பெருமாளே 2 - விமர்சனம்




சுரேஷ்வர் இயக்கத்தில், ராதாகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி மதுவந்தி தயாரித்த 'பெருமாளே - 2' எனும் நாடகம் ஜுன் 17, 2022 அன்று வாணிமஹாலில் மீண்டும் மேடையேறியது  

குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க திண்டாடுகிறார் வெங்கடேச பெருமாள். கடன் போதாதென்று வட்டியும் உயர்கிறது. ஆகவே பூலோகத்தில் தன்னிடம் வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செய்யாத மனிதர் ஒருவரை சந்தித்து அதை பெற்றுவர முயல்கிறார் பெருமாள். ஆனால் திருப்பதிசாமிக்கே லட்டு தர தயாராகிறது அந்த நபரின் தரப்பு. வென்றது யார்?

முதல் பாகத்தில் உண்மையில் பெருமாளையே கண்முன் நிறுத்திய நடிப்பை தந்திருந்தார் சுதர்சன். இங்கும் இன்னொரு திவ்ய தரிசனம். அருமையான நடிப்பு. இதுமட்டுமே இந்நாடகத்தின் சிறப்பு.

பிரபல வழக்கறிஞர் பட்டமங்கலம் பெரிய பிராட்டியாக மதுவந்தி, அவரது மகனாக சுரேஷ்வர் ஆகியோரின் மிகைநடிப்பு எரிச்சல். 

தமிழ் மேடை நாடகங்களில் சிறந்த இளம்  நட்சத்திரமாக ஜொலிக்கும் சூரஜ் ராஜாவின் திறமை இங்கே சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் போய்விட்டது. இதே வரிகள்.. கதாகாலாட்ஷேபம் செய்யும் சாய்ராம் மற்றும் பாலாஜிக்கும்  பொருந்தும்.

அதிகபட்சம் ஒருமணிநேரத்திற்கு மட்டுமே தாங்கும் கதையமைப்பை 2 மணிநேரம் நீட்டி இழுத்து அறுத்திருக்கிறார்கள். உபயம்: இயக்குனர் சுரேஷ்வர் மற்றும் கதை, வசனகர்த்தா ராதாகிருஷ்ணன்.

விரைவில் மையக்கதைக்கு வராமல் வாய்ஸ் ஓவர், கதாகாலாட்ஷேபம் என பொறுமையை சோதிக்கிறார் பெருமாள்.  

சபா நாடகம் என்றாலே.. கதைக்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் திமுகவை நொட்டை சொல்வது, பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்வா கொள்கைகளுக்கு ஜால்ரா அடிப்பது என்றாகிவிட்டது. மதுவந்தியின் நாடகம் என்றால் சொல்லவே வேண்டும்? 

தமிழக கவர்னர், பாஜக அண்ணாமலை, அயோத்யா மண்டபம், அமித்ஷா என புல்லரிப்புகள் ஒருபக்கம். பெரியார், டாஸ்மாக், ஸ்டாலின் என நையாண்டிகள் மறுபக்கம். போதாக்குறைக்கு டாம் மீடியாஸ், மதுவந்தி Talks என சுயபெருமை வசனங்கள் வேறு. இதெல்லாம் எங்களுக்கு எதற்கு?  

மேற்கு மாம்பலத்தில் இருப்பவர்கள் எல்லாம் மிடில் கிளாஸ். பிச்சை எடுக்கவும் முடியாமல், பிச்சை போடவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று காதில் பூவை சுற்றும் வசனம்....அடடா!!

'நமக்கு ஒரு மனைவி. அவர்களுக்கு ஏழெட்டு மனைவிகள்' என குதர்க்கமாக இஸ்லாமியர்களை வம்புக்கு இழுப்பது போல தோன்றும் ஒரு வசனம். அது அவர்கள் விருப்பம். உங்கள் வீட்டிலா வந்து பெண் எடுத்தார்கள்? 

இந்துக்கள் எல்லாம் ஒற்றை மனைவியுடன் ஏகபத்தினி விரதனாக வாழ்கிறார்களா? இஸ்லாமியர்கள் ஏழெட்டு மனைவிகளுடன் வாழ்கிறார்கள் என்று ஆதாரமின்றி பொய் பேச நாக்கு கூசவில்லையா? எதற்கு அவர்கள் மீது இவ்வளவு வன்மம், வெறுப்பு?

கதாகாலாட்ஷேப புலியாக வரும் சாய்ராம்... 'துண்டுச்சீட்டு பாத்து பேசுபவர்' என மறைமுகமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வசனம் வருகிறது.

ஐயா புண்ணியவானே... முக்கியமான பாய்ண்ட்களை மறக்கக்கூடாது என்பதற்காக குறிப்பெடுத்து வைத்து பேசுவதில் தவறில்லை. நீங்கள் எல்லாம் நாடகத்தின் வசன பேப்பரை படிக்காமல் நேரடியாகவா மேடையில் வந்து பேசி நடிக்கிறீர்கள்?

