கோடை நாடக விழா 2022 - பஞ்சவடி


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் மூன்றாவதாக  அரங்கேறிய நாடகம் PMG மயூரப்ரியாவின் பஞ்சவடி. எழுத்து மற்றும் இயக்கம்: P. முத்துக்குமரன். 

வனவாசம் செல்லும் ராமன்... அங்கே அகத்திய முனிவரின் சொல்லை ஏற்று ஐந்து ஆலமரங்கள் இருந்த பகுதியில் தங்கினான். அதன் பெயர்தான் பஞ்சவடி. இக்கதையில் முதியோர் இல்லம் ஒன்றின் பெயராக பஞ்சவடியை தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

தனது தந்தையை தொடர்ந்து பஞ்சவடியை திறம்பட நிர்வகித்து வருகிறார் சௌந்தர்யா. இதில் A ப்ளாக் என்பது வசதியற்றவர்கள் தங்க இலவசமாகவும், B ப்ளாக் என்பது கட்டணத்துடன் கூடிய உயர்தர வசதிகள் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த இல்லத்தில் ரஹீம் பாய், ஆத்மா, ஜீவா உள்ளிட்டவர்கள் அடைக்கலம் புகுந்து சந்திக்கும் பிரச்னைகள், முதியோர் இல்லம் நடத்துவதில் உள்ள மனநிம்மதி மற்றும் மன உளைச்சல்கள் பற்றி விளக்கமாக சொல்கிறது இக்கதை.

நடிகர்களில் ஆத்மநாதனாக வரும் கணபதி சங்கரின் நகைச்சுவையும், ஜீவானந்தமாக VPS ஸ்ரீராமனின் குணச்சித்திரமும் பெரிதும் ஈர்க்கின்றன. முந்தைய நாடகங்களில் வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பில் இருந்த சில குறைகளை களைந்து இம்முறை பாராட்டும்படியான நடிப்பை தந்துள்ளார் கணபதி சங்கர். நாடகம் பார்ப்போரின் மனநிலையை குதூகலமாக வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

காப்பகத்தின் உரிமையாளர் சௌந்தர்யாவாக வரும் அனு சுரேஷ் தனது பாந்தமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு முழுமை செய்துள்ளார்.  'ரஹீம் பாய்' முத்துக்குமரன், 'மருத்துவர்' கௌரிசங்கர் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை.

வலம், இடமென இரண்டு ப்ளாக்குகள், நடுவே ஒரு சிறு கோவில், குண்டு பல்புகள் என நல்லதோர் அரங்க அமைப்பை தந்துள்ளனர் சைதை குமார் மற்றும் சண்முகம்.

பேராசிரியரின் உடலுடன் ஆம்புலன்சில் பயணிக்க செல்லும் 'ஆத்மா' ஒரு அருமையான குறியீடு. வயதான காலத்தில் பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என சௌந்தர்யா விளக்குமிடம், க்ளைமாக்ஸ் காட்சி, ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்கள் என சிறப்பாக களமாடியிருக்கிறது முத்துக்குமரனின் எழுத்து.

அதேநேரம்.. எந்த சார்புத்தன்மையும் இன்றி நாடகம் போடுவதில் இயக்குனர் முத்துக்குமரனுக்கும், தயாரிப்பாளர் கணபதி சங்கருக்கும் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த இவர்களின் நாடகத்தைப்போல இதிலும் தனிப்பட்ட சித்தாந்தங்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.

நாடகத்தின் முதல் காட்சியே அதற்கு சான்று.

'எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஆனால் சுத்த சைவம் மட்டுமே வழங்கப்படும்' என்று அலைபேசியில் கூறுகிறார் சௌந்தர்யா. எப்படி ஒரு முரண் பார்த்தீர்களா?

அசைவ உணவிற்கு பழகிய பிற மதத்தவர் மற்றும் சாதியினர் பஞ்சவடியில் சேர்ந்தால்.. சைவம் மட்டுமே உண்ண வேண்டும் என்பதற்கான நிர்பந்தம் ஏன்? 

நிதிப்பற்றாக்குறை இருந்தால்.. அசைவம் வாங்க இயலாது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பஞ்சவடிக்கு போதுமான நிதி கிடைக்கிறது. இதுபோக B ப்ளாக்கில் அதிகப்பணம் கட்டி சேர்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டுமா? 

வயதானவர்கள் அசைவம் சாப்பிட்டால் உடலுக்கு ஆகாது என்று காரணம் இருந்தால்.. அது அனைவருக்கும் பொருந்துமா? தரமான அசைவத்தை தேவையான அளவு உண்டால் உடலுக்கு கெடுதி என்று அறிவியல்பூர்வமாக எங்கேனும் சொல்லப்பட்டுள்ளதா? இதற்கு எந்த விளக்கமும் நாடகத்தில் இல்லை.

