யார் இந்த Krishna's Dark Son? என்பதை முதலில் அறிவோம்.
அர்த்தநாரீஸ்வரராக சிவபெருமான் இருக்கும்போது.. அவரின் அருளால் கிருஷ்ணரின் மகனாக பிறக்கிறான் சாம்பன். இவனது பிறப்பு யாதவ இனத்திற்கான அழிவின் ஆரம்பமாகுமென சபிக்கப்படுகிறது. குருஷேத்திரத்தில் பேரிழப்புகளை சந்தித்த காந்தாரியின் எண்ணமும் அதுதான்.
இப்படியான ஒரு புனைவினை சுவாரஸ்யமான கதையாக மாற்றி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் பாலகிருஷ்ணன். ஒருவரி கூட வீணடிக்கப்படாத ஆகச்சிறந்த வசனங்கள், யூகிக்க இயலாத திரைக்கதை அமைப்பு, நேர்த்தியான இயக்கமென ஒரு முழுமையான படைப்பாகும் இது.
மொத்த நாடகமும் ஒற்றை நபரின் நடிப்பில் துவங்கி முடிகிறது. அவரது பெயர் அபர்ணா. ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெறும் இந்நாடகத்தில்.. தெளிவான உச்சரிப்பு, பிரமிக்க வைக்கும் உடல்மொழி, கச்சிதமான நடிப்பென அசத்தியுள்ளார்.
எவ்வித அரங்க வேலைப்பாடும் இதில் இல்லை. ஆனால் வசன விவரிப்புகள் மூலம் கிருஷ்ணர் குலம் வாழ்ந்த இடம், வெளிநாட்டிற்கு சென்று சாம்பன் செய்யும் கலைநிகழ்ச்சி, சபிக்கப்பட்ட இறுதிக்காலம் என அனைத்தையும் நாம் நேரில் பார்ப்பது போல உணர்வை தந்திருப்பதுதான் இப்படைப்பின் முக்கிய வெற்றி.
இங்கு கதையின் மைய கதாபாத்திரமாக மட்டுமின்றி, கதைசொல்லியாகவும் இருப்பது சாம்பன்தான். வெகுசில நாடகங்களில் மட்டுமே இதை காண இயலும்.
குறும்பு, சோகம், துணிவு, வீரம், ஆற்றாமை என அனைத்தையும் கச்சிதமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார் அபர்ணா.
நீங்கள் எத்தனையோ தனிநபர்/ஓரங்க நாடகங்களை பார்த்திருக்கலாம். அவற்றில் வெகு அரிதானவை மட்டுமே காலத்திற்கும் பேசப்படும்.
நான் பார்த்ததில்.. மாதவ பூவராக மூர்த்தி நடித்த நாற்காலிக்கு இடமில்லை, சுந்தர ராமசாயின் ஜன்னல் (நடிப்பு: ஆனந்த் சாமி) போன்றவற்றை அவ்வாறு சொல்லலாம்.
தற்போது அந்த வரிசையில் அபர்ணாவின் நடிப்பும் சேர்ந்துள்ளது.
Krishna's Dark Son நூலாகவும் வெளிவந்துள்ளது. Zero Degree Publishing மற்றும் அமேசானில் கிடைக்கப்பெறலாம்.
தன்னுடைய நாடகங்களை மட்டுமின்றி வேறு நாடக்குழுவினரின் சிறந்த படைப்புகளையும் சென்னையில் மேடையேற்றி வரும் கிரிதரனின் செயல் பாராட்டத்தக்கது.
வேற்றுமொழி மற்றும் வெளிமாநிலங்களில் வரவேற்பை பெறும் இப்படியான சிறந்த நாடகங்களை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வது அவசியம்.
இந்நாடகத்தை தமிழாக்கம் செய்து அரங்கேற்றினால் மேலும் சிறப்பாக இருக்கும்.
--------
விமர்சனம்: சிவகுமார்
