UAA குழுவினரின் சாருகேசி எனும் நாடகத்தின் 25-வது காட்சி தி.நகர் வாணி மஹாலில் 15/05/2022 அன்று நடந்தேறியது. கிரேசி மோகனின் சிந்தனையில் உருவாகி வெங்கட் அவர்களால் கதையாக்கம் செய்யப்பட்டது. நாடகமாக்கம் மற்றும் இயக்கம்: ஒய்.ஜீ. மகேந்திரன்.
பிரபல கர்நாடக சங்கீத பாடகர் சாருகேசி. அன்பான மனைவி இருப்பினும், இவரது மகன் கர்நாடக இசையைப்போல.. பாரம்பரிய கலையை பின்பற்றாமல் மெல்லிசை உள்ளிட்ட தளத்தில் இயங்குவது சாருகேசிக்கு வருத்தம். ஆகவே சில சமயம் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதுண்டு.
ஒருநாள் பெற்றோரின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் மகன். வீட்டிற்கு வரும் மருமகளாலும், தனிப்பட்ட முறையிலும் சாருகேசிக்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் என்ன என்பதே கதை.
நாடகம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கோவில் உண்டியல், கோவில் இடிப்பு என திமுகவை கிண்டல் செய்யும் வசனத்தை பேசுகிறார் மகேந்திரன். எந்த சார்பும் இல்லாத நாடக குழுக்களே கூட.. தற்போது ஒருசார்பு அரசியல், மத வசனங்களை நாடகத்தில் திணிக்கும்போது... இவர் திணிப்பதில் ஆச்சர்யமில்லை.
அடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்த 'ஹிந்து' என்.ரவி, பாடகி சௌம்யா மற்றும் நாடகங்களை நடத்தும் அப்பாஸ் கார்த்திக், ரோஷினி ஃபைன் ஆர்ட்ஸ் நிர்வாகி உள்ளிட்டோரை குறிப்பிட்டு வசனங்கள் வருகின்றன. இதெல்லாம் நாடகம் பார்ப்போருக்கு ஏன் தேவை? தனியே பாராட்டி மகிழுங்கள். கதையில் சொருகாதீர்கள்.
ஹிந்தி, சமஸ்கிருதம், அயோத்யா மண்டபம், மாட்டுத்தோல் என கொசகொசவென்று பாஜக, இந்துத்வா சார்பு மற்றும் திமுக எதிர்ப்பு வசனங்களை பேசி தள்ளுகிறார் சாருகேசி. இதையெல்லாம் தனியாக ஒரு அரசியல், மத, மொழிக்கான நிகழ்ச்சி நடத்தி பேசுங்கள். கர்நாடக சங்கீத பாடகரின் வாழ்க்கையை சொல்லும் கதையில்.. உங்கள் சுய விருப்பு வெறுப்புகளை யார் கேட்டார்கள்?
போதாக்குறைக்கு இவரது நாடகங்களில் வரும் உருவ கேலிகள் இங்கும் தொடர்கின்றன. சொட்டைத்தலை என்று ஒரு கேரக்டரை குறிப்பிடுவது, சுப்புணியின் உருவ அமைப்பை அவ்வப்போது நையாண்டி செய்வது என அநாகரீக வசனங்களுக்கு பஞ்சமில்லை.
ஆதரவற்றோர் இல்லம் என்பதை அநாதை இல்லம் என்று வசனமாக வைத்திருக்கிறார் வெங்கட். காலம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கேற்ற சொற்களை பயன்படுத்துங்கள் ஐயா.
முதல் 35 நிமிடங்களுக்கு கதை நகரவே இல்லை. மருமகள் கௌதமி வந்த பிறகு ஒரு திடீர் திருப்பம். அதுவும் சிந்து பைரவி படத்தில் வரும் சிவகுமார் - டெல்லி கணேஷ் காட்சியை நினைவுபடுத்துகிறது. 'பலே பலே பலே' என்று அந்த மருமகள் ஏன் இத்தனை தடவை உச்சரிக்கிறார்?
அதன் பிறகு இன்னொரு அதிரடி திருப்பம். அதுவும் நாம் பலமுறை பார்த்து பழகிய திருப்பம்தான்.
சீரியஸான காட்சிகளின் ஓரிரு இடங்களில் ஒய்.ஜீ.மகேந்திரன் சிறப்பாக நடித்து விடுவார். இங்கும் விதிவிலக்கில்லை. ஆனால் இரண்டு மணிநேர நாடகத்திற்கு இது மட்டுமே போதுமானதாக இல்லை.
சுப்புணி உள்ளிட்ட பிற துணை நடிகர்கள் தங்கள் பங்களிப்பில் குறைவைக்கவில்லை. மகேந்திரனின் மனைவியாக வருபவருக்கு இது முதல் நாடகமாம். நல்ல நடிப்பு. மருமகள் கௌதமியாக வருபவரும் நீண்ட வசனம் ஒன்றை அழகாக உச்சரித்து பெயர் வாங்குகிறார்.
காவல் நிலையத்தில் மகேந்திரனுடன் உரையாடும் உள்ளூர் நபராக 'பார்த்தா' பாலாஜி நடித்த விதம் நன்று.
ஒய்.ஜீ.மகேந்திரனின் நாடகங்கள் என்றாலே கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளையும் இவரே ஆக்ரமித்து நடிப்பார். இங்கும் அதே நிலைதான். முக்கிய கதாபாத்திரம் என்பதற்காக அனைத்து காட்சிகளிலும் வந்தே ஆக வேண்டிய அவசியமில்லை.
ரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் என பலநூறு திரைப்படம் மற்றும் நாடகங்களில் வரும் சென்டிமென்ட் இங்குமுண்டு. ஆனால் அதற்கான பெயர் மட்டும் வேறு. அதை நாடகம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதுபோதாதென்று ராகதேவன் எனும் கற்பனை கேரக்டரும் உண்டு.
மொத்தத்தில் ஒரு அரதப்பழசான டெம்ப்ளேட்டை எடுத்து மிகச்சுமாரான திரைக்கதை மூலம் ஒரு நாடகத்தை எடுத்துள்ளனர். மற்றபடி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை.
சாருகேசி - தேங்காய் மூடி பாகவதர்.
--------------------------------
விமர்சனம் - சிவகுமார்.