உங்கள் தலைவர் பல்லாண்டு காலமாக தன்னுடைய மொத்த உரையையும் டெலி ப்ராம்ப்டர் வைத்து பேசி வருகிறாரே... அதைவிட காமடி உலகத்தில் உண்டா? இந்த அழகில் தமிழக முதல்வரை நீங்கள் கிண்டல் செய்வது பயங்கர மொக்கையாக இருக்கிறது.

'பெருமாளே' முதல் பாகம் ஒரு எளிமையான குடும்பத்தின் பிரச்னைகளை பேசிய நல்ல நாடகம். மதுவந்தி உள்ளிட்டோர் நன்றாக நடித்திருந்தனர். 

ஆனால் இந்த இரண்டாம் பாகம் உருப்படியான திரைக்கதை, இயக்கம் இன்றி புஸ்வானம் ஆகிவிட்டது. 


பெருமாளே 2 - பட்டை நாமம். 

---------------------------------------------------

சாருகேசி - விமர்சனம்


UAA குழுவினரின் சாருகேசி எனும் நாடகத்தின் 25-வது காட்சி தி.நகர் வாணி மஹாலில் 15/05/2022 அன்று நடந்தேறியது. கிரேசி மோகனின் சிந்தனையில் உருவாகி வெங்கட் அவர்களால் கதையாக்கம் செய்யப்பட்டது. நாடகமாக்கம் மற்றும் இயக்கம்: ஒய்.ஜீ. மகேந்திரன்.

பிரபல கர்நாடக சங்கீத பாடகர் சாருகேசி. அன்பான மனைவி இருப்பினும், இவரது மகன் கர்நாடக இசையைப்போல.. பாரம்பரிய கலையை பின்பற்றாமல் மெல்லிசை உள்ளிட்ட தளத்தில் இயங்குவது சாருகேசிக்கு வருத்தம். ஆகவே சில சமயம் இருவருக்கும் கருத்து வேறுபாடு வருவதுண்டு. 

ஒருநாள் பெற்றோரின் சம்மதமின்றி காதல் திருமணம் செய்ய முடிவெடுக்கிறான் மகன். வீட்டிற்கு வரும் மருமகளாலும், தனிப்பட்ட முறையிலும் சாருகேசிக்கு ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் என்ன என்பதே கதை.

நாடகம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே கோவில் உண்டியல், கோவில் இடிப்பு என திமுகவை கிண்டல் செய்யும் வசனத்தை பேசுகிறார் மகேந்திரன். எந்த சார்பும் இல்லாத நாடக குழுக்களே கூட.. தற்போது ஒருசார்பு அரசியல், மத வசனங்களை நாடகத்தில் திணிக்கும்போது... இவர் திணிப்பதில் ஆச்சர்யமில்லை.

அடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்த 'ஹிந்து' என்.ரவி, பாடகி சௌம்யா மற்றும் நாடகங்களை நடத்தும் அப்பாஸ் கார்த்திக், ரோஷினி ஃபைன் ஆர்ட்ஸ் நிர்வாகி உள்ளிட்டோரை குறிப்பிட்டு வசனங்கள் வருகின்றன. இதெல்லாம் நாடகம் பார்ப்போருக்கு ஏன் தேவை? தனியே பாராட்டி மகிழுங்கள். கதையில் சொருகாதீர்கள்.

ஹிந்தி, சமஸ்கிருதம், அயோத்யா மண்டபம், மாட்டுத்தோல் என கொசகொசவென்று பாஜக, இந்துத்வா சார்பு மற்றும் திமுக எதிர்ப்பு வசனங்களை பேசி தள்ளுகிறார் சாருகேசி. இதையெல்லாம் தனியாக ஒரு அரசியல், மத, மொழிக்கான நிகழ்ச்சி நடத்தி பேசுங்கள். கர்நாடக சங்கீத பாடகரின் வாழ்க்கையை சொல்லும் கதையில்.. உங்கள் சுய விருப்பு வெறுப்புகளை யார் கேட்டார்கள்?

போதாக்குறைக்கு இவரது நாடகங்களில் வரும் உருவ கேலிகள் இங்கும் தொடர்கின்றன. சொட்டைத்தலை என்று  ஒரு கேரக்டரை குறிப்பிடுவது, சுப்புணியின் உருவ அமைப்பை அவ்வப்போது நையாண்டி செய்வது என அநாகரீக வசனங்களுக்கு பஞ்சமில்லை. 

ஆதரவற்றோர் இல்லம் என்பதை அநாதை இல்லம் என்று வசனமாக வைத்திருக்கிறார் வெங்கட். காலம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்கேற்ற சொற்களை பயன்படுத்துங்கள் ஐயா.   

