கோடை நாடக விழா 2022 - கடவுளே இது நியாயமா?


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31-வது கோடை நாடக விழாவில் பதினொன்றாவதாக அரங்கேறிய நாடகம் - கடவுளே இது நியாயமா? எழுத்து, இயக்கம் - அருண்குமார். தயாரிப்பு: அன் டூ ஃபைன் ஆர்ட்ஸ்.  

பல்லாண்டுகாலமாக கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருபவர் எழுத்தாளர் ஏலக்காய். ஆனால் அவை அனைத்துமே திருப்பி அனுப்பப்பட்டு விடும். ஒருநாள் இவரது சிறுகதையை பதிப்பேற்ற ஒரு பத்திரிக்கை ஆசிரியர்  ஒப்புதல் தருகிறார். அதேநேரம் இவருக்கு கடவுள் நேரில் தரிசனம் தருகிறார்என்ன கோரிக்கை வைத்தார் ஏலக்காய்? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னவென்பதே கதை.

எழுத்தாளராக ரகுநாதன், மனைவி கமலாவாக ராஜலட்சுமி. யார் ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன? நான் சிறந்த எழுத்தாளன்தான் என ஏலக்காய் பிடிக்கும் பிடிவாதமும், அவரை வறுத்தெடுக்கும் கமலாவின் காமெடியும் நல்லதோர் துவக்கத்தை தருகின்றன.    

கடவுளாக அருண்குமார். 'கடவுள் எந்த நிறத்திலும் ஆடை உடுத்தலாம். அதை மற்றவர்கள் தீர்மானிக்க கூடாது' எனும் வசனத்துடன் ஆரம்பித்து நாடகம் நெடுக சீரான நடிப்பால் கவர்கிறார்.

சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை சரியாக மேடையில் பிரதிபலிப்பதில் அருண்குமார் எப்போதுமே ஒரு படி மேல். அதை இங்கும் நிரூபித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான நாடக குழுக்கள்.. முக்கியமாக வசனகர்த்தா மற்றும் இயக்குனர்கள் பாஜகவிற்கு சாமரம் வீசுவது, திமுகவை சாடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள். மிகச்சில குழுக்கள் மட்டுமே விதிவிலக்கு. இப்படியான வசனங்கள் கதைக்கும், கதாபாத்திரத்தின் தன்மைக்கும் பொருந்தாமல் போனாலும்.. திணித்து விடுகிறார்கள்.

எக்காரணம் கொண்டு பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி விடக்கூடாது என சத்தியம் செய்யாத குறைதான். தற்போது அந்நிலையில் இருந்து ஓரளவு மாற்றத்தை தந்துள்ளார் அருண்குமார். ஆம். ஓரளவுதான். இனி வரும் காலத்தில் தராசு முள் சரிசமமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படியான காட்சிகள்/வசனங்கள்:

கடவுளுக்கு கருப்பு உடை அணிவித்தது, 2,000 ரூபாய் நோட் பற்றிய பணமதிப்பு நீக்க (Demonetization) கிண்டல், ஹிந்தி தெரியாது போடா வசனம் ஆகியவற்றை சொல்லலாம். இதுதான் அந்த ஓரளவு. பெருமளவு வசனங்கள் எல்லாம் எதிர்திசையை நோக்கி..

ரெட்டை இலைநமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா, மஞ்சப்பை, இரண்டு ஏக்கர் நிலம், ஸ்டிக்கர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என நிறைய அடுக்கி இருக்கிறார். 

தாமரை, கரண்டி - தட்டுடன் தெருவில் நின்று கொரோனாவை விரட்டிய விசித்திர விஞ்ஞானம், நிர்மலா சீதாராமனின் ஒருகிலோ இலவச கொண்டைக்கடலை அறிவிப்பு, பிரதமரின் உஜ்வாலா இலவச சிலிண்டர் போன்ற செய்திகளை எல்லாம் அருண்குமார் படிக்கவில்லையா அல்லது படித்தும் மேடையில் சொல்ல தைரியமில்லையா? ஆகவே தராசு முள் ஒருபக்கமாக சாய்ந்து விடுகிறது.

