கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31- வது கோடை நாடக விழாவில் 12-வது மற்றும் இறுதியாக அரங்கேறிய நாடகம் - அவள் பெயர் சக்தி. எழுத்து மற்றும் இயக்கம்: தாரிணி கோமல். தயாரிப்பு: கோமல் தியேட்டர்.
ஜனனி - கார்த்திக் தம்பதியர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். கைநிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. இவர்களின் ஒரே மகள் ஆர்த்தி. குழந்தையை கவனித்து கொள்வது, வீட்டுப்பொறுப்பு என அனைத்தையும் ஜனனி மட்டுமே ஏற்று செயல்படுகிறாள்.
ஒரு கட்டத்தில்...வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் கார்த்திக் மீது எரிச்சலடையும் ஜனனி.. மகளுடன் தன் பிறந்த இல்லமிருக்கும் சென்னைக்கு வந்து விடுகிறாள். இதனால் அவளது வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள் என்னவென்பதை சொல்கிறது கதை.
ஒரு நாடகத்தில் அதிகபட்சம் ஓரிருவர் நன்றாக நடிப்பதே ஆச்சர்யம். ஆனால் இங்கே அனைவருமே அசத்தி இருக்கிறார்கள். தந்தை சங்கரனாக வரும் பரமேஸ்வரன், மாப்பிள்ளைகள் கார்த்திக் (சித்தார்த்) , அர்ஜுன் (ஸ்ரீனி), இதர துணை நடிகர்கள் என பட்டியல் இடலாம்.
கொள்ளுப்பாட்டியாக உஷா ரவிச்சந்திரன், பாட்டியாக அனுராதா கண்ணன், இரு மகள்கள் - ஜனனியாக க்ரித்திகா. ஹரிணியாக மயூரா, கொள்ளுப்பேத்தி ஆர்த்தியாக இயல். யாருடைய நடிப்பை பாராட்டுவது? ஆளாளுக்கு போட்டி போட்டு நடித்துள்ளனர்.
இக்கதையில் ஒற்றை கதாநாயகி அல்ல. இந்த ஐவரும்தான். மிகச்சிறந்த நடிகையர் தேர்வு.
இவர்களில் ஒவ்வொருவரும் 360 டிகிரி ஆங்கிளில் நடிக்கும்படியான கதையமைப்பு. உதாரணம்: ஜனனிக்கு மனைவி, தாய், மகள், பேத்தி, தனியார் நிறுவன உயர் பொறுப்பாளர் என வெவ்வேறு விதமாக நடிக்க வேண்டிய பொறுப்பு.
அவற்றை நன்குணர்ந்து அனைவரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர்.
சிறுமி இயலுக்கு இது முதல் நாடகமாம். நம்ப முடியவில்லை. பொதுவாக சிறார் வேடங்களில் நடிப்போர்.. சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வார்கள். ஆனால் நாடகம் முழுக்க வலம் வந்து, பிசிறு தட்டாமல் வசனம் பேசி.. நடிப்பால் நம்மை கட்டிப்போட்டுள்ளார் இந்த இயல் எனும் இளம் புயல். நாடக உலகிற்கு ஒரு அதிரடியான, ஆற்றல்மிகு வரவு.
குடும்பத்தின் ஆணிவேரான கொள்ளுப்பாட்டி கேரக்டரில் உஷா ரவிச்சந்திரன். அனுபவம் வாய்ந்த வேடத்திற்கு அனுபவம் வாய்ந்த நடிகை. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் குடும்பத்தை சாமர்த்தியமாக வழிநடத்தும் நடத்தும் விதத்தில் மனதில் நிற்கிறார்.
தனித்திறமை இருந்தும்.. முன்னேற முடியாத..வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பபெண்ணை பிரதிபலிக்கும் அனுராதா ரமணனின் பாந்தமான நடிப்பு நிறைவு.
இவரது மகள்களாக க்ரித்திகா மற்றும் மயூரா. இருவருக்கும் இது இரண்டாம் நாடகமாம். ஆனால் பல நாடகங்களில் நடித்தவர்கள் என்று சொல்லும் அளவிற்கு கச்சிதமான நடிப்பு.
மகளிடம் பாசம், கணவன் மீதான நியாயமான கோவம், பெரியோர் சொல்லும் அறிவுரையை ஏற்கும் நிதானம் என பாராட்டும்படியான நடிப்பை தந்துள்ளார் க்ரித்திகா.
