கோடை நாடக விழா 2022 - தத்புருஷாய

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஆறாவதாக   அரங்கேறிய நாடகம் சாய் ராம் கிரியேஷன்ஸ் வழங்கிய தத்புருஷாய. கதை, வசனம், இயக்கம்: பாரதிவாசன். 

வெற்றிகரமாக இயங்கி வரும் மெடிக்கல் நிறுவனம் ஒன்றின் முதலாளியாக இருப்பவர் ஜெகன்னாதன். அவரது நீண்டநாள் அல்லக்கையும், இந்நிறுவனத்தின் யூனியன் தலைவராகவும் இருப்பவர் மணிவேலன். வயதான பிறகு.. தனது நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை மகன் கோகுலுக்கு தருகிறார் ஜெகன்னாதன் ஐயா. 

'நிறுவனத்தை இப்படித்தான் நடத்த வேண்டும்' என்கிறார் ஜெகன்னாதன் ஐயா. 'இல்லை அப்படித்தான் நடத்துவேன்' என வாதம் செய்கிறான் கோகுல். 'தந்தை பேச்சையும், தொழிலாளர் நலனையும் மதிக்காமல் இப்படி செய்வது சரியா?' என்று கோகுலை கேட்கிறார் மணிவேலன்.       

இதே பாணியில் மூவரும் பேசிக்கொள்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்ல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்ல்ல்கிறார்கள். 

என்ன? ஒரே வரியை ஐந்து முறை படித்ததற்கு கோவம் வருகிறதா? இதே காட்சி, வசனத்தை திரும்ப திரும்ப பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? 

இப்படியே ஒரு மணிநேரம் நாடகம் ஓடிவிடுகிறது. கதையென்று ஏதோ ஒன்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும்.. அதன்பிறகு ஜெகன்னாதன் ஐயாவின் ஹாலில் பாயை விரித்து... மல்லாக்க படுத்து குறட்டை விட ஆரம்பித்து விடுகிறது கதை. நாமும்தான்!! 

மொத்த நாடகத்தில் ஜெகன்னாதன் ஐயாவாக நடித்த விக்னேஷ் செல்லப்பனின் நடிப்பு மட்டுமே குறிப்பிடும்படி இருந்தது. பல்வேறு மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து அதில் அர்ப்பணிப்புடன் நடித்து பெயர் வாங்கும் நடிகரான விக்னேஷ்.. இங்கும் தனது வயதை மீறிய பெரியவர் வேடத்தை தாங்கி.. அருமையான நடிப்பு மற்றும் தெளிவான உச்சரிப்பால் மனதை கவர்கிறார்.

இவரது மகன் கோகுலாக அருண். முதல் சில நாடகங்களை ஒப்பிடுகையில் இம்முறை நல்ல முன்னேற்றம். அதேநேரம் ரசிகர்கள் இருக்கும் திசையை நோக்கி அடிக்கடி வசனம் பேசுவதை குறைத்தல் நலம்.

பாரதிவாசனின் இந்நாடகத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஏதேனும் ஒன்று சரியில்லாமல் இருந்தால் பரவாயில்லை. நான்குமே கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்கிறது.  

உப்மா நாடகங்கள் எடுப்பதில் தங்க மெடல் வாங்கிய இவர்... அதில் உப்மாத்தனமாக நடிக்கவும் செய்வதுண்டு. இறை அருளால் இம்முறை ஒரே ஒரு காட்சியில் மட்டும் தரிசனம் தந்துவிட்டு இவர் சென்றது பெருமகிழ்ச்சி. ஆனால் இவரது இடத்தை மணிவேலன் கேரக்டரில் நடித்த MD மூர்த்தி என்பவர் நிரப்பி விட்டார் என்பது வழக்கமான அதிர்ச்சி தகவல்.

நாடக உலகில் உப்மா கேரக்டர்களுக்கு என்றே நேர்ந்துவிடப்பட்ட நடிகர்கள் சிலர் இருப்பார்கள். அதில் மூர்த்தியும் ஒருவர். இவர் பேசும் வசனம், உடல்மொழி, டோப்பா.. என அனைத்துமே...அடடா!!  

போதாக்குறைக்கு உமா - பிரகாஷ் தம்பதியர் வரும் காட்சிகள் அனைத்திலும் உப்மா வாசம் தூக்கலாக இருக்கிறது. இக்கேரக்டர்களில் லட்சுமி மற்றும் சுரேஷ் நடித்துள்ளனர். 

தம்பி சுரேஷ்.. எதற்கு ஒவ்வொரு முறையும் கையை காலை ஆட்டி காமடி செய்கிறீர்கள்? சாதாரணமாக நடித்தால் போதாதா? நாகேஷ் போன்ற பிரபல நடிகர்களை காப்பி அடிக்காமல்.. உங்கள் கேரக்டருக்கு எது தேவையோ அதை மட்டும் பின்பற்றுங்கள். 

