கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் பத்தாவதாக அரங்கேறிய நாடகம் 'நாட்டிய நாத நாடக சங்கமம்' வழங்கிய தரைமேல் பிறக்க வைத்தான். கதை, வசனம்: டிவி ராதாகிருஷ்ணன். இயக்கம்: ஸ்ருதி.
கடலோர பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேலு. மீனவரான இவரது மகள் செங்கமலம். மகளுக்கு திருமணம் செய்ய நல்ல மாப்பிள்ளை ஒருவரை தேடிப்பிடிக்கிறார் கதிர். திருமண செலவிற்கு பணம் தேவைப்படுகிறது.
அங்கிருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதி நீலமேகம். ஊழல் மன்னன். கதிர் உள்ளிட்ட மீனவர்களை வைத்து சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் திட்டத்தை வகுக்கிறார். இதற்கு சமூக சேவகர் வேணுகோபால் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் நடக்கும் விளைவுகள் என்ன?
அரசியல்வாதி நீலமேகமாக சிவ பிரசாத். கணீரென்ற குரல், தெளிவான வசன உச்சரிப்பு, பணக்காரத்திமிர், கோவம், மிரட்டல் என சரவெடி நடிப்பால் ரசிக்க வைக்கிறார். மறுபக்கம் சாந்தமான நடிப்பால் பெயர் வாங்குகிறார் சமூக சேவகர் வேணுகோபாலாக வரும் சேதுராமன். மற்றவர்களின் நடிப்பும் நன்று.
மீனவர்கள் வாழும் பகுதியில் நாமும் இருக்கிறோம் எனும் உணர்வை தந்த LED திரை பின்னணி அருமை.
கதையின் நாயகி செங்கமலமாக ஸ்ருதி. முதல் காட்சியில் மீனவர் படும் துயரங்களை உருக்கமாக பேசி நெகிழ வைக்கிறார். ஆனால் அதற்கடுத்து வரும் பல இடங்களில் தன்னருகே உள்ள நடிகர்களை பார்த்து வசனம் பேசுவதை விட... நாடக ரசிகர்கள் அமர்ந்திருக்கும்
திசையை பார்த்து மட்டுமே பேசுகிறார்.
இதை பார்க்கையில் பள்ளிகளின் ஆண்டு விழாவில் சிறுவர்கள் நடத்தும் நாடகம் போல செயற்கையாக உள்ளது. இனியேனும் இந்த முக்கியமான குறையை சரி செய்து கொள்ள வேண்டும்.
'சூரியனுக்கே டார்ச் அடிக்கிறாயா?' என்று கூறுகிறார் திமுக கட்சியின் ஊழல் மன்னன் நீலமேகம். ஊருக்கு உத்தமராக இருக்கும் வேணுகோபால் எந்நேரமும் காவி சட்டை மற்றும் காவி வேட்டியில் வலம் வருகிறார். அதாவது மக்களுக்கு தீங்கு செய்பவன் திமுக காரன். நல்லது செய்பவன் பாஜக காரன் அல்லது இந்துமத பற்றாளன். அடடா... கதை, வசனகர்த்தா டிவி ராதாகிருஷ்ணனின் நடுநிலைமை அருமை.
குஜராத் மற்றும் தமிழக மீனவர்கள் ஒப்பீடு, செருப்பால் அடிப்பதற்கு கிடைக்கும் தண்டனை என சில இடங்களில் வசனங்கள் யதார்த்தம்.
மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதற்கு காரணம் இவர்கள் மடிவலையை பயன்படுத்துவதே என்று வசனம் வருகிறது. ஆம். அது உண்மையும் கூட. ஆனால் இந்த ஒற்றை காரணத்திற்காக மட்டும்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில்
இலங்கை சிறையில் அடைக்கப்படுகிறார்களா?
இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் பலரை இலங்கை அரசு சுட்டுக்கொன்றதே...
அந்த செய்தியை ஒருமுறை கூட டிவி.ராதாகிருஷ்ணன் படிக்கவே இல்லையா? நம் நாட்டு மீனவர்களை மட்டும் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் குற்றவாளிகள் எனும் வட்டத்தில் அடைப்பது ஜமுக்காள வலையில் வடிகட்டிய பொய்.
'மீனவர்களின் வாழ்க்கையே துயரம் நிறைந்தது' என ஆங்காங்கே கூறப்படுகிறது.
முக்கியமாக கடலில் மீன் பிடிக்க செல்கையில் இலங்கையால் கைது செய்யப்படுவது பெருந்துயரம் என்று நாடகத்தில் கூறுகிறார்கள்.
இதெல்லாம் 2014 ஆண்டுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சியில். அப்போதுதான் ஏகப்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கால வரையறையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போதெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்காமல்... மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார் மன்மோகன் சிங்.
மோடியின் ஆட்சி வந்தபிறகு இந்நிலை பெருமளவு மாறியது. தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடல் படையின் அராஜகம் குறைந்தது.
ஆகவே கடல் எல்லை அருகே மீன்பிடிக்கும் மீனவர்கள்.. மன்மோகனின் மிக்ஸர் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகளை.. மோடியின் தற்போதைய ஆட்சியில் பெருமளவு சந்திக்கவில்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.
மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் முதல் தமிழ் நாடகம் இது என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அவ்வகையில் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.
ஆனால் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கெட்ட அரசியல்வாதி, மக்களுக்கு துணை நிற்கும் சமூக சேவகர் என மேம்போக்கான கதையை டிவி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்திருப்பது பலவீனம். அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டவில்லை. பல வசனங்களில் பழைய நெடி தூக்கல்.
மிக அரிதாக மீனவர் வாழ்வினை சித்தரிக்கும் நாடகம் மேடையேறும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்? ஆழமான
கதை இருக்கிறதா, புதிதாய் என்ன சொல்கிறார்கள், நாடகம் முடிந்ததும் நம் மனதில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதானே. அவை இங்கே இல்லாமல் போனது ஏமாற்றம்.
இதில் இயக்குனராக ஸ்ருதியின் பங்களிப்பு என்னவென்று தெரியவில்லை. மாறுபட்ட கதைக்களம் மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி ஒரு இயக்குனராக வெற்றி பெற்றிருக்க வேண்டாமா?
தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை அழுத்தமான கதையை தேட வைத்தான். நாரத கான சபா இருக்கையில் அமர வைத்தான். இறைவன்.. எங்களை நல்லதோர் இயக்கத்தை இறுதி வரை காண விடாமல் அலைய வைத்தான்.
ஐபிஎல் போட்டி, மெகா சீரியல்..
அனைத்தையும் விட்டுவிட்டு
நாடகம் காண வந்தோம் இங்கே....
தாக்கத்தை ஏற்படுத்தும்
அருமையான காட்சிகள் எங்கே...
வெள்ளி நிலா போல பிரகாசமாய்
எரியும் LED திரையை பாரு.
இது மட்டுமே சிறப்பாய் இருந்தால்
போதுமா என்று மனதைத்தொட்டு
கூறு....
நாரத கான சபா இருக்கையில் அமர வைத்தான்...எங்களை...!!
------------------------------
விமர்சனம் - சிவகுமார்.


No comments:
Post a Comment