கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் நான்காவதாக அரங்கேறிய நாடகம் ப்ரசித்தி க்ரியேஷன்ஸ் வழங்கிய எதிர்வினை. எழுத்து மற்றும் இயக்கம்: அம்பி ராகவன்.
செல்வந்தர் வீட்டுப்பிள்ளை அபிஷேக் ஒரு கல்லூரி மாணவன். போதை, பெண்கள் என மனம்போல வாழ்கிறான். பாசம் போன்ற சென்டிமென்ட் எல்லாம் அவனுக்கு பிடிக்காது. ஒருநாள்.. விளையாட்டுத்தனமாக கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து மிரட்ட.. அதனால் அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள், அவனால் பிறருக்கு ஏற்படும் இன்னல்களை சொல்லும் கதை.
முதல் சில நிமிடங்களில் அபிஷேக் ஆக வந்த மகேஷ் மற்றும் ராஜிவ் ஆக நடித்த வெங்கடேஷ் இருவரும் நடிக்க தடுமாறினாலும்.. அதன் பிறகு சுதாரித்து கொண்டனர். சரியாக வசனங்களை பேச வேண்டும் என்கிற பதட்டம் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்த அம்பி ராகவனை தவிர்த்து மற்ற பலருக்கும் இருந்தது. அனுபவம் மிக்க நடிகையான லட்சுமி உட்பட. ஆங்காங்கே வசனங்களை தவறுதலாக உச்சரித்தனர்.
மேடைக்கு பின்னே மைக் மூலம் பேசும் கதாபாத்திரங்களின் குரல் தொழில்நுட்ப இடையூறால் சில இடங்களில் நமக்கு கேட்காமல் போனது. இன்னும் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கலாம்.
அம்பி ராகவனின் நேர்த்தியான நடிப்பு மட்டுமே ஆறுதல். உரக்க கத்தி, ஆவேசமும் - விரக்தியும் கலந்த நடிப்பை நன்கு தந்திருக்கிறார் மாஜேஷ்.
வாய் பேச இயலாத தந்தையாக ஆனந்த் ஸ்ரீனிவாசன். பல்வேறு நாடகங்களில் இவர் சிரத்தையாக நடித்திருப்பினும் ஏனோ ஒட்டாமல் போகும். ஆனால் இம்முறை வித்யாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
இசையமைப்பு விஸ்வஜெய். குடும்ப சென்டிமென்ட் மற்றும் க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள கதைக்கு தன்னாலான பணியினை செய்துள்ளார். நாடகம் முழுக்க பின்னணி இசையை ஒலிக்க விட்டிருக்க வேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. அதேநேரம் அவ்வப்போது நாடகத்தில் ஏற்படும் தொய்வினை இந்த இசைதான் சரி செய்கிறது.
பல இடங்களில் காட்சிக்கு பொருத்தமாகவும், சில இடங்களிலும் பொருந்தாலும் இருக்கிறது விஸ்வஜெய்யின் வேலைப்பாடு.
அபிஷேக்கை ஆட்டுவிக்கும் மர்ம நபர் யார் எனும் ஆர்வம் நம்மையும் தொற்றுகிறது. ஆனால் அதே பரபரப்பு நாடகம் முழுக்க இருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.
நீதிமன்றத்தில் அபிஷேக்கிற்கு எதிராக...அவனது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி ஆதாரத்தை சமர்ப்பிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் சரத் (அம்பி ராகவன்).
'சிறந்த முயற்சி எடுத்து இந்த ஆதாரத்தை ஒப்படைத்துள்ளது காவல்துறை. இந்த வீடியோவின் அடிப்படையில் அபிஷேக் குற்றவாளி என்று உறுதியாகிறது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை' என தீர்ப்பளிக்கிறார் நீதிபதி.
நீதிபதி ஐயாவிற்கு இரு முக்கிய கேள்விகள்:
1. குற்றம் நடக்கும் இடத்தில்.. அதுவும் ஒரு வீட்டின் ஹாலில் இருக்கும் சிசிடிவி கேமராவை கைப்பற்றுவது போலீஸுக்கு மிக எளிமையான வேலை. இதை போற்றிப்பாராட்ட என்ன இருக்கிறது?
2. வீடியோவில் அபிஷேக் கொலை செய்தான் என்பது எப்படி 100% உறுதியானது?
