கோடை நாடக விழா 2022 - டைட்டில்

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் எட்டாவதாக   அரங்கேறிய நாடகம் ஓஹோ புரடக்சன்ஸ் வழங்கிய டைட்டில். எழுத்து மற்றும்  இயக்கம்: ஸ்ரீவத்சன்.   

தஞ்சாவூரில் உள்ள ஒரு இல்லத்தில் இரு பெண்கள் மட்டும் வசிக்கிறார்கள். இருவருமே திருமணமானவர்கள் என்றாலும், இவர்களின் கணவர்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போகிறார்கள். அவர்களைப்பற்றிய எந்தத்தகவலும் இல்லை. இந்த வீட்டை விற்று பங்கை பிரிக்க வேண்டுமென உறவினர் கோபால் என்பவர் கூற.. அதற்கு இவ்விருவரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

நீதிமன்றம் சென்றால் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதால்.. ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து சட்டப்பஞ்சாயத்து செய்ய முடிவு செய்கிறார்கள். தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்தது?

நாடகத்தின் முக்கிய பலம்.. குறை சொல்ல முடியாத அளவிற்கு அனைவரும் நடித்த விதம். லாவண்யா, ப்ரேமா சதாசிவம், பழனி, கார்த்திக் பட், சுப்பு, மஹேஸ்வர் உள்ளிட்ட எல்லோரும் நன்றாக நடித்திருந்தனர்.

மேடையின் ஓரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி ப்ரேமா சதாசிவம் பேசிய பல வசனங்கள் தெளிவாக காதில் விழவில்லை. உரக்க பேசுங்கள் அல்லது மைக் அருகே அமர்ந்தோ, நின்றோ பேசுங்கள் திருமதி. ப்ரேமா.

ரவுடி மணி எனும் கேரக்டரில் நடித்த பழனி என்பவர் வரும்  முதல் இரு காட்சிகள் நல்ல காமடி. ஆனால் அதன் பிறகு அளவுக்கு மீறி பேசுவதை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக நீதிபதி நடத்தும் விசாரணையில் இத்தனை குறுக்கீடு செய்ய வேண்டியதில்லை.

பெண்களுக்கு.. குறிப்பாக மருமகள்களுக்கு சொத்தில் பங்கு இருக்க வேண்டியதன் நியாயத்தை உணர்த்தும் நல்ல கதைக்களம். இந்து தர்மம், மனுதர்மம், மனுநீதி... மன்னிக்க மனு ஸ்ம்ரிதி ஆகியவற்றில் பெண்களுக்கு சமமான உரிமை தரப்படவில்லை என்று எடுத்துரைத்து லாவண்யா பேசும் வசனங்கள் அருமை.

பெண்ணடிமைத்தனத்தில் ஊறிப்போன பழமைவாத கோட்பாடுகளை சிறப்பாக தோலுரித்துக்காட்டியிருக்கிறது ஸ்ரீவத்சனின் வசனங்கள். Family Tree யை மேலே சென்று பார்த்தால்.. கீழே விழ வேண்டி வரும், குங்குமம் தர யோசிக்கும் பெண்கள், Faith vs Belief என யதார்த்த வாழ்க்கையை ஒட்டி ஸ்ரீவத்சன் எழுதியிருப்பவை..கைத்தட்டலை பெற முழுத்தகுதி பெற்றவை.

ஆங்காங்கே நகைச்சுவையும் சேர்ந்து ரசிக்க வைக்கிறது. அதிலும் மஹேஸ்வர் வந்த பிறகு.. இன்னும் நன்றாக.

மயிலை பாபுவின் ஒளியும், ஸ்ரீதர் மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன் அரங்க அமைப்பும் அருமை.   

நிறைகள் இவ்வாறு இருக்க... குறைகள் யாவை?

தமிழ் நாடகம் எனக்கூறிவிட்டு பெரும்பாலும் ஆங்கில வசனங்களால் நிரம்பிய English Play போடுவது ஸ்ரீவத்சனின் நிரந்தர கொள்கை. இங்கும் அதுவே தொடர்கிறது.

Inception, Desperation, Perception என ஒற்றை வார்த்தைகள் ஒருபக்கம். Judgment is based on Karma and Dharma போன்ற ஏகப்பட்ட ஒருவரி வசனங்கள் மறுபக்கம். ஒரு சில இடங்களில் ஆங்கிலம் வருவதில் தவறில்லை. ஒரு சில இடங்களில் மட்டும்தான் தமிழ் வருகிறது. இதற்கு நேரடியாக ஆங்கில நாடகங்களையே அரங்கேற்றி விடலாமே.      

பெரும்பாலான சபா நாடகங்களுக்கே உரித்தான ஆகம விதி என்ன? ஒன்று பாஜக  சார்புத்தன்மை. மற்றொன்று திமுக எதிர்ப்பு. இதில் ஸ்ரீவத்சன் மட்டும் விதிவிலக்கா என்ன?

திமுக எம்.எல்.ஏ.வை குறிக்கும் அரசியல்வாதி கேரக்டரில் ஒருவர் வருகிறார். 'மைக் முன்னாடி மட்டும் ஐயர்களை திட்டுவோம். மற்ற நேரங்களில் அவர்கள் மீது மதிப்புண்டு' என்று பேசுகிறார்.

மைக் முன்னே இஸ்லாமியர், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசிய ஹெச்.ராஜாவை மனதில் வைத்து ஒரு கேரக்டரை உருவாக்க ஏன் தயக்கம்/பயம்?  அப்படி செய்தால் அரங்கில் கைத்தட்டல் விழாது. இதுதான் காரணம்.

இது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடக்கும் பஞ்சாயத்து என்பதால்  'ஹைகோர்ட்டாவது, மயிராவது' என்று கொச்சையாக பேசிவிட்டு பிறகு நீதிமன்றத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட மாவீரர் ஹெச். ராஜாவின் கேரக்டர் நன்றாக பொருந்தியிருக்குமே திரு.ஸ்ரீவத்சன் அவர்களே!!

இன்னொரு சீனில் 'இந்த அரசியல்வாதியை இவரை காவேரி ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும்' என்று பேசுகிறார் மஹேஸ்வர். உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சேர்ந்த கருணாநிதியை கிண்டல் செய்வது எந்த வகை நாகரீகம்?

ஜெயலலிதா மற்றும் சோ ராமஸ்வாமி ஆகிய இருவருமே அப்பல்லோவில் இருந்ததை சுட்டிக்காட்டி வசனம் வைக்காமல் தடுத்தது எது? ஜெயலலிதா மீதுள்ள பயமா?  உயிரோடு இருந்த காலத்திலும், இறந்த பிறகும் கூட  ஜெயலலிதா எனும் தனிநபரையோ, அவரது ஆட்சியையோ விமர்சிக்க சபா நாடக படைப்பாளிகள் அஞ்சி நடுங்குவது ஏன்?

உக்ரைனில் போர் நடந்தால், பெட்ரோல் விலை ஏறினால், அக்னி வெயில் சுட்டெரித்தாலும்... அனைத்திற்கும் ஒரே காரணம் திமுக மட்டுமே. அப்படித்தானே? அடடா... உங்கள் நடுநிலையை எண்ணி புளகாங்கிதம் அடைகிறோம் ஐயா.

மனுதர்மம், மனுநீதி...மன்னிக்க. மனுஸ்ம்ரிதி  போன்றவை அப்போதைய காலகட்டத்திற்கு சரியாக இருந்திருக்கலாம். இப்போதைக்கு அவை வெறும் ரெஃபரென்ஸ் மட்டுமே என்று லாவண்யா பேசும் வசனம் வருகிறது.

மனு ஸ்ம்ரிதி எனும் நூலை  ஒரு நபர் எழுதவில்லை. வெவ்வேறு வெர்ஷன்களில் உலா வருகிறது. இது சாதிய வன்மம், பெண்ணடிமைத்தனம் உள்ளிட்டவைகளில் ஊறி திளைத்த நூல் என்பது மூளையுள்ள அனைவர்க்கும் தெரியும். அந்த நூலில் உள்ள உதாரணங்கள்:

* கணவன் குடிகாரன், சூதாடியாக இருந்தாலும் அவனுக்கு பணிவிடை செய்து கிடப்பதே மனைவியின் வேலை.

* தன்னை இழிவாக நடத்தினாலும், விபச்சாரியுடன் உறவு வைத்திருந்தாலும்... கணவனை தெய்வமாக மதித்தல் வேண்டும்.

'மனுஸ்ம்ரிதி போன்றவை அப்போதைய காலகட்டத்திற்கு சரியாக இருந்திருக்கலாம்' எனும் வசனத்தை நீலகண்ட சாஸ்திரியாக வரும் VPS ஸ்ரீராமன் பேசி இருந்தாலாவது பொருந்தியிருக்கும். பெண் சமத்துவம் பற்றி வாதிடும் லாவண்யா பேசுவது முற்றிலும் சரியற்றது. 

பெண்ணடிமைத்தனம் பேசும் நூல்கள்... அந்த காலத்திற்கு மட்டுமல்ல. எந்த காலத்திற்கும் பொருந்தாதவை.

அதேநேரம்.. லாவண்யா பேசும் பெண்ணுரிமைக்கான இதர வசனங்கள் அனைத்துமே பாராட்டத்தக்கது. அதற்கு காரணகர்த்தாவாக ஸ்ரீவத்சன் செய்திருப்பது.. நிச்சயம் ஒரு புரட்சி என்பதில் ஐயமில்லை. 

முதல் காட்சியில் வரும் நகைச்சுவை, பிறகு நடக்கும் விவாதங்கள், அதற்கு பொருத்தமான நடிப்பு என நன்றாகவே நகர்கிறது கதை. ஜானகிராமனாக மஹேஸ்வர் வந்தபிறகு சிரிப்பலையும் எழுகிறது.

இதற்குப்பின் கதையின் மையத்திற்கு நியாயம் செய்து அழுத்தமான  க்ளைமாக்ஸ் இருக்குமென்று பார்த்தால்.. நீதிபதி வந்து சட்டுபுட்டென சில வார்த்தைகள் பேசி நாடகத்தை முடிப்பது.. புஸ்வாணம். 

பெண் சமத்துவம் பற்றி பேசும் சிறந்த வசனங்கள். இடையிடையே தரமான நகைச்சுவை. இது மட்டுமே போதுமென்று நினைப்போருக்கு இந்நாடகம் போதுமானது.

சீராக நகரும் திரைக்கதை, முழுமையான இயக்கம் எனும் அவசியமான விஷயங்களை எதிர்பார்ப்போருக்கு ஏமாற்றம்.

இதோ... ஸ்ரீவத்சன் பாணியில்... என் பங்கிற்கு நான் படித்த சில ஆங்கில தத்துவங்கள்: 

Laughter is much more important than applause. Applause is almost a duty. Laughter is a reward – Carol Channing.

A good drama critic is one who perceives what is happening in the theater of his time. A great drama critic also perceives what is not happening - Kenneth Tynan.

* Your Honour, Sorry for the interruption. This is only my introduction. During the cross examination, you will see my action cum direction, added with perfection. In the name of the witness, you are playing with the imitation. That’s my conception - T. Rajendhar, Movie: Oru thaayin Sabadham.


டைட்டில் - எதிர்பார்த்தது ஓஹோ. கிடைத்தது OK விற்கு சற்று கீழ்.

------------------------

விமர்சனம் - சிவகுமார்.        


கோடை நாடக விழா 2022 - மாமா மாப்ளே 2.0.

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஏழாவதாக   அரங்கேறிய நாடகம் சத்யா சாய் க்ரியேஷன்ஸ் வழங்கிய மாமா மாப்ளே 2.0. கதை, வசனம்: எழிச்சூர் அரவிந்தன்  இயக்கம்: மாப்பிள்ளை கணேஷ்.  தயாரிப்பு: ராஜி கணேஷ்.  

தாய்மாமன் அருணாச்சலத்தின் அரவணைப்பில் வளர்கிறான் கந்தசாமி. அருணாச்சலம் ஒரு சீட்டாட்ட பிரியர். கந்தசாமிக்கு கால் டாக்சி டிரைவர் வேலை. இவர்கள் பல மாத வாடகையை தராமல் இருப்பதால்.. வீட்டை காலி செய்ய சொல்கிறார் ஹவுஸ் ஓனர். 

அவரது மகள் கிருஷ்ணவேணியை கந்தசாமிக்கு மணமுடித்தால் பிரச்னைகள் தீரும் என யோசனை சொல்கிறார் அருணாச்சலம். அதற்கு ஹவுஸ் ஓனரும் சரியென்று சொல்ல... இதற்கிடையே கந்தசாமியின் வீட்டில் எதிர்பாராமல் நுழையும் பெண்ணால் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. பிறகு நடப்பதென்ன?

தாய்மாமனாக அருணாச்சலம், கிருஷ்ணவேணியாக லட்சுமி, யாமினியாக மாலினி மற்றும் ராம்பிரகாஷ், எழிச்சூர் அரவிந்தன், கே.வி.குமார் என அனைவருமே நகைச்சுவை நாடகத்திற்கான நடிப்பினை குறையின்றி தந்துள்ளனர்.

ரவா உப்மா, இரட்டை வேட ஜோசியர், கிட்னி தானம், மூன்று மாதம் என எழிச்சூர் அரவிந்தனின் வசனங்களும், அதை நாடகமாக்கம் மற்றும் இயக்கம் செய்த மாப்பிள்ளை கணேஷின் வேலைப்பாடும் ரசனை. நகைச்சுவை நாடகம்தானே.. இஷ்டத்திற்கு லாஜிக்கை மீறுவோம் என்றில்லாமல்.. தேவையான இடங்களிலாவது லாஜிக்குகளை வைத்து நகைச்சுவை கலந்து இருவரும் தந்திருப்பது சிறப்பு.

இதை கலைவாணர் கிச்சாவும் உணர்ந்து.. பொருத்தமான இடங்களில் சரியான இசையை ஒலிக்க விட்டிருக்கிறார். இப்படியான நாடகங்களுக்கு  பெரும்பாலும் கொய்ங்.. கிய்ங் என்றுதான் பின்னணி இசைகள் வரும். ஆனால் அதை மட்டுமே பின்பற்றாமல்.. அளவான, அழகான ஒலிகளை அளித்துள்ளார் கிச்சா.

'ஹிந்தி தெரியாவிட்டால் தமிழ்நாட்டை தாண்டி பிச்சை கூட எடுக்க இயலாது' என்று மாப்பிள்ளை கணேஷ் கூறும் வசனம் வருகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப், ஒடிஷா உள்ளிட்ட பல மாநிலங்களில் பிழைக்க அந்தந்த மாநில மொழிகளே போதுமானது. யாருக்கு வேண்டும் ஹிந்தி?

'ஹிந்தி படியுங்கள். அப்போதுதான் வெளிமாநிலங்களில் பிழைக்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள் முன்னேற முடியாது' என்று சொல்வதை விட ஒரு போலியான கற்பிதம் இருக்க முடியுமா?  

ஒருவேளை இதுதான் உங்கள் கருத்து, கொள்கை என்றால்... இப்படி பல்லாண்டுகாலமாக பேசிக்கொண்டே இருப்பதை விட செயலில் இறங்குவதுதான் ஹிந்திக்கு நீங்கள் செய்யும் உதவி, அர்ப்பணிப்பு, தியாகம். 

இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ செய்வதற்கான முயற்சியில் உடனே குதியுங்கள்.

1. ஹிந்தியை வளர்க்க வேண்டும் என்பதை சொல்ல தமிழில்தான் நாடகம் போட வேண்டியிருக்கிறது. இனி உங்களது அனைத்து நாடகங்களையும் ஹிந்தியில் போடலாமே.    

2. டெல்லிக்கு சென்று பிரதமரை நேரில் சந்தித்து.. ஹிந்தியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற சொல்லலாமே.

3. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து.. இந்தியாவில் அனைவரும் ஹிந்தி மட்டுமே பேச வேண்டுமென உத்தரவு பிறப்பிக்க சொல்லலாம்.  

4. அனைத்திலும் முக்கியமாக இன்று முதல் நீங்கள் பிறரிடம் ஹிந்தி மட்டுமே பேசி அம்மொழியை வளர்க்கலாம்.

சொல்லை விட செயலே சக்தி வாய்ந்தது. அதை இன்றுமுதல் செய்வீர்கள் என நம்புகிறோம்.

எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலும் பல லட்சம் தமிழர்கள் வேலை பார்ப்பதில்லை. ஆனால் ஹிந்தி தெரிந்த பலர் கோடிக்கணக்கில் தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்து.. சர்வர், ஹவுஸ் கீப்பிங், செக்யூரிட்டி, கொத்தனார் என பல்வேறு  கீழ்மட்ட வேலைகளில், சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள்.

அதற்கு காரணம்: அவர்களின் மாநிலத்தில் போதுமான வேலை வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் இங்கு தருவதைப்போல சம்பளம் இல்லை. முக்கியமாக ஹிந்தி தெரிந்தும் முன்னேறவே முடியவில்லை என்பதுதான் பேரவலம். பெருங்சோகம்!!   

இங்குள்ளதைப்போல சுகாதாரம், சாலை வசதி, கல்வி என தரமான  உள்கட்டமைப்புகள்  அங்கு இல்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில் சிறந்த மாநிலங்களுக்கான தேசிய அளவிலான விருதுகளை பெரும்பாலும் தமிழகமும், கேரளாவும் வெல்கின்றன.    

இதுதான் நிதர்சனம். ஆகவே மாநிலம் விட்டு மாநிலம் வந்து வேலைக்காக அலைவது யாரென்று அனைவருக்கும் தெரியும்.  

அடுத்ததாக... முதல்வர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை நடத்தி வரும் சன் ஷைன் பள்ளியில் ஹிந்தி சொல்லித்தருகிறார்கள் என்பதை நேரடியாக சொல்ல பயந்து மறைமுகமாக சொல்லி இருக்கிறீர்கள். வெளிப்படையாக வசனம் பேசி இருந்தால் கைத்தட்டல் இன்னும் பலமாக இருந்திருக்குமே.

சபா நாடகங்களில் திமுகவை டார்கெட் செய்து அவ்வப்போது வசனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு, அநியாய வரிவிதிப்பு, அதிவேக தனியார் மயம், நசிந்து போன குறுதொழில்கள் என  பாஜகவின் சாதனைகளை இன்னும் ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பட்டியல் இடலாம்.

இதைப்பற்றி ஒரு வசனம் கூட சபா நாடகங்களில் இல்லாமல் இருக்கிறதே? என்ன காரணம்? 

துணிச்சலான வசனகர்த்தா மற்றும் இயக்குனர்களே.. அரசியல், மதம், சாதி சார்ந்த விமர்சனங்களை கையில் எடுக்காமல்.. நாடகத்தின் கதை என்னவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்... 

இல்லை. அரசியல், மதம், சாதி பற்றி காட்சி, வசனம் வைப்பது எங்கள் கருத்துரிமை என்றால் பாஜக, திமுக என அனைத்து கட்சிகளையும் முதுகெலும்புடன் தைரியமாக விமர்சித்து, நையாண்டி செய்யுங்கள். நிச்சயம் வரவேற்கிறோம். 

ஒரு கட்சியை மட்டும் விமர்சிப்பது அரசியல் நையாண்டி அல்லவே அல்ல. அது வீரமும் அல்ல.  இதை எப்போதுதான் புரிந்து கொள்வீர்களோ!!  

நாடக விமர்சனத்தில் எதற்காக அரசியல் கருத்துகள் என கேட்போருக்கு.. நாடகங்களில் அரசியல் கலந்தால்.. அது விமர்சனத்திலும் எதிரொலிக்கும். அதேபோல சாதி, மதம், அரசியல் தலைவர்கள் சார்ந்த காட்சி/வசனங்கள் நாடகங்களில் மறைமுகமாக வந்தாலும்.. அவற்றை பூசி மெழுகாமல் இங்கே விமர்சனத்தில் நேரடியாக குறிப்பிடப்படும்.  அதாவது ஸ்டாலின் மகள் செந்தாமரை மற்றும் அவர் நடத்தும் பள்ளியின் பெயரை இங்கே நேரடியாக குறிப்பிட்டது போல.   

'சரி. நாடகம் எப்படி இருக்கு? விஷயத்துக்கு வாய்யா வெளக்கண்ணை'  என்றுதானே கேட்கிறீர்கள்?

எதிர்பார்ப்புகளை பெரிதாய் வைத்துக்கொள்ளாமல்... ஒரு மினிமம் கியாரண்டி நகைச்சுவை நாடகத்தை விரும்பினால்... தாராளமாக பார்க்கலாம். 

மாமா மாப்ளே 2.0 - மினிமம் கியாரண்டி.    

-----------------------------

விமர்சனம் - சிவகுமார். 


கோடை நாடக விழா 2022 - தத்புருஷாய

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஆறாவதாக   அரங்கேறிய நாடகம் சாய் ராம் கிரியேஷன்ஸ் வழங்கிய தத்புருஷாய. கதை, வசனம், இயக்கம்: பாரதிவாசன். 

வெற்றிகரமாக இயங்கி வரும் மெடிக்கல் நிறுவனம் ஒன்றின் முதலாளியாக இருப்பவர் ஜெகன்னாதன். அவரது நீண்டநாள் அல்லக்கையும், இந்நிறுவனத்தின் யூனியன் தலைவராகவும் இருப்பவர் மணிவேலன். வயதான பிறகு.. தனது நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை மகன் கோகுலுக்கு தருகிறார் ஜெகன்னாதன் ஐயா. 

'நிறுவனத்தை இப்படித்தான் நடத்த வேண்டும்' என்கிறார் ஜெகன்னாதன் ஐயா. 'இல்லை அப்படித்தான் நடத்துவேன்' என வாதம் செய்கிறான் கோகுல். 'தந்தை பேச்சையும், தொழிலாளர் நலனையும் மதிக்காமல் இப்படி செய்வது சரியா?' என்று கோகுலை கேட்கிறார் மணிவேலன்.       

இதே பாணியில் மூவரும் பேசிக்கொள்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்ல்கிறார்கள். 

இதே பாணியில் மூவரும் பேசிக்கொல்ல்ல்ல்கிறார்கள். 

என்ன? ஒரே வரியை ஐந்து முறை படித்ததற்கு கோவம் வருகிறதா? இதே காட்சி, வசனத்தை திரும்ப திரும்ப பார்த்த எங்களுக்கு எப்படி இருக்கும்? 

இப்படியே ஒரு மணிநேரம் நாடகம் ஓடிவிடுகிறது. கதையென்று ஏதோ ஒன்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டாலும்.. அதன்பிறகு ஜெகன்னாதன் ஐயாவின் ஹாலில் பாயை விரித்து... மல்லாக்க படுத்து குறட்டை விட ஆரம்பித்து விடுகிறது கதை. நாமும்தான்!! 

மொத்த நாடகத்தில் ஜெகன்னாதன் ஐயாவாக நடித்த விக்னேஷ் செல்லப்பனின் நடிப்பு மட்டுமே குறிப்பிடும்படி இருந்தது. பல்வேறு மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து அதில் அர்ப்பணிப்புடன் நடித்து பெயர் வாங்கும் நடிகரான விக்னேஷ்.. இங்கும் தனது வயதை மீறிய பெரியவர் வேடத்தை தாங்கி.. அருமையான நடிப்பு மற்றும் தெளிவான உச்சரிப்பால் மனதை கவர்கிறார்.

இவரது மகன் கோகுலாக அருண். முதல் சில நாடகங்களை ஒப்பிடுகையில் இம்முறை நல்ல முன்னேற்றம். அதேநேரம் ரசிகர்கள் இருக்கும் திசையை நோக்கி அடிக்கடி வசனம் பேசுவதை குறைத்தல் நலம்.

பாரதிவாசனின் இந்நாடகத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என ஏதேனும் ஒன்று சரியில்லாமல் இருந்தால் பரவாயில்லை. நான்குமே கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்கிறது.  

உப்மா நாடகங்கள் எடுப்பதில் தங்க மெடல் வாங்கிய இவர்... அதில் உப்மாத்தனமாக நடிக்கவும் செய்வதுண்டு. இறை அருளால் இம்முறை ஒரே ஒரு காட்சியில் மட்டும் தரிசனம் தந்துவிட்டு இவர் சென்றது பெருமகிழ்ச்சி. ஆனால் இவரது இடத்தை மணிவேலன் கேரக்டரில் நடித்த MD மூர்த்தி என்பவர் நிரப்பி விட்டார் என்பது வழக்கமான அதிர்ச்சி தகவல்.

நாடக உலகில் உப்மா கேரக்டர்களுக்கு என்றே நேர்ந்துவிடப்பட்ட நடிகர்கள் சிலர் இருப்பார்கள். அதில் மூர்த்தியும் ஒருவர். இவர் பேசும் வசனம், உடல்மொழி, டோப்பா.. என அனைத்துமே...அடடா!!  

போதாக்குறைக்கு உமா - பிரகாஷ் தம்பதியர் வரும் காட்சிகள் அனைத்திலும் உப்மா வாசம் தூக்கலாக இருக்கிறது. இக்கேரக்டர்களில் லட்சுமி மற்றும் சுரேஷ் நடித்துள்ளனர். 

தம்பி சுரேஷ்.. எதற்கு ஒவ்வொரு முறையும் கையை காலை ஆட்டி காமடி செய்கிறீர்கள்? சாதாரணமாக நடித்தால் போதாதா? நாகேஷ் போன்ற பிரபல நடிகர்களை காப்பி அடிக்காமல்.. உங்கள் கேரக்டருக்கு எது தேவையோ அதை மட்டும் பின்பற்றுங்கள். 

இறுதிக்காட்சியில் வரும் திருப்பத்திற்காக இவ்விருவரும் பயன்படுவார்கள் என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் மற்ற நேரங்களில் எல்லாம் வள வள கொழ கொழவென்று பேசி அறுக்கிறார்கள்.

ஜெகன் ஐயாவிற்கு ஒரு ஃப்ளாஷ்பேக். அதில் வடநாட்டு சேட் ஒருவரின் வீட்டில் உள்ள அனைவரும் கொல்லப்படுகிறார்கள். அவரை காண செல்கிறார் ஜெகன். ஹாலில் இருவரும் பேசும்போது உள்ளே இருக்கும் அறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. உடனே ஓடிப்போய் குழந்தையை தூக்கியபடி ஹாலுக்கு வருகிறார் ஜெகன்.

யோவ் சேட்.. உனக்கு கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருக்கா? கொலை செய்யப்பட்டு கிடப்பவர்கள் மத்தியில் இருக்கும் குழந்தையை ஹாலுக்கு தூக்கி வந்து ஆறுதல் படுத்தி, உணவளித்து தூங்க வைக்க வேண்டும் அல்லது பக்கத்து வீட்டாரிடம் சொல்லி பார்த்துக்கொள்ள சொல்ல வேண்டும்.    

அதைவிட்டுட்டு.. ஜெகன் வர்ற வரைக்கும் ஹால்ல என்னத்த கிழிச்சிட்டு இருந்தீரு? 

சேட் என்றாலே நேரு தொப்பி போட்டுக்கொண்டு, நம்மள் வர்றான், நிம்மள் போறான் என்றுதான் பேசுவார்களா? ரவுடி என்றாலே அவன் ராயபுரம், காசிமேட்டில்தான் இருப்பானா?

இந்த புளித்துப்போன டெம்ப்ளேட் சிந்தனைகளை எல்லாம் 2023 ஆம் ஆண்டு போகி தினத்தன்று பழைய பொருட்களுடன் சேர்த்து கொளுத்தி விடுங்கள் இயக்குனரே.        

ரசிகர்களுக்கு அதிரடி ட்விஸ்ட் தருகிறேன் எனும் பெயரில் மூன்று இடங்களில் பரபரப்பு காட்டுகிறார் இயக்குனர். ஏற்கனவே தூக்க மாத்திரை போட்டுவிட்டு தூங்கிய மன நிலையில் இருந்த நமக்கு... எந்த ட்விஸ்ட் வந்தால் என்ன? 

நாடகம் முடியும் நேரத்தில்... 'மன்னிப்பு கேட்கிறவன் மனிதன், மன்னிப்பு கேட்பவன் மாமனிதன்' எனும் ரேஞ்சுக்கு சில தத்துவங்கள் வந்து விழுகின்றன. ஆஹா.. அருமையான புதிய சிந்தனை!! 

அரதப்பழசான கதையை தேர்வு செய்வதைக்கூட கடவாய்ப்பல்லை கடித்தபடி பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் அதை அனைவரும் ரசிக்கும்படியாக நாடகமாக்கம் செய்யாவிட்டால்... மொத்த பற்களையும் கடித்து துப்பி..  செட் பல் மாட்ட வேண்டிய நிலைதான் நமக்கு வரும்.  அப்படி ஒரு காவியம்தான் இது. 

கோடை நாடக விழாவின் ஒண்ணா நம்பர் உப்மா நாடகத்தை அரங்கேற்றி.. அடுத்து நாடகம் போட இருப்போருக்கு கடும் சவால் விடுத்துள்ளார் பாரதிவாசன். இந்த முறையும் சிறந்த உப்மா நாடகத்திற்கான தங்க மெடலை இவரே வெல்வாரா அல்லது இன்னொருவர் தட்டிப்பறிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நல்ல கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனராக மீண்டும் வலம் வர... உங்கள் சிந்தனையில் மிகப்பெரிய முன்னேற்றம் தேவைப்படுகிறது. ஆற அமர யோசித்து... மற்ற நாடகங்களையும் பார்த்து.. நீங்கள் எங்கே பின்தங்கி இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, மாற்றங்களுடன் வாருங்கள் பாரதிவாசன் ஐயா. 