முதல் 35 நிமிடங்களுக்கு கதை நகரவே இல்லை. மருமகள் கௌதமி வந்த பிறகு ஒரு திடீர் திருப்பம். அதுவும் சிந்து பைரவி படத்தில் வரும் சிவகுமார் - டெல்லி கணேஷ் காட்சியை நினைவுபடுத்துகிறது. 'பலே பலே பலே' என்று அந்த மருமகள் ஏன் இத்தனை தடவை உச்சரிக்கிறார்?

அதன் பிறகு இன்னொரு அதிரடி திருப்பம். அதுவும் நாம் பலமுறை பார்த்து பழகிய திருப்பம்தான். 

சீரியஸான காட்சிகளின் ஓரிரு இடங்களில் ஒய்.ஜீ.மகேந்திரன் சிறப்பாக நடித்து விடுவார். இங்கும் விதிவிலக்கில்லை. ஆனால் இரண்டு மணிநேர நாடகத்திற்கு இது மட்டுமே போதுமானதாக இல்லை.   

சுப்புணி உள்ளிட்ட பிற துணை நடிகர்கள் தங்கள் பங்களிப்பில் குறைவைக்கவில்லை. மகேந்திரனின் மனைவியாக வருபவருக்கு இது முதல் நாடகமாம். நல்ல நடிப்பு. மருமகள் கௌதமியாக வருபவரும் நீண்ட வசனம் ஒன்றை அழகாக உச்சரித்து பெயர் வாங்குகிறார்.

காவல் நிலையத்தில் மகேந்திரனுடன் உரையாடும் உள்ளூர் நபராக 'பார்த்தா' பாலாஜி நடித்த விதம் நன்று.  

ஒய்.ஜீ.மகேந்திரனின் நாடகங்கள் என்றாலே கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளையும் இவரே ஆக்ரமித்து நடிப்பார். இங்கும் அதே நிலைதான். முக்கிய கதாபாத்திரம் என்பதற்காக அனைத்து காட்சிகளிலும் வந்தே ஆக வேண்டிய அவசியமில்லை. 

ரத்த புற்றுநோய், மூளை புற்றுநோய் என பலநூறு திரைப்படம் மற்றும் நாடகங்களில் வரும் சென்டிமென்ட் இங்குமுண்டு. ஆனால் அதற்கான பெயர் மட்டும் வேறு. அதை நாடகம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதுபோதாதென்று ராகதேவன் எனும் கற்பனை கேரக்டரும் உண்டு.

மொத்தத்தில் ஒரு அரதப்பழசான டெம்ப்ளேட்டை எடுத்து மிகச்சுமாரான திரைக்கதை மூலம் ஒரு நாடகத்தை எடுத்துள்ளனர். மற்றபடி சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. 

சாருகேசி - தேங்காய் மூடி பாகவதர்.

--------------------------------

விமர்சனம் - சிவகுமார்.  


கோடை நாடக விழா 2022 - அவள் பெயர் சக்தி

 

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31- வது கோடை நாடக விழாவில் 12-வது மற்றும் இறுதியாக அரங்கேறிய நாடகம் - அவள் பெயர் சக்தி. எழுத்து மற்றும் இயக்கம்: தாரிணி கோமல். தயாரிப்பு: கோமல் தியேட்டர்.

ஜனனி - கார்த்திக் தம்பதியர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். கைநிறைய சம்பளம். வசதியான வாழ்க்கை. இவர்களின் ஒரே மகள் ஆர்த்தி. குழந்தையை கவனித்து கொள்வது, வீட்டுப்பொறுப்பு என அனைத்தையும் ஜனனி மட்டுமே ஏற்று செயல்படுகிறாள். 

ஒரு கட்டத்தில்...வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் கார்த்திக் மீது எரிச்சலடையும் ஜனனி.. மகளுடன் தன் பிறந்த இல்லமிருக்கும் சென்னைக்கு வந்து விடுகிறாள். இதனால் அவளது வாழ்வில் நடைபெறும் மாற்றங்கள் என்னவென்பதை சொல்கிறது கதை.

ஒரு நாடகத்தில் அதிகபட்சம் ஓரிருவர் நன்றாக நடிப்பதே ஆச்சர்யம். ஆனால் இங்கே அனைவருமே அசத்தி இருக்கிறார்கள். தந்தை சங்கரனாக வரும் பரமேஸ்வரன், மாப்பிள்ளைகள் கார்த்திக் (சித்தார்த்) , அர்ஜுன் (ஸ்ரீனி), இதர துணை நடிகர்கள் என பட்டியல் இடலாம்.

