கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஏழாவதாக அரங்கேறிய நாடகம் சத்யா சாய் க்ரியேஷன்ஸ் வழங்கிய மாமா மாப்ளே 2.0. கதை, வசனம்: எழிச்சூர் அரவிந்தன் இயக்கம்: மாப்பிள்ளை கணேஷ். தயாரிப்பு: ராஜி கணேஷ்.
தாய்மாமன் அருணாச்சலத்தின் அரவணைப்பில் வளர்கிறான் கந்தசாமி. அருணாச்சலம் ஒரு சீட்டாட்ட பிரியர். கந்தசாமிக்கு கால் டாக்சி டிரைவர் வேலை. இவர்கள் பல மாத வாடகையை தராமல் இருப்பதால்.. வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஹவுஸ் ஓனர்.
அவரது மகள் கிருஷ்ணவேணியை கந்தசாமிக்கு மணமுடித்தால் பிரச்னைகள் தீரும் என யோசனை சொல்கிறார் அருணாச்சலம். அதற்கு ஹவுஸ் ஓனரும் சரியென்று சொல்ல... இதற்கிடையே கந்தசாமியின் வீட்டில் எதிர்பாராமல் நுழையும் பெண்ணால் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. பிறகு நடப்பதென்ன?
தாய்மாமனாக அருணாச்சலம், கிருஷ்ணவேணியாக லட்சுமி, யாமினியாக மாலினி மற்றும் ராம்பிரகாஷ், எழிச்சூர் அரவிந்தன், கே.வி.குமார் என அனைவருமே நகைச்சுவை நாடகத்திற்கான நடிப்பினை குறையின்றி தந்துள்ளனர்.
ரவா உப்மா, இரட்டை வேட ஜோசியர், கிட்னி தானம், மூன்று மாதம் என எழிச்சூர் அரவிந்தனின் வசனங்களும், அதை நாடகமாக்கம் மற்றும் இயக்கம் செய்த மாப்பிள்ளை கணேஷின் வேலைப்பாடும் ரசனை. நகைச்சுவை நாடகம்தானே.. இஷ்டத்திற்கு லாஜிக்கை மீறுவோம் என்றில்லாமல்.. தேவையான இடங்களிலாவது லாஜிக்குகளை வைத்து நகைச்சுவை கலந்து இருவரும் தந்திருப்பது சிறப்பு.
இதை கலைவாணர் கிச்சாவும் உணர்ந்து.. பொருத்தமான இடங்களில் சரியான இசையை ஒலிக்க விட்டிருக்கிறார். இப்படியான நாடகங்களுக்கு பெரும்பாலும் கொய்ங்.. கிய்ங் என்றுதான் பின்னணி இசைகள் வரும். ஆனால் அதை மட்டுமே பின்பற்றாமல்.. அளவான, அழகான ஒலிகளை அளித்துள்ளார் கிச்சா.
'ஹிந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டை தாண்டி பிச்சை கூட எடுக்க இயலாது' என்று மாப்பிள்ளை கணேஷ் கூறும் வசனம் வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிஷா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிழைக்க அந்தந்த மாநில மொழிகளே போதுமானது. யாருக்கு வேண்டும் ஹிந்தி?
'ஹிந்தி படியுங்கள். அப்போதுதான் வெளிமாநிலங்களில் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள் முன்னேற முடியாது' என்று சொல்வதை விட ஒரு போலியான கற்பிதம் இருக்க முடியுமா?
ஒருவேளை இதுதான் உங்கள் கருத்து, கொள்கை என்றால்... இப்படி பல்லாண்டுகாலமாக பேசிக்கொண்டே இருப்பதை விட செயலில் இறங்குவதுதான் ஹிந்திக்கு நீங்கள் செய்யும் உதவி, அர்ப்பணிப்பு, தியாகம்.
இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ செய்வதற்கான முயற்சியில் உடனே குதியுங்கள்.
1. ஹிந்தியை வளர்க்க வேண்டும் என்பதை சொல்ல தமிழில்தான் நாடகம் போட வேண்டியிருக்கிறது. இனி உங்களது அனைத்து நாடகங்களையும் ஹிந்தியில் போடலாமே.
2. டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து.. ஹிந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற சொல்லலாமே.
3. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து.. இந்தியாவில் அனைவரும் ஹிந்தி மட்டுமே பேச வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க சொல்லலாம்.
4. அனைத்திலும் முக்கியமாக இன்று முதல் நீங்கள் பிறரிடம் ஹிந்தி மட்டுமே பேசி அம்மொழியை வளர்க்கலாம்.
சொல்லை விட செயலே சக்தி வாய்ந்தது. அதை இன்றுமுதல் செய்வீர்கள் என நம்புகிறோம்.
எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலும் பல லட்சம் தமிழர்கள் வேலை பார்ப்பதில்லை. ஆனால் ஹிந்தி தெரிந்த பலர் கோடிக்கணக்கில் தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்து.. சர்வர், ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, கொத்தனார் என பல்வேறு கீழ்மட்ட வேலைகளில், சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள்.
அதற்கு காரணம்: அவர்களின் மாநிலத்தில் போதுமான வேலை வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் இங்கு தருவதைப்போல சம்பளம் இல்லை. முக்கியமாக ஹிந்தி தெரிந்தும் முன்னேறவே முடியவில்லை என்பதுதான் பேரவலம். பெருங்சோகம்!!
இங்குள்ளதைப்போல சுகாதாரம், சாலை வசதி, கல்வி என தரமான உள்கட்டமைப்புகள் அங்கு இல்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்களுக்கான தேசிய அளவிலான விருதுகளை பெரும்பாலும் தமிழகமும், கேரளாவும் வெல்கின்றன.
இதுதான் நிதர்சனம். ஆகவே மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலைக்காக அலைவது யாரென்று அனைவருக்கும் தெரியும்.
அடுத்ததாக... முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தி வரும் சன் ஷைன் பள்ளியில் ஹிந்தி சொல்லித்தருகிறார்கள் என்பதை நேரடியாக சொல்ல பயந்து மறைமுகமாக சொல்லி இருக்கிறீர்கள். வெளிப்படையாக வசனம் பேசி இருந்தால் கைத்தட்டல் இன்னும் பலமாக இருந்திருக்குமே.
சபா நாடகங்களில் திமுகவை டார்கெட் செய்து அவ்வப்போது வசனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, அநியாய வரிவிதிப்பு, அதிவேக தனியார் மயம், நசிந்து போன குறுதொழில்கள் என பாஜகவின் சாதனைகளை இன்னும் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பட்டியல் இடலாம்.
இதைப்பற்றி ஒரு வசனம் கூட சபா நாடகங்களில் இல்லாமல் இருக்கிறதே? என்ன காரணம்?
துணிச்சலான வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களே.. அரசியல், மதம், சாதி சார்ந்த விமர்சனங்களை கையில் எடுக்காமல்.. நாடகத்தின் கதை என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்...
இல்லை. அரசியல், மதம், சாதி பற்றி காட்சி, வசனம் வைப்பது எங்கள் கருத்துரிமை என்றால் பாஜக, திமுக என அனைத்து கட்சிகளையும் முதுகெலும்புடன் தைரியமாக விமர்சித்து, நையாண்டி செய்யுங்கள். நிச்சயம் வரவேற்கிறோம்.
ஒரு கட்சியை மட்டும் விமர்சிப்பது அரசியல் நையாண்டி அல்லவே அல்ல. அது வீரமும் அல்ல. இதை எப்போதுதான் புரிந்து கொள்வீர்களோ!!
நாடக விமர்சனத்தில் எதற்காக அரசியல் கருத்துகள் என கேட்போருக்கு.. நாடகங்களில் அரசியல் கலந்தால்.. அது விமர்சனத்திலும் எதிரொலிக்கும். அதேபோல சாதி, மதம், அரசியல் தலைவர்கள் சார்ந்த காட்சி/வசனங்கள் நாடகங்களில் மறைமுகமாக வந்தாலும்.. அவற்றை பூசி மெழுகாமல் இங்கே விமர்சனத்தில் நேரடியாக குறிப்பிடப்படும். அதாவது ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவர் நடத்தும் பள்ளியின் பெயரை இங்கே நேரடியாக குறிப்பிட்டது போல.
'சரி. நாடகம் எப்படி இருக்கு? விஷயத்துக்கு வாய்யா வெளக்கண்ணை' என்றுதானே கேட்கிறீர்கள்?
எதிர்பார்ப்புகளை பெரிதாய் வைத்துக்கொள்ளாமல்... ஒரு மினிமம் கியாரண்டி நகைச்சுவை நாடகத்தை விரும்பினால்... தாராளமாக பார்க்கலாம்.
மாமா மாப்ளே 2.0 - மினிமம் கியாரண்டி.
-----------------------------
விமர்சனம் - சிவகுமார்.
No comments:
Post a Comment