இறுதிக்காட்சியில் வரும் திருப்பத்திற்காக இவ்விருவரும் பயன்படுவார்கள் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் வள வள கொழ கொழவென்று பேசி அறுக்கிறார்கள்.

ஜெகன் ஐயாவிற்கு ஒரு ஃப்ளாஷ்பேக். அதில் வடநாட்டு சேட் ஒருவரின் வீட்டில் உள்ள அனைவரும் கொல்லப்படுகிறார்கள். அவரை காண செல்கிறார் ஜெகன். ஹாலில் இருவரும் பேசும்போது உள்ளே இருக்கும் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. உடனே ஓடிப்போய் குழந்தையை தூக்கியபடி ஹாலுக்கு வருகிறார் ஜெகன்.

யோவ் சேட்.. உனக்கு கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருக்கா? கொலை செய்யப்பட்டு கிடப்பவர்கள் மத்தியில் இருக்கும் குழந்தையை ஹாலுக்கு தூக்கி வந்து ஆறுதல் படுத்தி, உணவளித்து தூங்க வைக்க வேண்டும் அல்லது பக்கத்து வீட்டாரிடம் சொல்லி பார்த்துக்கொள்ள சொல்ல வேண்டும்.    

அதைவிட்டுட்டு.. ஜெகன் வர்ற வரைக்கும் ஹால்ல என்னத்த கிழிச்சிட்டு இருந்தீரு? 

சேட் என்றாலே நேரு தொப்பி போட்டுக்கொண்டு, நம்மள் வர்றான், நிம்மள் போறான் என்றுதான் பேசுவார்களா? ரவுடி என்றாலே அவன் ராயபுரம், காசிமேட்டில்தான் இருப்பானா?

இந்த புளித்துப்போன டெம்ப்ளேட் சிந்தனைகளை எல்லாம் 2023 ஆம் ஆண்டு போகி தினத்தன்று பழைய பொருட்களுடன் சேர்த்து கொளுத்தி விடுங்கள் இயக்குனரே.        

ரசிகர்களுக்கு அதிரடி ட்விஸ்ட் தருகிறேன் எனும் பெயரில் மூன்று இடங்களில் பரபரப்பு காட்டுகிறார் இயக்குனர். ஏற்கனவே தூக்க மாத்திரை போட்டுவிட்டு தூங்கிய மன நிலையில் இருந்த நமக்கு... எந்த ட்விஸ்ட் வந்தால் என்ன? 

நாடகம் முடியும் நேரத்தில்... 'மன்னிப்பு கேட்கிறவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் மாமனிதன்' எனும் ரேஞ்சுக்கு சில தத்துவங்கள் வந்து விழுகின்றன. ஆஹா.. அருமையான புதிய சிந்தனை!! 

அரதப்பழசான கதையை தேர்வு செய்வதைக்கூட கடவாய்ப்பல்லை கடித்தபடி பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அனைவரும் ரசிக்கும்படியாக நாடகமாக்கம் செய்யாவிட்டால்... மொத்த பற்களையும் கடித்து துப்பி..  செட் பல் மாட்ட வேண்டிய நிலைதான் நமக்கு வரும்.  அப்படி ஒரு காவியம்தான் இது. 

கோடை நாடக விழாவின் ஒண்ணா நம்பர் உப்மா நாடகத்தை அரங்கேற்றி.. அடுத்து நாடகம் போட இருப்போருக்கு கடும் சவால் விடுத்துள்ளார் பாரதிவாசன். இந்த முறையும் சிறந்த உப்மா நாடகத்திற்கான தங்க மெடலை இவரே வெல்வாரா அல்லது இன்னொருவர் தட்டிப்பறிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நல்ல கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனராக மீண்டும் வலம் வர... உங்கள் சிந்தனையில் மிகப்பெரிய முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆற அமர யோசித்து... மற்ற நாடகங்களையும் பார்த்து.. நீங்கள் எங்கே பின்தங்கி இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, மாற்றங்களுடன் வாருங்கள் பாரதிவாசன் ஐயா. 

இல்லாவிட்டால் மிகவும் கஷ்டம்....(எங்கள் நிலைமை).

நேற்று நாடகம் நடைபெற்ற நேரத்தில்... நாரத கான சபாவின் அனைத்து கதவுகளுக்கும் திண்டுக்கல் பூட்டால் வெளித்தாழ்ப்பாள் போடாமல்... சுலபமாக தப்பித்து ஓட உதவிய நிர்வாகத்தினர், ஊழியர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி.   

தத்புருஷாய - காலாவதியான உப்புசப்பில்லாத உப்மா. 

---------------------------------

விமர்சனம் - சிவகுமார். 


No comments:

Post a Comment