கொள்ளுப்பாட்டியாக உஷா ரவிச்சந்திரன், பாட்டியாக அனுராதா கண்ணன், இரு மகள்கள் - ஜனனியாக க்ரித்திகா. ஹரிணியாக மயூரா, கொள்ளுப்பேத்தி ஆர்த்தியாக இயல். யாருடைய நடிப்பை பாராட்டுவது? ஆளாளுக்கு போட்டி போட்டு நடித்துள்ளனர்.  

இக்கதையில் ஒற்றை கதாநாயகி அல்ல. இந்த ஐவரும்தான். மிகச்சிறந்த நடிகையர் தேர்வு.

இவர்களில் ஒவ்வொருவரும் 360 டிகிரி ஆங்கிளில் நடிக்கும்படியான கதையமைப்பு. உதாரணம்: ஜனனிக்கு மனைவி, தாய், மகள், பேத்தி, தனியார் நிறுவன உயர் பொறுப்பாளர் என வெவ்வேறு விதமாக நடிக்க வேண்டிய பொறுப்பு. 

அவற்றை நன்குணர்ந்து அனைவரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர்.          

சிறுமி இயலுக்கு இது முதல் நாடகமாம். நம்ப முடியவில்லை. பொதுவாக சிறார் வேடங்களில் நடிப்போர்.. சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்வார்கள். ஆனால் நாடகம் முழுக்க வலம் வந்து, பிசிறு தட்டாமல் வசனம் பேசி.. நடிப்பால் நம்மை கட்டிப்போட்டுள்ளார் இந்த இயல் எனும் இளம் புயல். நாடக உலகிற்கு ஒரு அதிரடியான, ஆற்றல்மிகு வரவு.

குடும்பத்தின் ஆணிவேரான கொள்ளுப்பாட்டி கேரக்டரில் உஷா ரவிச்சந்திரன். அனுபவம் வாய்ந்த வேடத்திற்கு அனுபவம் வாய்ந்த நடிகை. எத்தனை பிரச்னைகள் வந்தாலும் குடும்பத்தை சாமர்த்தியமாக வழிநடத்தும் நடத்தும் விதத்தில் மனதில் நிற்கிறார்.

தனித்திறமை இருந்தும்.. முன்னேற முடியாத..வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பபெண்ணை பிரதிபலிக்கும் அனுராதா ரமணனின் பாந்தமான நடிப்பு நிறைவு.

இவரது மகள்களாக க்ரித்திகா மற்றும் மயூரா.  இருவருக்கும் இது இரண்டாம் நாடகமாம். ஆனால் பல நாடகங்களில் நடித்தவர்கள் என்று சொல்லும் அளவிற்கு கச்சிதமான நடிப்பு.   

மகளிடம் பாசம், கணவன் மீதான நியாயமான கோவம், பெரியோர் சொல்லும் அறிவுரையை ஏற்கும் நிதானம் என பாராட்டும்படியான நடிப்பை தந்துள்ளார் க்ரித்திகா.

தேவையற்ற கட்டுப்பாட்டு வளையத்தில் சிக்காமல் தனக்கான வாழ்க்கையை வாழ நினைக்கும் ஜனனியின் தங்கையாக மயூரா. அதற்காக பெரியோரை மதிக்காமல் அலட்சியமாய் இருக்கும் பெண்ணல்ல. பிறரின் சொல்லுக்கும் மரியாதை தந்து, அதில் ஒப்புதல் இருந்தால் செயல்படுத்தும் மனப்பக்குவம் கொண்ட கேரக்டரில் இயல்பாக நடித்துள்ளார்.

'ஒவ்வொருவரையும் தனித்தனியே குறிப்பிட்டு எழுத வேண்டுமா? என்றால் ஆம் என்று உறுதியாக சொல்லலாம். நாடகம் பார்த்தால் இதற்கான காரணம் புரியும்.

இத்தனை பெண் புயல்களுக்கு மத்தியில் ஸ்திரமான படகினைப்போல பயணித்து கரையை தொடுவது கடினம். ஆனால் அதனை கச்சிதமாக செய்திருக்கிறார் தந்தையாக நடித்த பரமேஸ்வரன். 

குகப்பிரசாத் மற்றும் விஸ்வஜெய்யின் இசையமைப்பு மற்றும் இசைக்கோர்வைகள் பக்க பலம்.

இக்கால தலைமுறையினர்.. வேலையில் மூழ்கி.. குடும்பத்தை மறக்கிறார்கள். பெற்றோர்களை மதிப்பதில்லை. காலம் தரும் படிப்பினையால் ஞானம் பிறக்கிறது எனும் டெம்ப்ளேட்டில் அவ்வப்போது நாடகங்கள் வருவதுண்டு. அப்படியான ஒன்றைத்தான் கதை வசனகர்த்தா மற்றும் இயக்குனர் தாரிணி தேர்வு செய்துள்ளார்.