A ப்ளாக் சாதாரணமாகவும், B ப்ளாக்கின் சுவர்கள் மற்றும் தூண்கள் காவி நிறத்திலும் இருப்பதற்கான குறியீடு என்ன என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். 

இஸ்லாமியராக ரஹீம் பாய் உள்ளிட்டவர்கள் A ப்ளாக்கில் இருக்கிறார்கள். வசதியான ஆத்மநாதன் உள்ளிட்டோர் B ப்ளாக்கில் இருக்கிறார்கள். இதில் ரஹீம் பாய் பெரிதாக படிப்பறிவு இல்லாதவர். அவருக்கு மடிக்கணினி பயன்படுத்தும் முறையை சொல்லித்தருகிறார் ஆத்மநாதன்.

A ப்ளாக்கில் இருப்பவர்கள் வசதியற்றவர்கள், B ப்ளாக்கில் இருப்பவர்கள் செல்வந்தர்கள் என்பதோடு நிறுத்தி இருந்தால் சரி.

ஆனால் A ப்ளாக்கில் இருக்கும் ரஹீம்.. B ப்ளாக்கில் உள்ள ஆத்மநாதன் அளவிற்கு படிப்பறிவு இல்லாதவர் என்பதும், இஸ்லாமியர் என்பவர் வசதியற்ற  ப்ளாக்கில் இருப்பதும் இயல்பான கதையோட்டமல்ல. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மனதில் ஆழமாக படிந்துவிட்ட காவியோட்டம்.

ஜீவானந்தம் எனும் பெயர் எதற்கு வைக்கப்பட்டது எனும் கேள்விக்கு 'என் தந்தை கம்யூனிஸ்ட். அதனால் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவாவின் பெயரை எனக்கு வைத்து விட்டார்' என்று வெறுப்புடன் சொல்கிறார் VPS ஸ்ரீராமன். எதற்கு அந்த பெயரில் இப்படி ஒரு வெறுப்பு?

அனாதை உடல்களுக்கான இறுதி காரியங்களை பல்வேறு அமைப்புகள் முன்வந்து செய்கின்றன. அதில் சந்திரசேகர சேவா சமிதி என்பதை மட்டும் பிராண்டிங் (Branding) செய்வதற்கான தேவை எதற்கென்று தெரியவில்லை.

இனியாவது நாடகத்தை எழுதி, இயக்குவோர் 'அனாதை' எனும் வார்த்தையை தவிர்த்து 'ஆதரவற்றவர்கள்' எனும் வார்த்தையை பிரயோகித்தல் நலம். குறிப்பாக சமகாலத்தில் நடக்கும் கதைகளில்.

'செல்லாத்தா.. மாரியாத்தா' என தெருவில் இருக்கும் ஸ்பீக்கரில் அம்மன் பாடல்கள் ஓங்கி ஒலிப்பதை கேட்டு கடுப்பாகிறார் ஆத்மநாதன். இறுதிக்காட்சி நெருங்கும்போது மனம் மாறுகிறார் என்பது ஒருபக்கம். ஆனால் நமக்ககான கேள்வி இதுதான்..      

சென்னையில் ஆடிமாத அம்மன் பாடல்கள் மட்டுமல்ல. அனைத்து மாதங்களிலும் வெவ்வேறு கடவுளின் பாடல்கள் இரைச்சலாகவே ஒலிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, சரஸ்வதி பூஜை என பட்டியல் போடலாம்.       

இதில் அம்மன் பாடல்கள் மட்டும் எரிச்சலை உண்டாக்குகின்றன எனும் தொனியை ஆத்மநாதன் மூலம் நமக்கு இயக்குனர் தெரிவிப்பது ஏன்? அம்மனையும் A ப்ளாக்கில் சேர்த்து விட்டீர்களா?   

அனைவரும் ரசிக்கும்படி நாடகங்களை எழுதி, இயக்க விரும்புபவர்கள் சாதி, மத, அரசியல் உள்ளிட்ட விஷயங்களை புகுத்துவது அவர்களின் கருத்து சுதந்திரம்.

ஆனால் அவை ஒருதலைப்பட்சமாகவும், தனது தனிப்பட்ட சித்தாத்தங்களை திணிக்கவும், கைத்தட்டலை பெறும் ஒற்றை நோக்கிலும் இருப்பது அபத்தம். 

இவையெல்லாம் கதையின் மையத்தையும், படைப்பாளியின் நேர்மையையும் சிதைத்து விடும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

இப்படியான குறைகளை தவிர்த்து பார்த்தால்.. குறைந்தபட்ச உத்திரவாதத்தை தரும் நாடகமாக வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

பஞ்சவடி - மனங்கள் இணையும் வனவாசம். சார்புத்தன்மை மட்டுமே தோஷம்.      

--------------------

விமர்சனம்: சிவகுமார்.  

 

1 comment: