பெருமாளே 2 - விமர்சனம்




சுரேஷ்வர் இயக்கத்தில், ராதாகிருஷ்ணன் கதை, வசனம் எழுதி மதுவந்தி தயாரித்த 'பெருமாளே - 2' எனும் நாடகம் ஜுன் 17, 2022 அன்று வாணிமஹாலில் மீண்டும் மேடையேறியது  

குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்க திண்டாடுகிறார் வெங்கடேச பெருமாள். கடன் போதாதென்று வட்டியும் உயர்கிறது. ஆகவே பூலோகத்தில் தன்னிடம் வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செய்யாத மனிதர் ஒருவரை சந்தித்து அதை பெற்றுவர முயல்கிறார் பெருமாள். ஆனால் திருப்பதிசாமிக்கே லட்டு தர தயாராகிறது அந்த நபரின் தரப்பு. வென்றது யார்?

முதல் பாகத்தில் உண்மையில் பெருமாளையே கண்முன் நிறுத்திய நடிப்பை தந்திருந்தார் சுதர்சன். இங்கும் இன்னொரு திவ்ய தரிசனம். அருமையான நடிப்பு. இதுமட்டுமே இந்நாடகத்தின் சிறப்பு.

பிரபல வழக்கறிஞர் பட்டமங்கலம் பெரிய பிராட்டியாக மதுவந்தி, அவரது மகனாக சுரேஷ்வர் ஆகியோரின் மிகைநடிப்பு எரிச்சல். 

தமிழ் மேடை நாடகங்களில் சிறந்த இளம்  நட்சத்திரமாக ஜொலிக்கும் சூரஜ் ராஜாவின் திறமை இங்கே சொல்லிக்கொள்ளும்படி இல்லாமல் போய்விட்டது. இதே வரிகள்.. கதாகாலாட்ஷேபம் செய்யும் சாய்ராம் மற்றும் பாலாஜிக்கும்  பொருந்தும்.

அதிகபட்சம் ஒருமணிநேரத்திற்கு மட்டுமே தாங்கும் கதையமைப்பை 2 மணிநேரம் நீட்டி இழுத்து அறுத்திருக்கிறார்கள். உபயம்: இயக்குனர் சுரேஷ்வர் மற்றும் கதை, வசனகர்த்தா ராதாகிருஷ்ணன்.

விரைவில் மையக்கதைக்கு வராமல் வாய்ஸ் ஓவர், கதாகாலாட்ஷேபம் என பொறுமையை சோதிக்கிறார் பெருமாள்.  

சபா நாடகம் என்றாலே.. கதைக்கு சம்மந்தம் இல்லாவிட்டாலும் திமுகவை நொட்டை சொல்வது, பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்வா கொள்கைகளுக்கு ஜால்ரா அடிப்பது என்றாகிவிட்டது. மதுவந்தியின் நாடகம் என்றால் சொல்லவே வேண்டும்? 

தமிழக கவர்னர், பாஜக அண்ணாமலை, அயோத்யா மண்டபம், அமித்ஷா என புல்லரிப்புகள் ஒருபக்கம். பெரியார், டாஸ்மாக், ஸ்டாலின் என நையாண்டிகள் மறுபக்கம். போதாக்குறைக்கு டாம் மீடியாஸ், மதுவந்தி Talks என சுயபெருமை வசனங்கள் வேறு. இதெல்லாம் எங்களுக்கு எதற்கு?  

மேற்கு மாம்பலத்தில் இருப்பவர்கள் எல்லாம் மிடில் கிளாஸ். பிச்சை எடுக்கவும் முடியாமல், பிச்சை போடவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்று காதில் பூவை சுற்றும் வசனம்....அடடா!!

'நமக்கு ஒரு மனைவி. அவர்களுக்கு ஏழெட்டு மனைவிகள்' என குதர்க்கமாக இஸ்லாமியர்களை வம்புக்கு இழுப்பது போல தோன்றும் ஒரு வசனம். அது அவர்கள் விருப்பம். உங்கள் வீட்டிலா வந்து பெண் எடுத்தார்கள்? 

இந்துக்கள் எல்லாம் ஒற்றை மனைவியுடன் ஏகபத்தினி விரதனாக வாழ்கிறார்களா? இஸ்லாமியர்கள் ஏழெட்டு மனைவிகளுடன் வாழ்கிறார்கள் என்று ஆதாரமின்றி பொய் பேச நாக்கு கூசவில்லையா? எதற்கு அவர்கள் மீது இவ்வளவு வன்மம், வெறுப்பு?

கதாகாலாட்ஷேப புலியாக வரும் சாய்ராம்... 'துண்டுச்சீட்டு பாத்து பேசுபவர்' என மறைமுகமாக தமிழக முதல்வர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் வசனம் வருகிறது.

ஐயா புண்ணியவானே... முக்கியமான பாய்ண்ட்களை மறக்கக்கூடாது என்பதற்காக குறிப்பெடுத்து வைத்து பேசுவதில் தவறில்லை. நீங்கள் எல்லாம் நாடகத்தின் வசன பேப்பரை படிக்காமல் நேரடியாகவா மேடையில் வந்து பேசி நடிக்கிறீர்கள்?

உங்கள் தலைவர் பல்லாண்டு காலமாக தன்னுடைய மொத்த உரையையும் டெலி ப்ராம்ப்டர் வைத்து பேசி வருகிறாரே... அதைவிட காமடி உலகத்தில் உண்டா? இந்த அழகில் தமிழக முதல்வரை நீங்கள் கிண்டல் செய்வது பயங்கர மொக்கையாக இருக்கிறது.

'பெருமாளே' முதல் பாகம் ஒரு எளிமையான குடும்பத்தின் பிரச்னைகளை பேசிய நல்ல நாடகம். மதுவந்தி உள்ளிட்டோர் நன்றாக நடித்திருந்தனர். 

ஆனால் இந்த இரண்டாம் பாகம் உருப்படியான திரைக்கதை, இயக்கம் இன்றி புஸ்வானம் ஆகிவிட்டது. 


பெருமாளே 2 - பட்டை நாமம். 

---------------------------------------------------