தன்னை ஆட்டுவிக்கும் நபரிடம் கெஞ்சி கதறுகிறான். அவர் சொல்வதை எல்லாம் செய்கிறான். அந்த சிசிடிவியில் அவனது ரியாக்சன்கள் அனைத்துமே உள்ளதே!!
அபிஷேக் குற்றவாளி என்றால் அவன் கொலை செய்வதிலும், தடையங்களை மறைப்பதிலும் மட்டும்தான் முனைப்பாக இருப்பான். அப்படி எதுவும் சிசிடிவியில் பதிவாகவில்லை.
ஆகவே இந்த ஆதாரத்தை அடுத்த கட்ட விசாரணைக்கு பயன்படுத்தலாமே தவிர.. நேரடியாக தண்டனை வழங்க வேண்டிய அவசியமென்ன?
சரி. அடுத்த விஷயத்திற்கு வருவோம். ஸ்வேதா எனும் பெண்ணுடன் நட்பு பாராட்டுகிறான் அபிஷேக். ஒரு கட்டத்தில் அவளுடன் மோதல் ஏற்படுகிறது. பிறகு தனது நண்பன் ராஜீவின் தங்கையான வர்ஷாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்கிறான் என்று சொல்லப்படுகிறது.
வர்ஷாவின் வீட்டிற்கு சில சமயம் அபிஷேக் வந்து சென்றதாகவும் அசிஸ்டன்ட் கமிஷனர் குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு வந்த காட்சி ஒன்றில் 'தனது தங்கை வாய் பேச இயலாதவள். தாழ்வு மனப்பான்மை கொண்டவள். ஆகவே அவளுக்கு நட்பு வட்டம் இல்லை' என ராஜீவ் கூறியிருந்தான்.
அப்படியிருக்க... எந்நேரமும் வீட்டில் இருக்கும் ராஜீவ் & வர்ஷாவின் தந்தை தேவராஜுக்கு அபிஷேக் வந்து சென்றதை பார்க்க ஒருமுறை கூடவா சந்தர்ப்பம் அமையவில்லை?
ரேப், கற்பழிப்பு போன்ற வார்த்தை பயன்பாடுகளை தற்கால நாகரீக சமுதாயம் தவிர்த்து வருகிறது. செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்களும் இவ்வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. மாற்றாக பாலியல் துன்புறுத்தல், Sexual Abuse, Sexual Assault என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே இதை இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு கதையின் முக்கியமான திருப்புமுனை எதுவாக இருக்கிறதோ.. அதை நேர்த்தியாக எழுத்திலும், மேடையிலும் கொண்டுவர வேண்டும். அப்படி பார்க்கையில் சிசிடிவி பற்றி இங்கு சொன்னதைப்போல இன்னொரு முக்கியமான இடமும் உண்டு.
வர்ஷாவை பாலியல் துன்புறுத்தல் செய்து அபிஷேக் கொன்றான் என்பதை மேடையில் காட்சிப்படுத்த இயலாது மற்றும் கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால் அவளை ஆரம்பத்தில் அபிஷேக் எப்படி பின்தொடர்ந்தான், சீண்டினான் (Stalking), அதனால் அவள் எப்படி மன உளைச்சலுக்கு ஆளானாள் என்பதை காட்சி மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால்தானே வர்ஷா இறக்கும்போது அவள் மீது நாடகம் பார்ப்போருக்கு பரிதாபமும், அபிஷேக் மீது கடும் கோபமும் வரும். இந்த முக்கியமான கட்டத்தை இயக்குனர் ஏன் தவற விட்டார்?
க்ரைம் த்ரில்லர் நாடகங்களில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம்.
இப்படியான கேள்விகள் இருப்பினும்..பெரியளவில் பொறுமையை சோதிக்காமல் ஒரு மாறுபட்ட களத்தை தேர்வு செய்திருப்பது நன்று. இனி ப்ரசித்தி சார்பில் வரும் நாடகங்களில் நடிகர்களுக்கு நல்ல பயிற்சியளித்து மேடையில் ஏற்ற வேண்டும்.
எதிர்வினை - க்ரைம் நிறைவு. த்ரில் குறைவு.
----------------------------------------------------
விமர்சனம்: சிவகுமார்.
No comments:
Post a Comment