கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் ஒன்பதாவதாக அரங்கேறிய நாடகம் கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வழங்கிய சீதாபதி. எழுத்து மற்றும் இயக்கம்: ரத்னம் கூத்தபிரான்.
சீதா மற்றும் ரகுபதி இருவரும் மனமொத்த இளம் தம்பதிகள். திருமணமான சில ஆண்டுகள் கழித்து ரகுபதிக்கு ஒரு கண்டம் ஏற்படுவது உறுதி என குறிசொல்லும் பெண்மணி கூறுகிறார். ஒருநாள் அவன் பைக்கில் வெளியே செல்லும்போது விபத்தொன்றில் சிக்க நேரிடுகிறது. இதனை தொடர்ந்து நடக்கும் திருப்பங்கள் என்ன?
விக்னேஷ் மற்றும் ஸ்வாதி இருவரும் பரஸ்பரம் அன்பை பரிமாறும் ஜோடிகளாக நன்கு நடித்திருந்தனர். கௌரவ வேடத்தில் ரத்னம் கூத்தபிரான் மற்றும் பிறரும் தங்கள் பணியை செவ்வனே செய்திருந்தனர்.
முன்பு குறிப்பிட்டது போல.. சிறப்பாக நடிக்கும் மிகச்சில இளைஞர்களில் விக்னேஷும் ஒருவர். படபடப்பு, கோவம், சந்தோசம் என அனைத்திலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார்.
ரத்னம் மற்றும் விக்னேஷ் இருவருக்குமிடையே ஏற்படும் முரண்களும், மோதல்களும் முந்தைய நாடகங்களில் வந்திருந்தாலும்.. இம்முறையும் அதேபோல ரசிக்க வைக்கின்றன.
எதிர்பாராத திருப்பங்களை தந்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது இயக்குனர் ரத்னத்தின் தனிச்சிறப்பு. இம்முறையும் முயற்சி தப்பவில்லை. ரகுபதி தனது பெயரை மாற்றி உச்சரிப்பது, போலீஸ் விசாரணை, ரத்னம் கதைக்குள் நுழைந்து ஏற்படுத்தும் மாற்றம், இறுதிக்கட்டத்தில் குறிசொல்லும் பெண்மணி கூறும் தகவல் என திரைக்கதையில் நல்ல சுவாரஸ்யம்.
கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ப விஸ்வஜெய் அமைத்திருக்கும் இசை அட்டகாசம். காதல், மழை, த்ரில் என வெவ்வேறு பின்னணி இசைகளால் அமர்க்களம் செய்திருக்கிறார்,
இதற்கு இணையாக மயிலை பாபுவின் பொருத்தமான ஒளியமைப்பும் போட்டி போட்டுக்கொண்டு நம்மை கவர்கிறது.
நாடகத்தின் முதல் காட்சி. ஒரு சந்தோஷமான நாளில் இரு இளம் தம்பதிகள் பேசிக்கொள்கிறார்கள் இப்படி:
'ராமர் பிராமணர். ராவணரும் பிராமணர்'
'ஆனால் ராமரை ஒரு கூட்டம் எதிர்க்கிறதே?'
கதைக்கு இந்த தகவல் எதற்கு உதவுகிறது? கேக் வெட்டும் நேரத்தில் சாதிப்பெருமையை பேச வேண்டியதென்ன? பெருமை என்பது நடத்தையால் வருகிறதா அல்லது சாதியால் வருகிறதா? ராமாயணத்தின் மூலம் இளம் தலைமுறைக்கு சொல்லப்படும் நல்ல நீதிகள் யாவை என்பதுதானே மக்களுக்கு தேவை?
ராமன் மற்றும் ராவணனின் சாதியை குறிப்பிடுவது பிற்போக்குத்தனத்தின் உச்சம்.
ராமரை எந்தக்கூட்டம் எதிர்க்கிறது என்பதை வெளிப்படையாகவே சொல்லலாமே? சொன்னால் மக்களும் தெரிந்து கொள்வார்களே. சொல்வதற்கு ஏன் இந்த அச்சம்?
ராமரை எதிர்ப்பது இருக்கட்டும். ராமரின் பெயரால் சக இந்தியர்களை மிரட்டி, அவமானப்படுத்தும் நிஜமான காட்சிகளை இயக்குனர் பார்த்ததே இல்லையா? இதெல்லாம் உங்கள் நாடகத்தில் வசனமாக வராதா?
Jai Sri Ram Video 1: https://youtu.be/BGhmGqdQVGA
Jai Sri Ram Video 2: https://youtu.be/wm5zptCvqSg
இதற்கெல்லாம் உங்கள் பதிலென்ன?
கரண்ட் கட் ஆனதற்கு காரணம் அணில்தான் என்கிறார் சீதா. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பெயர் சொல்லி நையாண்டி செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.
சரி. நிஜத்தில் இருந்து கதைக்கு வருவோம். முதல் ஒருமணிநேரம் விறுவிறுப்பாக நகரும் கதை அதன் பிற்பாடு வலுவிழக்க ஆரம்பித்து, க்ளைமாக்ஸில் நமத்துப்போய் விட்டது.
சீதாபதி - இலக்கில் படாமல் வீழ்ந்த அம்பு.
-------------------------------
விமர்சனம் - சிவகுமார்.

No comments:
Post a Comment