தேவையற்ற கட்டுப்பாட்டு வளையத்தில் சிக்காமல் தனக்கான வாழ்க்கையை வாழ நினைக்கும் ஜனனியின் தங்கையாக மயூரா. அதற்காக பெரியோரை மதிக்காமல் அலட்சியமாய் இருக்கும் பெண்ணல்ல. பிறரின் சொல்லுக்கும் மரியாதை தந்து, அதில் ஒப்புதல் இருந்தால் செயல்படுத்தும் மனப்பக்குவம் கொண்ட கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார்.
'ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிப்பிட்டு எழுத வேண்டுமா? என்றால் ஆம் என்று உறுதியாக சொல்லலாம். நாடகம் பார்த்தால் இதற்கான காரணம் புரியும்.
இத்தனை பெண் புயல்களுக்கு மத்தியில் ஸ்திரமான படகினைப்போல பயணித்து கரையை தொடுவது கடினம். ஆனால் அதனை கச்சிதமாக செய்திருக்கிறார் தந்தையாக நடித்த பரமேஸ்வரன்.
குகப்பிரசாத் மற்றும் விஸ்வஜெய்யின் இசையமைப்பு மற்றும் இசைக்கோர்வைகள் பக்க பலம்.
இக்கால தலைமுறையினர்.. வேலையில் மூழ்கி.. குடும்பத்தை மறக்கிறார்கள். பெற்றோர்களை மதிப்பதில்லை. காலம் தரும் படிப்பினையால் ஞானம் பிறக்கிறது எனும் டெம்ப்ளேட்டில் அவ்வப்போது நாடகங்கள் வருவதுண்டு. அப்படியான ஒன்றைத்தான் கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனர் தாரிணி தேர்வு செய்துள்ளார்.
பலமுறை சொல்லப்பட்ட கதைகளில் சொல்லத்தவறிய நுட்பமான விஷயங்கள், மாறுபட்ட கோணங்கள் ஆகியவற்றை கையாண்டதால் புதுப்பொலிவுடன் இருக்கிறது இந்நாடகம். எதை சொல்கிறோம் என்பதை விட அதை எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம். இயக்குனர் வென்றுள்ள இடம் இதுதான்.
ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்படியான வெகு நேர்த்தியான திரைக்கதை. ஜனனியின் குடும்பத்தாருடன் நாமும் வாழ்கிறோம் எனும் உணர்வினை முழுமையாக ஏற்படுத்திய நம்பகத்தன்மைதான் தாரிணி ஏற்படுத்தி இருக்கும் திரைக்கதை மேஜிக்.
வசனங்கள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கப்பட்ட வைரங்கள். ஒற்றை வசனம் கூட வீண் போகவில்லை. ஒரு நாடகம் என்பது தன் போக்கில் செல்ல வேண்டும். அதில் வரும் நல்ல வசனங்களுக்கு ரசிகர்கள் ஆத்மார்த்தமாக கைத்தட்ட வேண்டும். இதுதான் உண்மையான வெற்றி.
இந்நாடகம் ஒவ்வொரு முறை அரங்கேறும்போதும் பல காட்சிகளில் ஆத்மார்த்தமான கைத்தட்டல்கள் ஓயாமல் ஒலிக்கும்.
கைத்தட்டல் வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்மந்தமே இல்லாத வசனங்களை கோர்த்து... பாராட்டு பெற நினைப்பது செயற்கையான தற்காலிக வெற்றி. இதை மற்றவர்கள் உணர வேண்டும்.
மிகச்சிறந்த நடிகர்கள், ஓரிடத்தில் கூட குறை சொல்ல இயலாத கதை, திரைக்கதை, வசனம். அனைத்தையும் ஒருங்கிணைத்து.. போற்றும்படியாக அமைந்திருக்கிறது இந்நாடகத்தின் இயக்கம்.
பலமுறை பார்த்தும், கேட்டும் பழகிய பெண் சுதந்திர புரட்சி வசனங்கள் மற்றும் அவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டுமென கூறும் அறிவுரைகள்...
...இந்த அரைத்த மாவு எல்லைகளை தாண்டி இருதரப்பு வாதங்களையும் சரிசமமாக முன்னிறுத்தி.. நடைமுறை வாழ்விற்கு தேவையான, நம்பகமான தீர்வினை தந்திருப்பதுதான் அவள் பெயர் சக்தியின் தனிச்சிறப்பு.
அடுத்தடுத்து இந்நாடகம் மேடையேறும்போது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்று அவசியம் பாருங்கள். நிச்சயம் உங்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம்.
அவள் பெயர் சக்தி - தரணி போற்றும் தாரிணியின் தரமான வெற்றி.
-------------------------
விமர்சனம் - சிவகுமார்.
No comments:
Post a Comment