இல்லாவிட்டால் மிகவும் கஷ்டம்....(எங்கள் நிலைமை).

நேற்று நாடகம் நடைபெற்ற நேரத்தில்... நாரத கான சபாவின் அனைத்து கதவுகளுக்கும் திண்டுக்கல் பூட்டால் வெளித்தாழ்ப்பாள் போடாமல்... சுலபமாக தப்பித்து ஓட உதவிய நிர்வாகத்தினர், ஊழியர்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி.   

தத்புருஷாய - காலாவதியான உப்புசப்பில்லாத உப்மா. 

---------------------------------

விமர்சனம் - சிவகுமார். 


கோடை நாடக விழா 2022 - ஆரஞ்சு


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஐந்தாவதாக   அரங்கேறிய நாடகம் தியேட்டர் மெரினாவின் ஆரஞ்சு. கதை, வசனம்: ஜவஹர் சேகர். இயக்கம்: ஆர். கிரிதரன்.

திரைப்பட இயக்குனர் ஆக வேண்டுமென ஆசைப்படும் இளைஞன்.. தயாரிப்பாளர் ஒருவருக்கு கதைகள் சொல்கிறான். அவை எதுவும் அவருக்கு பிடிக்கவில்லை. 'குழந்தைகள் ஃபேன்டஸி' பாணியில் கதை இருந்தால் சொல். அதுதான் வெற்றி பெறும்' என்கிறார். 

ஐந்தறிவுள்ள உயிரினங்கள் சில... ஆறறிவுள்ள மனிதர்களாக மாறி நம்மிடையே உலவினால் ஏற்படும் விந்தைகள், பிரச்னைகள் எப்படி இருக்கும் எனும் கதையை யோசிக்கிறான் அந்த இளைஞன். இதுதான் ஆரஞ்சு நாடகத்தின் கதைக்களம்.      

இந்நாடகத்தின் முக்கிய பலமாக இருப்பது நடிப்பு. பெரியோர் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். அடுத்ததாக ஒளியமைப்பு (குணா, மனோ லைட்ஸ்), பாடல்கள் மற்றும் பின்னணி இசை (தக்ஷின், கார்த்திக்) ஆகியவை அதிகபட்ச தரத்துடன் மனதை கவர்கின்றன.

முதல் சில காட்சிகளில் நகர ஆரம்பிக்கும் கதை... அதன் பிறகு அரைமணி நேரத்திற்கு நகைச்சுவை எனும் வட்டத்தில் மட்டுமே சுழல்கிறது. குடும்பத்தலைவர் ராமகிருஷ்ணனுக்கு அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைக்கு பிறகே மீண்டும் சுறுசுறுப்பாக எழுந்து ஓட ஆரம்பிக்கிறது கதை. 

விலங்குகளின் முன்பாக தரிசனம் தரும் கடவுளிடம் 'நீங்கள் லட்சுமியா, சரஸ்வதியா, பார்வதியா?' என வினா எழுப்ப.. அதற்கு கிடைக்கும் விடை 'நான் அனைவருக்கும் பொதுவான கடவுள். உலகை இயக்கும் சக்தி'.

பொதுவான கடவுள் என்று கூறினாலும் இந்துக்கடவுள்களுக்கு விருப்பமான வண்ணம் என்று 'கட்டமைக்கப்பட்டு' இருக்கும் ஆடை நிறத்துடன் அக்கடவுள் காட்சி தருவது நகைமுரண்.

மேடையின் நடுவில் ஒரு வீட்டின் ஹால். இடதுபுறம் சமையலறை என்று செட் போடப்பட்டுள்ளது. பல்லாண்டுகாலமாக மேடை நாடகங்களில் வெறும் டம்ளரில் காஃபி குடிப்பது போல பாவனை செய்வது, சமையல் செய்வது போன்ற பாவனைகள் ஆகியவற்றை தவிர்த்து நிஜத்தில் காண்பது போன்ற உணர்வினை அளிப்பது நல்ல முன்னேற்றம். இங்கும் அப்படியே.

'மனிதர்களாக மாற ஆசைப்பட்டதன் பலனை அனுபவித்து விட்டோம்' என்று கடவுளிடம் கூறுகின்றன விலங்குகள். அதற்கு கடவுள் கூறுகிறார் 'இப்போது புரிகிறதா.. விதியையும், கர்மாவையும் மாற்ற இயலாது'

குழந்தைகளுக்கான ஃபேன்டசி என்பது ஒரு திரைப்படத்திற்கான கதை. அது சொல்லப்படுவது ஒரு மேடை நாடகத்தில். 

விதியை மதியால் வெல்லலாம், தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்' என்று தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை சிறார்களுக்கு போதிப்பதே பொருத்தமான நீதிப்பாடமாக இருக்கும். விதி, கர்மா எனும் கோட்டை கிழித்து அவர்களை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்று தோன்றுகிறது.

நல்ல நடிகர்கள், சிறந்த ஆடை அலங்காரம், தரமான தொழில்நுட்பம், குழந்தைகள் ரசிக்கும் நகைச்சுவைகள் என பாராட்டும் அம்சங்கள் இருப்பினும்... சீரான கதையோட்டம், வலுவான திரைக்கதை போன்றவை பின் தங்கி இருக்கின்றன.

நகைச்சுவையான பொழுதுபோக்கை விரும்பும் சிறார்கள் கண்டு ரசிக்கலாம்.  

ஆரஞ்சு -  ஆரஞ்சு சிக்னல்.

---------------------------------------

விமர்சனம்: சிவகுமார். 

                      

கோடை நாடக விழா 2022 - எதிர்வினை

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் நான்காவதாக   அரங்கேறிய நாடகம் ப்ரசித்தி க்ரியேஷன்ஸ் வழங்கிய எதிர்வினை. எழுத்து மற்றும் இயக்கம்: அம்பி ராகவன்.

செல்வந்தர் வீட்டுப்பிள்ளை அபிஷேக் ஒரு கல்லூரி மாணவன். போதை, பெண்கள் என மனம்போல வாழ்கிறான். பாசம் போன்ற சென்டிமென்ட் எல்லாம் அவனுக்கு பிடிக்காது. ஒருநாள்.. விளையாட்டுத்தனமாக கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்து மிரட்ட.. அதனால் அவனுக்கு ஏற்படும் சிக்கல்கள், அவனால் பிறருக்கு ஏற்படும் இன்னல்களை சொல்லும் கதை.      

முதல் சில நிமிடங்களில் அபிஷேக் ஆக வந்த மகேஷ் மற்றும் ராஜிவ் ஆக நடித்த வெங்கடேஷ் இருவரும் நடிக்க தடுமாறினாலும்.. அதன் பிறகு சுதாரித்து கொண்டனர். சரியாக வசனங்களை பேச வேண்டும் என்கிற பதட்டம் அசிஸ்டன்ட் கமிஷனராக நடித்த அம்பி ராகவனை தவிர்த்து மற்ற பலருக்கும் இருந்தது. அனுபவம் மிக்க நடிகையான லட்சுமி உட்பட. ஆங்காங்கே வசனங்களை தவறுதலாக உச்சரித்தனர்.

மேடைக்கு பின்னே மைக் மூலம் பேசும் கதாபாத்திரங்களின் குரல் தொழில்நுட்ப இடையூறால் சில இடங்களில் நமக்கு கேட்காமல் போனது. இன்னும் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கலாம்.