பலமுறை சொல்லப்பட்ட கதைகளில் சொல்லத்தவறிய நுட்பமான விஷயங்கள், மாறுபட்ட கோணங்கள் ஆகியவற்றை கையாண்டதால் புதுப்பொலிவுடன் இருக்கிறது இந்நாடகம். எதை சொல்கிறோம் என்பதை விட அதை எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம். இயக்குனர் வென்றுள்ள இடம் இதுதான்.

ஆரம்பம் முதல் இறுதிவரை கண்ணிமைக்காமல் பார்க்க வைக்கும்படியான வெகு நேர்த்தியான திரைக்கதை. ஜனனியின் குடும்பத்தாருடன் நாமும் வாழ்கிறோம் எனும் உணர்வினை முழுமையாக ஏற்படுத்திய நம்பகத்தன்மைதான் தாரிணி ஏற்படுத்தி இருக்கும் திரைக்கதை மேஜிக்.

வசனங்கள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து கவனமாக செதுக்கப்பட்ட வைரங்கள். ஒற்றை வசனம் கூட வீண் போகவில்லை. ஒரு நாடகம் என்பது தன் போக்கில் செல்ல வேண்டும். அதில் வரும் நல்ல வசனங்களுக்கு ரசிகர்கள் ஆத்மார்த்தமாக கைத்தட்ட வேண்டும். இதுதான் உண்மையான வெற்றி.

இந்நாடகம் ஒவ்வொரு முறை அரங்கேறும்போதும் பல காட்சிகளில் ஆத்மார்த்தமான கைத்தட்டல்கள் ஓயாமல் ஒலிக்கும்.   

கைத்தட்டல் வேண்டும் என்பதற்காக கதைக்கு சம்மந்தமே இல்லாத வசனங்களை கோர்த்து... பாராட்டு பெற நினைப்பது செயற்கையான தற்காலிக வெற்றி. இதை மற்றவர்கள் உணர வேண்டும். 

மிகச்சிறந்த நடிகர்கள், ஓரிடத்தில் கூட குறை சொல்ல இயலாத கதை, திரைக்கதை, வசனம். அனைத்தையும் ஒருங்கிணைத்து.. போற்றும்படியாக அமைந்திருக்கிறது இந்நாடகத்தின் இயக்கம்.  

பலமுறை பார்த்தும், கேட்டும் பழகிய  பெண் சுதந்திர புரட்சி வசனங்கள் மற்றும் அவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டுமென கூறும் அறிவுரைகள்...

...இந்த அரைத்த மாவு எல்லைகளை தாண்டி இருதரப்பு வாதங்களையும் சரிசமமாக முன்னிறுத்தி.. நடைமுறை வாழ்விற்கு தேவையான, நம்பகமான  தீர்வினை தந்திருப்பதுதான் அவள் பெயர் சக்தியின் தனிச்சிறப்பு. 

அடுத்தடுத்து இந்நாடகம் மேடையேறும்போது உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்று அவசியம் பாருங்கள். நிச்சயம் உங்கள் இதயத்தில் இடம் பிடிக்கும் என்பதற்கு நான் உத்திரவாதம்.  

அவள் பெயர் சக்தி - தரணி போற்றும் தாரிணியின் தரமான வெற்றி. 

-------------------------

விமர்சனம்  - சிவகுமார். 


கோடை நாடக விழா 2022 - கடவுளே இது நியாயமா?


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31-வது கோடை நாடக விழாவில் பதினொன்றாவதாக அரங்கேறிய நாடகம் - கடவுளே இது நியாயமா? எழுத்து, இயக்கம் - அருண்குமார். தயாரிப்பு: அன் டூ ஃபைன் ஆர்ட்ஸ்.  

பல்லாண்டுகாலமாக கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வருபவர் எழுத்தாளர் ஏலக்காய். ஆனால் அவை அனைத்துமே திருப்பி அனுப்பப்பட்டு விடும். ஒருநாள் இவரது சிறுகதையை பதிப்பேற்ற ஒரு பத்திரிக்கை ஆசிரியர்  ஒப்புதல் தருகிறார். அதேநேரம் இவருக்கு கடவுள் நேரில் தரிசனம் தருகிறார்என்ன கோரிக்கை வைத்தார் ஏலக்காய்? அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்னவென்பதே கதை.

எழுத்தாளராக ரகுநாதன், மனைவி கமலாவாக ராஜலட்சுமி. யார் ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன? நான் சிறந்த எழுத்தாளன்தான் என ஏலக்காய் பிடிக்கும் பிடிவாதமும், அவரை வறுத்தெடுக்கும் கமலாவின் காமெடியும் நல்லதோர் துவக்கத்தை தருகின்றன.    

கடவுளாக அருண்குமார். 'கடவுள் எந்த நிறத்திலும் ஆடை உடுத்தலாம். அதை மற்றவர்கள் தீர்மானிக்க கூடாது' எனும் வசனத்துடன் ஆரம்பித்து நாடகம் நெடுக சீரான நடிப்பால் கவர்கிறார்.

சமகால அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை உன்னிப்பாக கவனித்து அவற்றை சரியாக மேடையில் பிரதிபலிப்பதில் அருண்குமார் எப்போதுமே ஒரு படி மேல். அதை இங்கும் நிரூபித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான நாடக குழுக்கள்.. முக்கியமாக வசனகர்த்தா மற்றும் இயக்குனர்கள் பாஜகவிற்கு சாமரம் வீசுவது, திமுகவை சாடுவது எனும் நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள். மிகச்சில குழுக்கள் மட்டுமே விதிவிலக்கு. இப்படியான வசனங்கள் கதைக்கும், கதாபாத்திரத்தின் தன்மைக்கும் பொருந்தாமல் போனாலும்.. திணித்து விடுகிறார்கள்.

எக்காரணம் கொண்டு பாஜக அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி விடக்கூடாது என சத்தியம் செய்யாத குறைதான். தற்போது அந்நிலையில் இருந்து ஓரளவு மாற்றத்தை தந்துள்ளார் அருண்குமார். ஆம். ஓரளவுதான். இனி வரும் காலத்தில் தராசு முள் சரிசமமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அப்படியான காட்சிகள்/வசனங்கள்:

கடவுளுக்கு கருப்பு உடை அணிவித்தது, 2,000 ரூபாய் நோட் பற்றிய பணமதிப்பு நீக்க (Demonetization) கிண்டல், ஹிந்தி தெரியாது போடா வசனம் ஆகியவற்றை சொல்லலாம். இதுதான் அந்த ஓரளவு. பெருமளவு வசனங்கள் எல்லாம் எதிர்திசையை நோக்கி..

ரெட்டை இலைநமக்கு நாமே, ஒன்றிணைவோம் வா, மஞ்சப்பை, இரண்டு ஏக்கர் நிலம், ஸ்டிக்கர், ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என நிறைய அடுக்கி இருக்கிறார். 

தாமரை, கரண்டி - தட்டுடன் தெருவில் நின்று கொரோனாவை விரட்டிய விசித்திர விஞ்ஞானம், நிர்மலா சீதாராமனின் ஒருகிலோ இலவச கொண்டைக்கடலை அறிவிப்பு, பிரதமரின் உஜ்வாலா இலவச சிலிண்டர் போன்ற செய்திகளை எல்லாம் அருண்குமார் படிக்கவில்லையா அல்லது படித்தும் மேடையில் சொல்ல தைரியமில்லையா? ஆகவே தராசு முள் ஒருபக்கமாக சாய்ந்து விடுகிறது.

ஆனால் இலவச கிரைண்டர், மிக்சி திட்டங்களை மட்டும் சாடுகிறார். அடடா... அடடா!!

டீ விற்ற நல்லவன் மேலே இருக்கிறான்கெட்ட இளவரசன் கீழே இருக்கிறான் என்றொரு வசனத்தை இவர் பேசுகிறார். இது மோடி மற்றும் ஸ்டாலினை குறிப்பிடுவதாக எண்ணாதீர்

டீக்கடை வைத்து முதல்வராக உயர்ந்த .பன்னீர்செல்வத்தையும், BCCI மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உயர் பதவியில் அமர்ந்துள்ள அமித் ஷா வீட்டு இளவரசர் ஜெய் ஷா என்பவரை சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம்.      

முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் விஐபிக்களை பாராட்ட விரும்பினால் தனியே பாராட்டு விழா நடத்தலாம். அது தனிப்பட்ட விருப்பம். துக்ளக் சத்யா, எஸ்.வி.சேகர் நாடகம் பார்க்க வந்த காரணத்திற்காக அவர்களை பாராட்டி பேசுவது கதைக்கு எங்கே உதவுகிறது?

அதேநேரம்.. சிறுகதைக்கு ஐந்தாயிரம், பட்சண தட்டு, நீங்கள் எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வருகிறீர்களா? ஆகிய சிறப்பான வசனங்களால் சிரிக்க வைத்துள்ளார் அருண்குமார்

போலி சமூக ஆர்வலர்கள், போலியான போராளிகளை தனியே குறிப்பிட்டு சாடுவது ஏற்புடையது. ஆனால் ஒட்டுமொத்தமாக சமூக ஆர்வலர்கள் மற்றும் போராளிகளை நக்கல் செய்வது வேலைக்கு ஆகாது. நல்லோர் இன்றி நல்லதோர் உலகமில்லை. 

போராளி என்றாலே திராவிட இயக்கங்கள் மற்றும் அதன் சித்தாந்தங்களை பின்பற்றும் நபர்கள்தான் எனும் போலி பிம்பத்தை இதன் மூலம் உருவாக்க சபா நாடக இயக்குனர்கள் முனைவது அப்பட்டமாக தெரிகிறது.