ஆனால் இலவச கிரைண்டர், மிக்சி திட்டங்களை மட்டும் சாடுகிறார். அடடா... அடடா!!

டீ விற்ற நல்லவன் மேலே இருக்கிறான்கெட்ட இளவரசன் கீழே இருக்கிறான் என்றொரு வசனத்தை இவர் பேசுகிறார். இது மோடி மற்றும் ஸ்டாலினை குறிப்பிடுவதாக எண்ணாதீர்

டீக்கடை வைத்து முதல்வராக உயர்ந்த .பன்னீர்செல்வத்தையும், BCCI மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உயர் பதவியில் அமர்ந்துள்ள அமித் ஷா வீட்டு இளவரசர் ஜெய் ஷா என்பவரை சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.      

முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் விஐபிக்களை பாராட்ட விரும்பினால் தனியே பாராட்டு விழா நடத்தலாம். அது தனிப்பட்ட விருப்பம். துக்ளக் சத்யா, எஸ்.வி.சேகர் நாடகம் பார்க்க வந்த காரணத்திற்காக அவர்களை பாராட்டி பேசுவது கதைக்கு எங்கே உதவுகிறது?

அதேநேரம்.. சிறுகதைக்கு ஐந்தாயிரம், பட்சண தட்டு, நீங்கள் எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வருகிறீர்களா? ஆகிய சிறப்பான வசனங்களால் சிரிக்க வைத்துள்ளார் அருண்குமார்

போலி சமூக ஆர்வலர்கள், போலியான போராளிகளை தனியே குறிப்பிட்டு சாடுவது ஏற்புடையது. ஆனால் ஒட்டுமொத்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் போராளிகளை நக்கல் செய்வது வேலைக்கு ஆகாது. நல்லோர் இன்றி நல்லதோர் உலகமில்லை. 

போராளி என்றாலே திராவிட இயக்கங்கள் மற்றும் அதன் சித்தாந்தங்களை பின்பற்றும் நபர்கள்தான் எனும் போலி பிம்பத்தை இதன் மூலம் உருவாக்க சபா நாடக இயக்குனர்கள் முனைவது அப்பட்டமாக தெரிகிறது.

எதிர் திசையில்.. பாஜக மற்றும் இந்துத்வா வழி நடக்கும் சமூக ஆர்வலர்களும், போராளிகளுக்கும் ஏராளமாக உள்ளனர் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட இலவசங்கள் நாட்டை கெடுக்கும் என்றால்..கோவிலில் அர்ச்சகர், குருக்கள் மற்றும் பூசாரிகளின் தட்டுகளில் நித்தம் விழும் பணமும் இலவசமாக பெறுவதுதானே? இதைப்பற்றி சொல்ல மறந்துவிட்டீர்களா?

இருபக்கமும் உள்ள நிறைகுறைகளை சமமாக, வெளிப்படையாக விமர்சித்து இனி நாடகங்களை போட்டால் வருங்காலத்தில் சோ. ராமஸ்வாமியின் இடத்தை அருண்குமார் பிடிப்பார். அரசியல் மற்றும் அதை சார்ந்த சமகால பிரச்னைகளை சரியான மீட்டரில் நகைச்சுவை கலந்து நாடகமாகும் ஆற்றல் கொண்டவர். என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

எளிமையான கதை மற்றும் காமடி கலந்து சிந்திக்க வைக்கும் வசனங்கள் இருந்தாலும்.. அவை மட்டுமே போதுமானதாக இல்லை.

சுவாரஸ்யமான திரைக்கதையும் மற்றும் நிறைவான இயக்கமும் இருந்திருந்தால் மேலும் ரசித்திருக்கலாம்.

கடவுளே.. இது நியாயமாபோதாத வரம்.

--------------------------------

விமர்சனம் - சிவகுமார்

 

No comments:

Post a Comment