அது பிரமாதமாயும் அமைந்து விடும். நாகேஷ் முதல் வடிவேலு வரை பல உதாரணங்களை சொல்ல முடியும்.

ஆனால் இதில் விதிவிலக்கானவர் ஒய்.ஜி.மகேந்திரன்.

அவருடைய நகைச்சுவை காட்சிகளுக்கு கூட எப்போதாவது அபூர்வமாக புன்னகைத்து விட முடியும். ஆனால் அவர் சீரியஸாக நடித்த பாத்திரங்கள் ஒன்று கூட கவர்ந்தில்லை.

ஒய்.ஜி. சிவாஜியின் பரம ரசிகர். எனவே அதைப் போலவே தீவிரமான காட்சிகளில் பாவ்லா செய்வார். ஆனால் கண்றாவியாக இருக்கும். சாருகேசியும் அந்த வரிசையில் இணைகிறது.

*

போதாதற்கு சுஹாசினி, மதுவந்தி, தலைவாசல் விஜய் என்று நடிப்பைப் பிழிந்து தரும் கூட்டம் வேறு.

படத்தின் ஆரம்பக் காட்சியே அமர்க்களம். 'முருகா நீதான் காப்பாத்தணும்' என்று ஒருவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, சுஹாசினியின் என்ட்ரி.  (டைரக்டரின் குசும்பான டச்)

நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற ஆரம்ப காலம் முதல் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும் வரைக்கும் கூட சுஹாசினியின் நடிப்பு நன்றாகத்தான் இருந்தது. அதற்குப் பிறகுதான்...

*

மகா சலிப்பாக சென்று கொண்டிருந்த சமயத்தில் வில்லத்தனமாக வெளிப்பட்ட ரம்யா பாண்டியனின் நடிப்பு சற்று ஆறுதலை அளித்தது. பிறகு அவரையும் உணர்ச்சிப்பிழம்பில் சோ்த்து விட்டார்கள்.

பகுத்தறிவு ஃபார்முலாவில் ரசகுல்லா மாதிரி ஊறிப் போயிருக்கும் சத்யராஜிற்கு இயேசு கெட்டப்பை போட்டு விட்டு பரமசிவன் உருவகத்தை கொடுத்து விட்டிருக்கிறார். அவரும் வாழைக்காய் பஜ்ஜி மூலம் வாழ்க்கையின் தத்துவத்தைப் பிழிந்தெடுக்கிறார்.

சத்யராஜின் பாத்திரம் தேவதூதன் என்பதை எஸ்டாபிளிஷ் செய்து காலியான கடற்கரை மணலில் நடக்க விட்டு லாங் ஷாட்டில் அவ்வப்போது காட்டியிருக்கிறார்.

*

Spoiler alert (ம்க்கும் இது ஒண்ணுதான் குறைச்சல்)

தந்தையை இழந்த ரம்யா பாண்டியனை சிறுவயதிலிருந்தே கல்விக்கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தி போஷிப்பவர் ஒய்.ஜிதான். ஆனால் அவருக்கே அந்த கேரக்டரை அடையாளம் தெரியாது என்பதாக காட்டியிருப்பது லாஜிக் பிழை. நண்பரின் மகளை சந்தித்தே இருக்க மாட்டாரா என்ன?

கர்நாடக வித்வான் இறுதியில் அல்ஜைமர் வியாதி வந்து மறைந்து போகிறார். அப்படியே நாமும் இந்தப் படத்தை ஒரு கெட்ட கனவாக மறந்து போக வேண்டியதுதான் நல்லது.

--------------------------

Review by:

Suresh Kannan,
Film critic.

No comments:

Post a Comment