அம்பி ராகவனின் நேர்த்தியான நடிப்பு மட்டுமே ஆறுதல். உரக்க கத்தி, ஆவேசமும் - விரக்தியும் கலந்த நடிப்பை நன்கு தந்திருக்கிறார் மாஜேஷ்.  

வாய் பேச இயலாத தந்தையாக ஆனந்த் ஸ்ரீனிவாசன். பல்வேறு நாடகங்களில் இவர் சிரத்தையாக நடித்திருப்பினும் ஏனோ ஒட்டாமல் போகும். ஆனால் இம்முறை வித்யாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.    

இசையமைப்பு விஸ்வஜெய். குடும்ப சென்டிமென்ட் மற்றும் க்ரைம் த்ரில்லர் பாணியில் அமைந்துள்ள கதைக்கு தன்னாலான பணியினை செய்துள்ளார். நாடகம் முழுக்க பின்னணி இசையை ஒலிக்க விட்டிருக்க வேண்டுமா எனும் கேள்வி எழுகிறது. அதேநேரம் அவ்வப்போது நாடகத்தில் ஏற்படும் தொய்வினை இந்த இசைதான் சரி செய்கிறது.

பல இடங்களில் காட்சிக்கு பொருத்தமாகவும், சில இடங்களிலும் பொருந்தாலும் இருக்கிறது விஸ்வஜெய்யின் வேலைப்பாடு. 

அபிஷேக்கை ஆட்டுவிக்கும் மர்ம நபர் யார் எனும் ஆர்வம் நம்மையும் தொற்றுகிறது. ஆனால் அதே பரபரப்பு நாடகம் முழுக்க இருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

நீதிமன்றத்தில் அபிஷேக்கிற்கு எதிராக...அவனது வீட்டில் கைப்பற்றப்பட்ட  சிசிடிவி  ஆதாரத்தை சமர்ப்பிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் சரத் (அம்பி ராகவன்).  

'சிறந்த முயற்சி எடுத்து இந்த ஆதாரத்தை ஒப்படைத்துள்ளது காவல்துறை. இந்த வீடியோவின் அடிப்படையில் அபிஷேக் குற்றவாளி என்று உறுதியாகிறது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை' என தீர்ப்பளிக்கிறார் நீதிபதி.

நீதிபதி ஐயாவிற்கு இரு முக்கிய கேள்விகள்:

1. குற்றம் நடக்கும் இடத்தில்.. அதுவும் ஒரு வீட்டின் ஹாலில் இருக்கும் சிசிடிவி கேமராவை கைப்பற்றுவது போலீஸுக்கு மிக எளிமையான வேலை. இதை போற்றிப்பாராட்ட என்ன இருக்கிறது?

2. வீடியோவில் அபிஷேக் கொலை செய்தான் என்பது எப்படி 100% உறுதியானது? 

தன்னை ஆட்டுவிக்கும் நபரிடம் கெஞ்சி கதறுகிறான். அவர் சொல்வதை எல்லாம் செய்கிறான். அந்த சிசிடிவியில் அவனது ரியாக்சன்கள் அனைத்துமே உள்ளதே!! 

அபிஷேக் குற்றவாளி என்றால் அவன் கொலை செய்வதிலும், தடையங்களை மறைப்பதிலும் மட்டும்தான் முனைப்பாக இருப்பான். அப்படி எதுவும் சிசிடிவியில் பதிவாகவில்லை.

ஆகவே இந்த ஆதாரத்தை அடுத்த கட்ட விசாரணைக்கு பயன்படுத்தலாமே தவிர.. நேரடியாக தண்டனை வழங்க வேண்டிய அவசியமென்ன?

சரி. அடுத்த விஷயத்திற்கு வருவோம். ஸ்வேதா எனும் பெண்ணுடன் நட்பு பாராட்டுகிறான் அபிஷேக். ஒரு கட்டத்தில் அவளுடன் மோதல் ஏற்படுகிறது. பிறகு தனது நண்பன் ராஜீவின் தங்கையான வர்ஷாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்கிறான் என்று சொல்லப்படுகிறது.

வர்ஷாவின் வீட்டிற்கு சில சமயம் அபிஷேக் வந்து சென்றதாகவும் அசிஸ்டன்ட் கமிஷனர் குறிப்பிடுகிறார். அதற்கு முன்பு வந்த காட்சி ஒன்றில் 'தனது தங்கை வாய் பேச இயலாதவள். தாழ்வு மனப்பான்மை கொண்டவள். ஆகவே அவளுக்கு நட்பு வட்டம் இல்லை' என ராஜீவ் கூறியிருந்தான்.

அப்படியிருக்க... எந்நேரமும் வீட்டில் இருக்கும் ராஜீவ் & வர்ஷாவின் தந்தை தேவராஜுக்கு அபிஷேக் வந்து சென்றதை பார்க்க ஒருமுறை கூடவா சந்தர்ப்பம் அமையவில்லை?

ரேப், கற்பழிப்பு போன்ற வார்த்தை பயன்பாடுகளை தற்கால நாகரீக சமுதாயம் தவிர்த்து வருகிறது. செய்தி சேனல்கள் மற்றும் நாளிதழ்களும் இவ்வார்த்தைகளை பயன்படுத்துவதில்லை. மாற்றாக பாலியல் துன்புறுத்தல், Sexual Abuse, Sexual Assault என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே இதை இயக்குனர் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கதையின் முக்கியமான திருப்புமுனை எதுவாக இருக்கிறதோ.. அதை நேர்த்தியாக எழுத்திலும், மேடையிலும் கொண்டுவர வேண்டும். அப்படி பார்க்கையில் சிசிடிவி பற்றி இங்கு சொன்னதைப்போல இன்னொரு முக்கியமான இடமும் உண்டு.

வர்ஷாவை பாலியல் துன்புறுத்தல் செய்து அபிஷேக் கொன்றான் என்பதை மேடையில் காட்சிப்படுத்த இயலாது மற்றும் கூடாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் அவளை ஆரம்பத்தில் அபிஷேக் எப்படி பின்தொடர்ந்தான், சீண்டினான் (Stalking), அதனால் அவள் எப்படி மன உளைச்சலுக்கு ஆளானாள் என்பதை காட்சி மூலம் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி இருந்தால்தானே வர்ஷா இறக்கும்போது அவள் மீது நாடகம் பார்ப்போருக்கு பரிதாபமும், அபிஷேக் மீது கடும் கோபமும் வரும். இந்த முக்கியமான கட்டத்தை இயக்குனர் ஏன் தவற விட்டார்?

க்ரைம் த்ரில்லர் நாடகங்களில் இதுபோன்ற விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியம். 

இப்படியான கேள்விகள் இருப்பினும்..பெரியளவில் பொறுமையை சோதிக்காமல் ஒரு மாறுபட்ட களத்தை தேர்வு செய்திருப்பது நன்று. இனி ப்ரசித்தி சார்பில் வரும் நாடகங்களில் நடிகர்களுக்கு நல்ல பயிற்சியளித்து மேடையில் ஏற்ற வேண்டும்.       

எதிர்வினை - க்ரைம் நிறைவு. த்ரில் குறைவு.

----------------------------------------------------

விமர்சனம்: சிவகுமார்.

கோடை நாடக விழா 2022 - பஞ்சவடி


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் மூன்றாவதாக  அரங்கேறிய நாடகம் PMG மயூரப்ரியாவின் பஞ்சவடி. எழுத்து மற்றும் இயக்கம்: P. முத்துக்குமரன். 

