கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஐந்தாவதாக அரங்கேறிய நாடகம் தியேட்டர் மெரினாவின் ஆரஞ்சு. கதை, வசனம்: ஜவஹர் சேகர். இயக்கம்: ஆர். கிரிதரன்.
திரைப்பட இயக்குனர் ஆக வேண்டுமென ஆசைப்படும் இளைஞன்.. தயாரிப்பாளர் ஒருவருக்கு கதைகள் சொல்கிறான். அவை எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. 'குழந்தைகள் ஃபேன்டஸி' பாணியில் கதை இருந்தால் சொல். அதுதான் வெற்றி பெறும்' என்கிறார்.
ஐந்தறிவுள்ள உயிரினங்கள் சில... ஆறறிவுள்ள மனிதர்களாக மாறி நம்மிடையே உலவினால் ஏற்படும் விந்தைகள், பிரச்னைகள் எப்படி இருக்கும் எனும் கதையை யோசிக்கிறான் அந்த இளைஞன். இதுதான் ஆரஞ்சு நாடகத்தின் கதைக்களம்.
இந்நாடகத்தின் முக்கிய பலமாக இருப்பது நடிப்பு. பெரியோர் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக ஒளியமைப்பு (குணா, மனோ லைட்ஸ்), பாடல்கள் மற்றும் பின்னணி இசை (தக்ஷின், கார்த்திக்) ஆகியவை அதிகபட்ச தரத்துடன் மனதை கவர்கின்றன.
முதல் சில காட்சிகளில் நகர ஆரம்பிக்கும் கதை... அதன் பிறகு அரைமணி நேரத்திற்கு நகைச்சுவை எனும் வட்டத்தில் மட்டுமே சுழல்கிறது. குடும்பத்தலைவர் ராமகிருஷ்ணனுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைக்கு பிறகே மீண்டும் சுறுசுறுப்பாக எழுந்து ஓட ஆரம்பிக்கிறது கதை.
விலங்குகளின் முன்பாக தரிசனம் தரும் கடவுளிடம் 'நீங்கள் லட்சுமியா, சரஸ்வதியா, பார்வதியா?' என வினா எழுப்ப.. அதற்கு கிடைக்கும் விடை 'நான் அனைவருக்கும் பொதுவான கடவுள். உலகை இயக்கும் சக்தி'.
பொதுவான கடவுள் என்று கூறினாலும் இந்துக்கடவுள்களுக்கு விருப்பமான வண்ணம் என்று 'கட்டமைக்கப்பட்டு' இருக்கும் ஆடை நிறத்துடன் அக்கடவுள் காட்சி தருவது நகைமுரண்.
மேடையின் நடுவில் ஒரு வீட்டின் ஹால். இடதுபுறம் சமையலறை என்று செட் போடப்பட்டுள்ளது. பல்லாண்டுகாலமாக மேடை நாடகங்களில் வெறும் டம்ளரில் காஃபி குடிப்பது போல பாவனை செய்வது, சமையல் செய்வது போன்ற பாவனைகள் ஆகியவற்றை தவிர்த்து நிஜத்தில் காண்பது போன்ற உணர்வினை அளிப்பது நல்ல முன்னேற்றம். இங்கும் அப்படியே.
'மனிதர்களாக மாற ஆசைப்பட்டதன் பலனை அனுபவித்து விட்டோம்' என்று கடவுளிடம் கூறுகின்றன விலங்குகள். அதற்கு கடவுள் கூறுகிறார் 'இப்போது புரிகிறதா.. விதியையும், கர்மாவையும் மாற்ற இயலாது'
குழந்தைகளுக்கான ஃபேன்டசி என்பது ஒரு திரைப்படத்திற்கான கதை. அது சொல்லப்படுவது ஒரு மேடை நாடகத்தில்.
விதியை மதியால் வெல்லலாம், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்' என்று தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை சிறார்களுக்கு போதிப்பதே பொருத்தமான நீதிப்பாடமாக இருக்கும். விதி, கர்மா எனும் கோட்டை கிழித்து அவர்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.
நல்ல நடிகர்கள், சிறந்த ஆடை அலங்காரம், தரமான தொழில்நுட்பம், குழந்தைகள் ரசிக்கும் நகைச்சுவைகள் என பாராட்டும் அம்சங்கள் இருப்பினும்... சீரான கதையோட்டம், வலுவான திரைக்கதை போன்றவை பின் தங்கி இருக்கின்றன.
நகைச்சுவையான பொழுதுபோக்கை விரும்பும் சிறார்கள் கண்டு ரசிக்கலாம்.
ஆரஞ்சு - ஆரஞ்சு சிக்னல்.
---------------------------------------
விமர்சனம்: சிவகுமார்.
No comments:
Post a Comment