எதிர் திசையில்.. பாஜக மற்றும் இந்துத்வா வழி நடக்கும் சமூக ஆர்வலர்களும், போராளிகளுக்கும் ஏராளமாக உள்ளனர் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட இலவசங்கள் நாட்டை கெடுக்கும் என்றால்..கோவிலில் அர்ச்சகர், குருக்கள் மற்றும் பூசாரிகளின் தட்டுகளில் நித்தம் விழும் பணமும் இலவசமாக பெறுவதுதானே? இதைப்பற்றி சொல்ல மறந்துவிட்டீர்களா?

இருபக்கமும் உள்ள நிறைகுறைகளை சமமாக, வெளிப்படையாக விமர்சித்து இனி நாடகங்களை போட்டால் வருங்காலத்தில் சோ. ராமஸ்வாமியின் இடத்தை அருண்குமார் பிடிப்பார். அரசியல் மற்றும் அதை சார்ந்த சமகால பிரச்னைகளை சரியான மீட்டரில் நகைச்சுவை கலந்து நாடகமாகும் ஆற்றல் கொண்டவர். என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

எளிமையான கதை மற்றும் காமடி கலந்து சிந்திக்க வைக்கும் வசனங்கள் இருந்தாலும்.. அவை மட்டுமே போதுமானதாக இல்லை.

சுவாரஸ்யமான திரைக்கதையும் மற்றும் நிறைவான இயக்கமும் இருந்திருந்தால் மேலும் ரசித்திருக்கலாம்.

கடவுளே.. இது நியாயமாபோதாத வரம்.

--------------------------------

விமர்சனம் - சிவகுமார்

 

கோடை நாடக விழா 2022 - தரைமேல் பிறக்க வைத்தான்


கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 31 வது கோடை நாடக விழாவில் பத்தாவதாக அரங்கேறிய நாடகம் 'நாட்டிய நாத நாடக சங்கமம்' வழங்கிய தரைமேல் பிறக்க வைத்தான். கதை, வசனம்: டிவி ராதாகிருஷ்ணன். இயக்கம்: ஸ்ருதி.  

கடலோர பகுதியில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் கதிர்வேலு. மீனவரான இவரது மகள் செங்கமலம். மகளுக்கு திருமணம் செய்ய நல்ல மாப்பிள்ளை ஒருவரை தேடிப்பிடிக்கிறார் கதிர். திருமண செலவிற்கு பணம் தேவைப்படுகிறது. அங்கிருக்கும் கோடீஸ்வர அரசியல்வாதி நீலமேகம். ஊழல் மன்னன். கதிர் உள்ளிட்ட மீனவர்களை வைத்து சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் திட்டத்தை வகுக்கிறார். இதற்கு சமூக சேவகர் வேணுகோபால் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் நடக்கும் விளைவுகள் என்ன?     

அரசியல்வாதி நீலமேகமாக சிவ பிரசாத். கணீரென்ற குரல், தெளிவான வசன உச்சரிப்பு, பணக்காரத்திமிர்கோவம், மிரட்டல் என சரவெடி நடிப்பால் ரசிக்க வைக்கிறார். மறுபக்கம் சாந்தமான நடிப்பால் பெயர் வாங்குகிறார் சமூக சேவகர் வேணுகோபாலாக வரும் சேதுராமன். மற்றவர்களின் நடிப்பும் நன்று.

மீனவர்கள் வாழும் பகுதியில் நாமும் இருக்கிறோம் எனும் உணர்வை தந்த LED திரை பின்னணி அருமை.  

கதையின் நாயகி செங்கமலமாக ஸ்ருதி. முதல் காட்சியில் மீனவர் படும் துயரங்களை உருக்கமாக பேசி நெகிழ வைக்கிறார். ஆனால் அதற்கடுத்து வரும் பல இடங்களில் தன்னருகே உள்ள நடிகர்களை பார்த்து வசனம் பேசுவதை விட... நாடக ரசிகர்கள் அமர்ந்திருக்கும் திசையை பார்த்து மட்டுமே பேசுகிறார்.

இதை பார்க்கையில் பள்ளிகளின் ஆண்டு விழாவில் சிறுவர்கள் நடத்தும் நாடகம் போல செயற்கையாக உள்ளது. இனியேனும் இந்த முக்கியமான குறையை சரி செய்து கொள்ள வேண்டும்.

