கூத்துப்பட்டறை சார்பில்.. ஓவியர் நடேஷ் முத்துசாமி நினைவாக அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் அரங்கேறிய நாடகம் - விழிப்பு. இதே மாதம் 10,11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மீண்டும் அரங்கேறுகிறது.
கு.அழகர்சாமியின் சுயரூபம் மற்றும் ஜெயகாந்தனின் குருபீடம் எனும் சிறுகதைகளை தழுவி நா.முத்துசாமி அவர்களின் எழுத்துகளையும் உள்ளடக்கிய நாடகமிது. இயக்கம்: ப்ரேம் குமார்.
இரு சிறுகதைகளையும் தனித்தனி நாடகமாக்காமல்... இந்த ஒற்றை கதாபாத்திரத்தின் மூலம் கச்சிதமாக இணைத்து தெளிவாக படைப்பாக்கம் செய்ததில் பாதிக்கிணறை தாண்டி விடுகிறார் இயக்குனர் ப்ரேம்.
இவ்விரு சிறுகதைகளை அப்படியே பிரதி எடுக்காமல்... நாடக மேடைக்களத்திற்கு ஏதுவானவற்றை சேர்த்தும், பிறவற்றை ஒதுக்கியும்.. நாடகம் பார்ப்போருக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தி இருப்பது சிறப்பு.
இரு மாறுபட்ட கதாபாத்திரங்களை உள்வாங்கி.. அதை ஒற்றை பிரதான வேடமாக தரித்து நடிப்பில் ஆச்சர்யப்படுத்தியுள்ளார் விஜயராமன். சீடனாக வரும் அஜித் குமார்.. இந்நாடகத்தின் இன்னொரு சிறப்பம்சம். இருவரின் நடிப்பிலும் யதார்த்தமும், நகைச்சுவையுணர்வும் கலந்துகட்டி பரவசப்படுத்துகின்றன.
உடன் நடித்த பிற நடிகர்களும் குறையின்றி நடித்தனர். கூத்துப்பட்டறையின் கூர்தீட்டப்பட்ட வாள்கள் என்பதால் அதில் ஆச்சர்யமும் இல்லை.
ரமேஷ் பாரதியின் அருமையான குரலில் வெளிப்படும் பாடல்கள் அனைத்தும் மானுட வாழ்வியலின் வலிகளை, ஆதங்கங்களை சிந்தாமல் சிதறாமல் நம் இதயக்கேணியில் ஊற்றி நிரப்புகிறது. ஜெயக்குமாரின் தாள வாசிப்பு அதற்கு மேலும் உயிர்ப்பை தருகிறது.
சாதிப்பெருமை ஒருவேளை சோற்றுக்கு உதவுமா? பொருளை யாசகமாக பெறுபவனிடம் அருளை யாசகமாக பெறும் ஆட்டு மந்தைக்கூட்டம்.. கறிக்கடைக்கு பலியாவதை தடுக்கத்தான் இயலுமா?
இப்படி மேலும் சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது விழிப்பு.
நா. முத்துசாமி அவர்கள் தந்து சென்ற தீப்பந்தத்தின் மூலம் மூட நம்பிக்கை, சாதிய ஒடுக்குமுறை, அதிகார கொழுப்பு உள்ளிட்ட பல விஷப்பூச்சிகளை எரித்தொழிக்கும் வழித்தோன்றல்களில்... இயக்குனர் ப்ரேம் குமாரும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
ஒரு மாறுபட்ட மற்றும் மேம்பட்ட நாடக அனுபவத்தை காண எண்ணுபவர்கள் அவசியம் இப்படைப்பை பாருங்கள்.
-----------------------
விமர்சனம்: சிவகுமார்.
-------------------------
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஞானராஜசேகரன் மற்றும் நாடகத்தில் பங்கேற்ற குழுவினரின் புகைப்படங்கள்:
------------------------------------------------------------------------