வனவாசம் செல்லும் ராமன்... அங்கே அகத்திய முனிவரின் சொல்லை ஏற்று ஐந்து ஆலமரங்கள் இருந்த பகுதியில் தங்கினான். அதன் பெயர்தான் பஞ்சவடி. இக்கதையில் முதியோர் இல்லம் ஒன்றின் பெயராக பஞ்சவடியை தேர்வு செய்துள்ளார் இயக்குனர்.

தனது தந்தையை தொடர்ந்து பஞ்சவடியை திறம்பட நிர்வகித்து வருகிறார் சௌந்தர்யா. இதில் A ப்ளாக் என்பது வசதியற்றவர்கள் தங்க இலவசமாகவும், B ப்ளாக் என்பது கட்டணத்துடன் கூடிய உயர்தர வசதிகள் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த இல்லத்தில் ரஹீம் பாய், ஆத்மா, ஜீவா உள்ளிட்டவர்கள் அடைக்கலம் புகுந்து சந்திக்கும் பிரச்னைகள், முதியோர் இல்லம் நடத்துவதில் உள்ள மனநிம்மதி மற்றும் மன உளைச்சல்கள் பற்றி விளக்கமாக சொல்கிறது இக்கதை.

நடிகர்களில் ஆத்மநாதனாக வரும் கணபதி சங்கரின் நகைச்சுவையும், ஜீவானந்தமாக VPS ஸ்ரீராமனின் குணச்சித்திரமும் பெரிதும் ஈர்க்கின்றன. முந்தைய நாடகங்களில் வசன உச்சரிப்பு மற்றும் நடிப்பில் இருந்த சில குறைகளை களைந்து இம்முறை பாராட்டும்படியான நடிப்பை தந்துள்ளார் கணபதி சங்கர். நாடகம் பார்ப்போரின் மனநிலையை குதூகலமாக வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.

காப்பகத்தின் உரிமையாளர் சௌந்தர்யாவாக வரும் அனு சுரேஷ் தனது பாந்தமான நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு முழுமை செய்துள்ளார்.  'ரஹீம் பாய்' முத்துக்குமரன், 'மருத்துவர்' கௌரிசங்கர் உள்ளிட்டோரின் நடிப்பிலும் குறையில்லை.

வலம், இடமென இரண்டு ப்ளாக்குகள், நடுவே ஒரு சிறு கோவில், குண்டு பல்புகள் என நல்லதோர் அரங்க அமைப்பை தந்துள்ளனர் சைதை குமார் மற்றும் சண்முகம்.

பேராசிரியரின் உடலுடன் ஆம்புலன்சில் பயணிக்க செல்லும் 'ஆத்மா' ஒரு அருமையான குறியீடு. வயதான காலத்தில் பெற்றவர்கள் எப்படி இருக்க வேண்டும் என சௌந்தர்யா விளக்குமிடம், க்ளைமாக்ஸ் காட்சி, ஆங்காங்கே சிரிக்க வைக்கும் வசனங்கள் என சிறப்பாக களமாடியிருக்கிறது முத்துக்குமரனின் எழுத்து.

அதேநேரம்.. எந்த சார்புத்தன்மையும் இன்றி நாடகம் போடுவதில் இயக்குனர் முத்துக்குமரனுக்கும், தயாரிப்பாளர் கணபதி சங்கருக்கும் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த இவர்களின் நாடகத்தைப்போல இதிலும் தனிப்பட்ட சித்தாந்தங்கள் வலிந்து திணிக்கப்பட்டிருக்கின்றன.

நாடகத்தின் முதல் காட்சியே அதற்கு சான்று.

'எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஆனால் சுத்த சைவம் மட்டுமே வழங்கப்படும்' என்று அலைபேசியில் கூறுகிறார் சௌந்தர்யா. எப்படி ஒரு முரண் பார்த்தீர்களா?

அசைவ உணவிற்கு பழகிய பிற மதத்தவர் மற்றும் சாதியினர் பஞ்சவடியில் சேர்ந்தால்.. சைவம் மட்டுமே உண்ண வேண்டும் என்பதற்கான நிர்பந்தம் ஏன்? 

நிதிப்பற்றாக்குறை இருந்தால்.. அசைவம் வாங்க இயலாது என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் பஞ்சவடிக்கு போதுமான நிதி கிடைக்கிறது. இதுபோக B ப்ளாக்கில் அதிகப்பணம் கட்டி சேர்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சைவம் மட்டுமே சாப்பிட வேண்டுமா? 

வயதானவர்கள் அசைவம் சாப்பிட்டால் உடலுக்கு ஆகாது என்று காரணம் இருந்தால்.. அது அனைவருக்கும் பொருந்துமா? தரமான அசைவத்தை தேவையான அளவு உண்டால் உடலுக்கு கெடுதி என்று அறிவியல்பூர்வமாக எங்கேனும் சொல்லப்பட்டுள்ளதா? இதற்கு எந்த விளக்கமும் நாடகத்தில் இல்லை.

A ப்ளாக் சாதாரணமாகவும், B ப்ளாக்கின் சுவர்கள் மற்றும் தூண்கள் காவி நிறத்திலும் இருப்பதற்கான குறியீடு என்ன என்பது சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். 

இஸ்லாமியராக ரஹீம் பாய் உள்ளிட்டவர்கள் A ப்ளாக்கில் இருக்கிறார்கள். வசதியான ஆத்மநாதன் உள்ளிட்டோர் B ப்ளாக்கில் இருக்கிறார்கள். இதில் ரஹீம் பாய் பெரிதாக படிப்பறிவு இல்லாதவர். அவருக்கு மடிக்கணினி பயன்படுத்தும் முறையை சொல்லித்தருகிறார் ஆத்மநாதன்.

A ப்ளாக்கில் இருப்பவர்கள் வசதியற்றவர்கள், B ப்ளாக்கில் இருப்பவர்கள் செல்வந்தர்கள் என்பதோடு நிறுத்தி இருந்தால் சரி.

ஆனால் A ப்ளாக்கில் இருக்கும் ரஹீம்.. B ப்ளாக்கில் உள்ள ஆத்மநாதன் அளவிற்கு படிப்பறிவு இல்லாதவர் என்பதும், இஸ்லாமியர் என்பவர் வசதியற்ற  ப்ளாக்கில் இருப்பதும் இயல்பான கதையோட்டமல்ல. இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் மனதில் ஆழமாக படிந்துவிட்ட காவியோட்டம்.

ஜீவானந்தம் எனும் பெயர் எதற்கு வைக்கப்பட்டது எனும் கேள்விக்கு 'என் தந்தை கம்யூனிஸ்ட். அதனால் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜீவாவின் பெயரை எனக்கு வைத்து விட்டார்' என்று வெறுப்புடன் சொல்கிறார் VPS ஸ்ரீராமன். எதற்கு அந்த பெயரில் இப்படி ஒரு வெறுப்பு?

அனாதை உடல்களுக்கான இறுதி காரியங்களை பல்வேறு அமைப்புகள் முன்வந்து செய்கின்றன. அதில் சந்திரசேகர சேவா சமிதி என்பதை மட்டும் பிராண்டிங் (Branding) செய்வதற்கான தேவை எதற்கென்று தெரியவில்லை.

இனியாவது நாடகத்தை எழுதி, இயக்குவோர் 'அனாதை' எனும் வார்த்தையை தவிர்த்து 'ஆதரவற்றவர்கள்' எனும் வார்த்தையை பிரயோகித்தல் நலம். குறிப்பாக சமகாலத்தில் நடக்கும் கதைகளில்.