'சூரியனுக்கே டார்ச் அடிக்கிறாயா?' என்று கூறுகிறார் திமுக கட்சியின் ஊழல் மன்னன் நீலமேகம். ஊருக்கு உத்தமராக இருக்கும் வேணுகோபால் எந்நேரமும் காவி சட்டை மற்றும் காவி வேட்டியில் வலம் வருகிறார். அதாவது மக்களுக்கு தீங்கு செய்பவன் திமுக காரன். நல்லது செய்பவன் பாஜக காரன் அல்லது இந்துமத பற்றாளன். அடடா... கதை, வசனகர்த்தா டிவி ராதாகிருஷ்ணனின் நடுநிலைமை அருமை. 

குஜராத் மற்றும் தமிழக மீனவர்கள் ஒப்பீடு, செருப்பால் அடிப்பதற்கு கிடைக்கும் தண்டனை என சில இடங்களில் வசனங்கள் யதார்த்தம்.

மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதற்கு காரணம் இவர்கள் மடிவலையை பயன்படுத்துவதே என்று வசனம் வருகிறது. ஆம். அது உண்மையும் கூட. ஆனால் இந்த ஒற்றை காரணத்திற்காக மட்டும்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் இலங்கை சிறையில் அடைக்கப்படுகிறார்களா

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் பலரை இலங்கை அரசு சுட்டுக்கொன்றதே... அந்த செய்தியை ஒருமுறை கூட டிவி.ராதாகிருஷ்ணன் படிக்கவே இல்லையா? நம் நாட்டு மீனவர்களை மட்டும் சட்ட விரோதமாக மீன் பிடிக்கும் குற்றவாளிகள் எனும் வட்டத்தில் அடைப்பது ஜமுக்காள வலையில் வடிகட்டிய பொய்.

'மீனவர்களின் வாழ்க்கையே துயரம் நிறைந்தது' என ஆங்காங்கே கூறப்படுகிறது. முக்கியமாக கடலில் மீன் பிடிக்க செல்கையில் இலங்கையால் கைது செய்யப்படுவது பெருந்துயரம் என்று நாடகத்தில் கூறுகிறார்கள்.

இதெல்லாம் 2014 ஆண்டுக்கு முன்பு நடந்த காங்கிரஸ் ஆட்சியில். அப்போதுதான் ஏகப்பட்ட மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கால வரையறையின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போதெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்காமல்... மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்     மன்மோகன் சிங்.

மோடியின் ஆட்சி வந்தபிறகு இந்நிலை பெருமளவு மாறியது. தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடல் படையின் அராஜகம் குறைந்தது

ஆகவே கடல் எல்லை அருகே மீன்பிடிக்கும் மீனவர்கள்.. மன்மோகனின் மிக்ஸர் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகளை.. மோடியின் தற்போதைய ஆட்சியில் பெருமளவு சந்திக்கவில்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.  

மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் முதல் தமிழ் நாடகம் இது என்று குறிப்பிட்டு இருந்தார்கள். அவ்வகையில் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஆனால் மீனவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கெட்ட அரசியல்வாதி, மக்களுக்கு துணை நிற்கும் சமூக சேவகர் என மேம்போக்கான கதையை டிவி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்திருப்பது பலவீனம். அடுத்து என்ன நடக்கும் என ஆர்வத்தை தூண்டவில்லை. பல வசனங்களில் பழைய நெடி தூக்கல்.

மிக அரிதாக மீனவர் வாழ்வினை சித்தரிக்கும் நாடகம் மேடையேறும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்ஆழமான கதை இருக்கிறதா, புதிதாய் என்ன சொல்கிறார்கள், நாடகம் முடிந்ததும் நம் மனதில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதானே. அவை இங்கே இல்லாமல் போனது ஏமாற்றம்.

இதில் இயக்குனராக ஸ்ருதியின் பங்களிப்பு என்னவென்று தெரியவில்லை. மாறுபட்ட கதைக்களம் மட்டுமே போதுமானதல்ல. அதையும் தாண்டி ஒரு இயக்குனராக வெற்றி பெற்றிருக்க வேண்டாமா


தரைமேல் பிறக்க வைத்தான் - எங்களை அழுத்தமான கதையை தேட வைத்தான். நாரத கான சபா இருக்கையில் அமர வைத்தான். இறைவன்.. எங்களை நல்லதோர் இயக்கத்தை இறுதி வரை காண விடாமல் அலைய வைத்தான்

ஐபிஎல் போட்டி, மெகா சீரியல்..

அனைத்தையும் விட்டுவிட்டு 

நாடகம் காண வந்தோம் இங்கே....

தாக்கத்தை ஏற்படுத்தும் 

அருமையான காட்சிகள் எங்கே...


வெள்ளி நிலா போல பிரகாசமாய் 

எரியும் LED திரையை பாரு.

இது மட்டுமே சிறப்பாய் இருந்தால் 

போதுமா என்று மனதைத்தொட்டு 

கூறு.... 

 

நாரத கான சபா இருக்கையில் அமர வைத்தான்...எங்களை...!!

------------------------------

விமர்சனம் - சிவகுமார்.