'செல்லாத்தா.. மாரியாத்தா' என தெருவில் இருக்கும் ஸ்பீக்கரில் அம்மன் பாடல்கள் ஓங்கி ஒலிப்பதை கேட்டு கடுப்பாகிறார் ஆத்மநாதன். இறுதிக்காட்சி நெருங்கும்போது மனம் மாறுகிறார் என்பது ஒருபக்கம். ஆனால் நமக்ககான கேள்வி இதுதான்..      

சென்னையில் ஆடிமாத அம்மன் பாடல்கள் மட்டுமல்ல. அனைத்து மாதங்களிலும் வெவ்வேறு கடவுளின் பாடல்கள் இரைச்சலாகவே ஒலிக்கின்றன. விநாயகர் சதுர்த்தி, சிவராத்திரி, சரஸ்வதி பூஜை என பட்டியல் போடலாம்.       

இதில் அம்மன் பாடல்கள் மட்டும் எரிச்சலை உண்டாக்குகின்றன எனும் தொனியை ஆத்மநாதன் மூலம் நமக்கு இயக்குனர் தெரிவிப்பது ஏன்? அம்மனையும் A ப்ளாக்கில் சேர்த்து விட்டீர்களா?   

அனைவரும் ரசிக்கும்படி நாடகங்களை எழுதி, இயக்க விரும்புபவர்கள் சாதி, மத, அரசியல் உள்ளிட்ட விஷயங்களை புகுத்துவது அவர்களின் கருத்து சுதந்திரம்.

ஆனால் அவை ஒருதலைப்பட்சமாகவும், தனது தனிப்பட்ட சித்தாத்தங்களை திணிக்கவும், கைத்தட்டலை பெறும் ஒற்றை நோக்கிலும் இருப்பது அபத்தம். 

இவையெல்லாம் கதையின் மையத்தையும், படைப்பாளியின் நேர்மையையும் சிதைத்து விடும் என்பதை எப்போது புரிந்து கொள்வார்கள் என்பது பெரும் கேள்விக்குறி.

இப்படியான குறைகளை தவிர்த்து பார்த்தால்.. குறைந்தபட்ச உத்திரவாதத்தை தரும் நாடகமாக வந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

பஞ்சவடி - மனங்கள் இணையும் வனவாசம். சார்புத்தன்மை மட்டுமே தோஷம்.      

--------------------

விமர்சனம்: சிவகுமார்.  

 

கோடை நாடக விழா 2022 - மின்மணிகள்


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் இரண்டாவதாக அரங்கேறிய நாடகம் டம்மிஸ் ட்ராமாவின் மின்மணிகள். எழுத்து மற்றும் இயக்கம்: ப்ரசன்னா.    

நாடக ரசிகர்களுக்கு நடிகராக பரிச்சயமான ப்ரசன்னா, இதற்கு முன்பு மேடையில் குறுநாடகம் ஒன்றை இயக்கி இருந்தார். தற்போது முழுநீள மேடை நாடக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன் கோவிந்த்.  தெரிந்தவர்களின் பிள்ளைகள் எல்லாம் வெளிநாடுகளில் வேலை செய்வதால் தங்கள் மகனும் அப்படியொரு நிலைக்கு உயர வேண்டுமென்பது அவனது பெற்றோர்களின் ஆசை.

அவர்களின் எண்ணப்படி ஃப்ரான்ஸ் தலைநகரம் பாரீஸிற்கு செல்லும் வாய்ப்பு கோவிந்திற்கு கிடைக்கிறது. அவனும் தனது நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தியான சந்தோசத்தில் இருக்கிறான். அப்போது ஒரு எதிர்பாராத திருப்பம். அதை எப்படி சமாளிக்கிறான் என்பதே கதை.

தற்கால மேடை நாடகங்களில் தொடர்ச்சியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் மிகக்குறைவு. குறிப்பாக இளைஞர்கள். அவ்வரிசையில் ப்ரசன்னா ஒரு மிகச்சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை. இங்கும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். 'என்னுடைய நடிப்பைப்பார். பிரமாதமாக இருக்கிறதா?' என ரசிகர்களை மனதில் வைத்து நடிக்காமல் கேரக்டரை மட்டுமே பின்பற்றி நடிப்பதே ஆகச்சிறந்த நடிப்பு. அதை தரும் பிரமாதமான நடிகர் இவர் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

மின்சாரத்துறை அதிகாரி ஆனந்தனாக வரும் நரேனுக்கு தனது நடிப்பை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். ஸ்ரீதர், சுசித்ரா ரவி உள்ளிட்டோரின் பங்களிப்பும் நிறைவு. 

கோவிந்தின் நண்பன் மிதுன் எனும் கேரக்டரில் வரும் சாய் ப்ரசாத் ஆங்காங்கே சிரிக்க வைத்தாலும்.. அவருக்கான வசனங்களில் ஒரு சிலவற்றை குறைத்திருக்கலாம். அவர் வேகமாக பேசுவதையும் கூட.  

தனியார் நிறுவனமும், அரசு நிறுவனமும் இணைந்து பணியாற்றினால் எப்படி இருக்கும்? அதில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன? அதன் ஊழியர்களுக்கு இடையே நடக்கும் உரையாடல்களும், புரிதல்களும் எவ்வாறு இருக்கும் என்பதை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

எதை நோக்கி கதை நகரும் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு  திரைக்கதை, நம்பத்தகுந்த வசனங்கள், அதை அழகான நகைச்சுவையுடன் கூறியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன. அரசு ஊழியர்களிலும் நேர்மையாக உழைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை மையப்படுத்தி இருப்பது மாறுபட்ட பார்வை. 

டீ என்பது பாமர மக்களுக்கானது, காஃபி என்பது உயர்குடிகளுக்கானது எனும் பிம்பம் நம்மிடையே விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த மாயையை இங்கே உடைத்திருக்கிறார் இயக்குனர். அனைவரையும் சமமாக பாவிக்கும் எண்ணம் இருந்தால் மட்டுமே இப்படியான காட்சியை சிந்திக்க இயலும்.

ஸ்ரீதர் மற்றும் பத்மா ஸ்டேஜ் கண்ணன் அரங்க அமைப்பு நன்று. 

நகைச்சுவை என்பது வலிந்து வைக்கப்படாமல் இருக்க வேண்டும். அதை உணர்ந்து கதையோடு கலந்து சிறந்த முறையில் வசனங்களை எழுதியுள்ளார் ப்ரசன்னா.

காஃபி ஜோக், ரைமிங் - டைமிங் என புளித்தமாவு காமெடிகளை இன்னும் எழுதி வரும் சீனியர்களுக்கு மத்தியில் ப்ரசன்னாவின் பாணியில் எழுதப்படும் வசனங்கள் மிகப்பெரிய ஆறுதல்.   

இயக்குனராக இது முதல் நாடகம் என்பதால் வழக்கமான குடும்பக்கதையை எடுத்து தப்பிக்க நினைக்காமல் அல்லது பரீட்சார்த்த முயற்சி என்கிற பெயரில் ஆர்வக்கோளாறாக எதையோ எடுத்து நம்மை குழப்பாமல்... கச்சிதமான ரூட்டை பிடித்திருக்கிறார் ப்ரசன்னா.

ஆரம்பமே வெற்றி. இப்பயணம் தொடர வாழ்த்துகள்.  


மின்மணிகள் - தடையில்லா மின்சாரம்.  

-----------------------------------------------

விமர்சனம்: சிவகுமார்.